பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி: தோற்றமும் வளர்ச்சியும்!

##~##

மக்குத் தீபாவளி தெரியும். கொண்டாடுகிறோம். அதன் வரலாறு தெரியுமா? ஆதி முதல் இன்று வரை தீபாவளியின் சுருக்கமான வரலாற்றை அடுத்த வாக்கியம் முதல் காணலாம்.

கி.மு. 8000ஆம் நூற்றாண்டு - மனிதன் நெருப்பைக் கண்டுபிடிக்கிறான்.

கி.மு. 80ஆம் நூற்றாண்டு - இந்திய ராஜகுமாரனாகிய ராமன், இலங்கை மன்னன் ராவணனைத் தோற்கடித்துக் கொல்கிறான். இது இந்திய இதிகாச வரலாற்றின் முதல் போர்க் குற்றமாகி, பின்னாளில் தீபாவளி கொண்டாடப்பட வழிவகுக்கிறது.

கி.மு. 4ஆம் நூற்றாண்டு - ராமனின் வெற்றி பண்டிகையாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று துறவியான புனித தீபாவளியார் அன்றைய வட நாட்டு மன்னராகிய முதலாம் சந்திரகுப்தரிடம் கோரிக்கை விடுக்கிறார். சந்திரகுப்தர் மறுத்து அவரைக் கழுவேற்றுகிறார். தீபாவளியாரின் நினைவில் 'தீபாவளி’ என்ற பெயரிலேயே பண்டிகை நாளை சந்திரகுப்தர் அறிவிக்கிறார். பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும் என அனைத்துலக இந்திய மன்னர்கள் சங்கம் முடிவு செய்கிறது.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டு - அகல்விளக்கு கண்டுபிடிக்கப்படுகிறது. களிமண் சுரங்கங்கள் தோண்டப்பட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் அகல்விளக்குகள் இடம்பெறுகின்றன.

பேயோன் பக்கம்!

கி.மு.  2 ஆம் நூற்றாண்டு - சீனர்கள் பட்டாசுத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கவே, இந்திய மன்னர்களின் காத்திருப்பு முடிகிறது. பட்டாசுகளுக்கான முதல் ஆர்டர் அனுப்பப்படுகிறது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டு - சீனா ராக்கெட்களைக் கண்டுபிடிக்கிறது. மூன்றாம் சித்திரகுப்தர் இரண்டு ராக்கெட்களுக்கு ஆரியபட்டா, பாஸ்கரா எனப் பெயரிட்டு மகிழ்கிறார்.

 கி.பி. 716 ஆம் நூற்றாண்டு - பல நூற்றாண்டுகள் கழிகின்றன.

கி.பி. 17 ஆம் நூற்றாண்டு - மராட்டியப் பேரரசு தமிழ்நாட்டில் தீபாவளியை அறிமுகப்படுத்துகிறது.

1921 - மைசூர் அரண்மனையில் நடந்த ஒரு சமையலறை விபத்தில் மைசூர்பாகு கண்டு பிடிக்கப்படுகிறது.

1945 - அமெரிக்காவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 'ஆட்டம்பாம்’ கண்டுபிடிக்கிறார். சிங்கம் மார்க் பட்டாசுகள் உடனடியாக அதற்கு உரிமம் பெற்று இறக்குமதி செய்கிறது. தமிழகத்தில் அது 'ஆட்டோபாம்’ என்ற பெயரில் பிரபலமாகிறது.

1954 - தீபாவளி போனஸை உயர்த்தக் கோரி கல்கத்தாவில் வேலைநிறுத்தம்.

1966 - சோவியத் ரஷ்யா 'சோயஸ்’ ராக்கெட்களை உருவாக்குகிறது. அன்றைய இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, ரஷ்யாவுடனான தனது நட்புறவைப் பயன்படுத்தி ஸ்டாண்டர்ட் ஃபயர் வொர்க்ஸ் நிறுவனத்திற்கு ராக்கெட் உரிமம் பெற்றுத் தருகிறார்.

1967 - இந்திய அரசு தீபாவளிக்கான பாது காப்புக் குறிப்புகளை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுகிறது. இதனால் வட நாட்டில் தீபாவளி தீ விபத்துகள் குறைகின்றன.

1970 - அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டம் அமலுக்கு வருகிறது. ஆட்டம்பாம்களை அழிக்கும்படி இந்தியாவை ஐ.நா. கேட்டுக்கொள்கிறது. இந்தியா தீபாவளியைக் காரணம் காட்டி மறுக் கிறது.

1974 - சொந்தமாக ஆட்டம்பாம் தயாரிக்கும் இந்திய முயற்சி தோல்வியடைகிறது. யுரேனியம், புளூட்டோனியம் மற்றும் கனநீருக்குப் பதிலாக முறையே பயத்த மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்க்கப்பட்டு பயத்தலாடு உருவாக்கப்படுகிறது. பயத்தலாடின் சிற்பி என்று போற்றப்படும் விஞ்ஞானி ராஜா ராமண்ணா பத்ம விபூஷண் விருது பெறுகிறார்.

1980 கள் - வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி நாடெங்கும் பரவுகிறது. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன. தீபாவளி பற்றிய திரைப்படப் பாடல்களை தூர்தர்ஷன் ஆண்டுதோறும் தொகுத்து ஒளிபரப்புகிறது. நடிகர்கள் தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள்.

1990கள் - மும்பையிலிருந்து வந்த நடிகைகள் ('மும்பை இறக்குமதிகள்’) தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள். தாராளமயமாக்கத்தை அடுத்து புடவை, நகைக் கடைகள் புற்றீசலாகக் கிளம்புகின்றன.

1996  - நான் தலை தீபாவளி கொண்டாடுகிறேன். மாமனார் எனக்கு மோதிரம் வாங்கித் தருகிறார். பக்கத்து வீட்டில் 'வெப்பன்ஸ் கிரேடு ரசகுல்லா’ உருவாக்கப்படுகிறது.

1998 - இந்தியா இரண்டாம் முறையாகப் பரிசோதனை செய்து வெற்றிகரமாக சொந்த ஆட்டம்பாம்களைத் தயாரிக்கிறது. அவற்றை அழிக்குமாறு ஐ.நா. மீண்டும் வலியுறுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்த முடியாது என்று பா.ஜ.க. அரசு ஆட்சேபிக்கிறது.

2000 கள் - மும்பை நடிகைகள் தொடர்ந்து தீபாவளி கொண்டாடுகிறார்கள். தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளால் பட்டாசு விற்பனை குறைகிறது. பட்டாசு வெடிக்க நேரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. மென்பொருள் துறை வளர்ச்சியால் மேலும் அதிக இந்தியர்கள் வெளிநாடு களில் தீபாவளி அனுஷ்டிக்கிறார்கள்.

2008 - ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்க்குட் போன்ற சமூக வலைதளங்களில் கவிதைகளால் தீபாவளி வாழ்த்து சொல்லும் வழக்கம் தொடங்குகிறது. உள்ளூர் நடிகைகள் தீபாவளி கொண்டாடத் தொடங்குகிறார்கள்.

2010 - தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள்.

2011 - தீபாவளி வாழ்த்துகளையடுத்து முதல்முறையாக ஃபேஸ்புக் நிறுவனப் பங்கு விலை சரிகிறது. லட்சுமி வெடி யைத் தடைசெய்யக் கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம். பாம்பு மாத்திரையைத் தடைசெய்யக் கோரி புளூ கிராஸ் ஆர்ப்பாட்டம்.

2012 - உலகம் அழிவதற்கு முன்பு தனது கடைசி தீபாவளியைக் கொண்டாடுகிறது.

பொம்மைகள்

ன்னிடம் காட்டும்
பொம்மைகளை
என் மேஜை மீதே
விட்டுச் செல்கிறான்
செல்ல மகன்
தனக்குப் பிரதியாக
வைத்துப்போவது போல.
அல்லது
இந்த வயதிலேயே
இவ்வளவு மறதியா?

நண்பனின் கவிதை

பேயோன் பக்கம்!

ண்பன் எழுதிய கவிதை என
என் காதல் கவிதையைக் காட்டினேன்
உன் ரசிப்பால் ஊக்கப்பட்டு
இன்னும் நிறைய எழுதினேன்
முகம் சிவக்க ரசித்தாய்
உனக்குக் கவிதை பிடிக்கும்
அதைவிட என் கவிதைகளை.
அழகாய் எழுதும் நண்பனை
நேரில் பார்க்க விரும்பினாய்
நான்தான் எனது நண்பன்
என்றால் நம்ப மறுத்துவிட்டாய்
யாரிடம் சொல்லி
உன்னை நம்பவைக்க
எனக்கு நான் நண்பன் என்று?

கொல்லுதமிழ்

காலை நடை சென்றுகொண்டிருந்தபோது பரிச்சயர் ஒருவர் எதிரில் வந்தார்.

'என்ன சார், இவ்ளோ சீக்கிரமா

எங்க கௌம்பிட்டீங்க?' என்றேன்.

'முடி வெட்டப் போயிட்டிருக்கேன் சார்.'

'ஓஹோ! பேங்க் வேலைய விட்டுட்டீங்களா?'

'இல்ல சார், முடிய வெட்ட

சலூனுக்குப் போயிட்டிருக்கேன்!'

'அதத்தான் நானும் கேக்குறேன். சலூன்ல சம்பளம் கொறச்சலா இருக்குமே...'

'நான் சலூனுக்கு என் முடிய வெட்டிக்கப் போறேன் சார், வெளயாடுறீங்களா?'

'இப்படித் தெளிவா சொன்னா

புரிஞ்சுட்டுப்போவுது!'

சரிதானே? தமிழில் கொள்ளுதல், விடுதல் போன்ற வார்த்தைகள் எதற்கு இருக்கின்றன? பயன்படுத்தாமல் அடுத்தவனைக் குழப்பவா?

தோளுக்கு மேலே

தற்போது தடிமாட்டு நிலையில் உள்ள என் வாரிசு, சின்னப் பையனாக இருந்தபோது விருந்தினர்களை வெளியேற்றப் பயன்படுவான். 'அவங்க எப்ப கௌம்புறாங்கனு கேட்டுட்டு வாடா கண்ணா' என்றால் ஓடிப்போய், 'அங்கிள், நீங்க எப்ப கௌம்புறீங்க?' என்று தலைமை விருந்தினரிடம் அழகாகக் கேட்பான். அவர் தர்மசங்கடப்பட்டு இளித்தாலும் கிளம்பும் நேரத்தை 'ஓப்பனாக’ச் சொல்லிவிடுவார். நான் அதற்கேற்ப கவுன்ட் டவுன் டைமர் வைத்துக்கொண்டு செயல்படுவேன். இன்று பயல் தேறிவிட்டான். இப்போது அப்படிக் கேட்கச் சொன்னால், 'அங்கிள், நீங்க எப்ப கௌம்புறீங்கன்னு அப்பா கேக்குறாரு' என்கிறான். குழந்தைகள் வளர்ந்துவிடுகிறார்கள்!

- புரட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு