Published:Updated:

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

றுத்த முந்திரி, ஏலக்காய் டீ அல்லது டிகாஷன் காபி போன்ற எதுவுமே இல்லாமல், அரசின் உயர்நிலைக் கூட்டம் ஒன்று ஒரு நாள் முழுவதும் நடக்கும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள் அல்லவா? தமிழக அரசின் திட்டக் குழு கடந்த வாரம் நடத்திய கூட்டம் எனக்கும் அப்படித்தான் ஆச்சர்யத்தைத் தந்தது. முழுக்க சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவு களும் சுக்கு காபியும் பரிமாறப்பட்ட இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்... சிறுதானியங்களின் மீட்சி, தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தி - பயன்பாட்டை ஊக்குவிப்பது. திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தாஷீலா நாயர் ஐ.ஏ.எஸ். இதில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார். கூட்டத்துக்கு என்னையும் கூப்பிட்டு இருந்தார் கள். உபயம்: 'ஆறாம் திணை’. பேச்சோடு நிற்காமல், சிறுதானிய விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுப்பது முதல் ரேஷன் கடைகளில் அனைத்து வகை சிறுதானியங்களும்  கிடைப்பது வரையிலான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டால், இந்தக் கூட்டம் ஒரு மறு மலர்ச்சிக்கு வித்திடும். 'ஆறாம் திணை’க்கும் ஓர் அர்த்தம் கிடைக்கும்!

 பால் பொருட்கள் மேல் இந்தியர்களுக்கு இருக்கும் காதல் மேல் மரண அடியாக விழுந்து இருக்கிறது இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொல்லி இருக்கும் செய்தி. இந்தியாவில் விற்கும் பாலில் 70 சதவிகிதம் கலப்படம் என்கிறது அந்தச் செய்தி. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், பாலில் குழாய்த் தண்ணீரில் தொடங்கி சோப்புத் தண்ணீர், யூரியா, ஸ்டார்ச், ஹீபார்மலின் என என்னஎன்னவோ கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை

இது ஒரு பக்கம் இருக்கட்டும்... 'பால் சாப்பிட்டால் டாக்டர் செலவு குறையும்’ என்ற பிரசாரமே 'அக்‌ஷய திருதியைக்குத் தங்கம் வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும்’ என்று தங்கம் விற்பவர்கள் செய்யும் உட்டாலக்கடி போலத்தான் என்கின்றன பால் மீதான சமீபத்திய ஆய்வுகள். தாய்ப்பாலுக்குப் பின் மனிதனுக்கு எந்தப் பாலும் தேவை இல்லை என்கின்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள். 'அடடா! அப்படிப் பால் சாப்பிடலைன்னா, கால்சியத்துக்கு எங்கே போவது... புரதம் எப்படிக் கிடைக்கும்?’ என உரத்துக் கேட்கும் மரக்கறி விரும்பிகளுக்கு ஒரு செய்தி... ஒருவேளை உங்களுக்கு நல்ல பால் கிடைத்தால், சித்த வைத்தியம் சொல்வதுபோல, பால் பொருட்களை இப்படிச் சாப்பிடுங்கள்.

நீர் கருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பார் தம் பேருரைக்கின் போமே பிணி. அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை அதிக நீர் சேர்த்துப் பெருக்கியும் நெய்யை நன்கு உருக்கியும் உணவில் சேர்ப்பவன் பெயரைச் சொன்னாலே, நோய் தூரப் போகும்.

ஆறாம் திணை

உண்மையில், பாலைக் காட்டிலும் பல வகைகளில் உசத்தியானது மோர். மோர் ஒரு 'புரோபயோடிக்’ (Probiotic) பானம். நல்லது செய்யும் பல நுண்ணுயிர்களை மோர் உடலுக்குத் தரும். பால் பிடிக்காதவருக்கும் மோர் பிடிக்கும். புரதம், கால்சியம், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி6, பி12 எல்லாம் தந்து வயிற்றுப் புண்ணை வராது தடுக்கும்; அடிக்கடி வந்து தொல்லை தரும் வாய்ப்புண்ணுக்கும் முற்றுப்புள்ளிவைக்கும். வயிற்றுப்போக்கு நோய்க்கான சிகிச்சையில் மோர் ஒரு மருந்தும்கூட!

செல்போன் பயன்பாடு தொடர்பாக முக்கியமான ஓர் எச்சரிக்கை வந்து இருக்கிறது. அனுப்புநர்: அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம்.

'செல்போன் கதிர்வீச்சு ஒன்றும் செய்யாது. எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் மாதிரி இது டி.என்.ஏ-வை எல்லாம் சிதைக்கக் கூடியது கிடையாது. போதாக்குறைக்கு, செல்போன் கதிர் வீச்சைக் கட்டுப்படுத்தும் சர்வதேச ஆணையம் (International Commission on Non-Ionizing Radiation Protection) பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்பக் குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும். பயப்பட வேண்டாம்' என்கிற செல்போன் நிறுவனங்களின் பிரசாரத்துக்கு இந்தச் செய்தி உதை கொடுத்து இருக்கிறது.

''செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏ-வை ஒன்றும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், செல் திசுக்களை அது சூடாக்கக் கூடும். ஒருவேளை, மூளையில் கட்டி இருந்தால் அதைப் பெரிதாக்கக் கூடும்'' என்கிறது அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை. மேலும், ''செல்போனின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்சிதை மாற்றத்தில் மாற்றத்தை உருவாக்குகின்றன. அது நோயாகுமா என இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால், மூளைப் புற்றுக்கட்டி வரக்கூடிய வாய்ப்பு உண்டு'' என்கிறது.

கூடியவரை பேச்சைக் குறையுங்கள். அவசரத் தொடர்புகளுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துங்கள். தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு செல்போனைப் பயன்படுத்துங்கள்.  ஒருபோதும் மொட்டை மாடி சும்மாதானே இருக்கிறது; வாடகைக்கு விட்டால் மாதம் 5,000 ரூபாய் கிடைக்குமே என்று செல்போன் கோபுரங்கள் அமைக்க இடம் கொடுக்காதீர்கள்.

ஏனென்றால், சில சிதைவுகள் உடனுக்குடன்; சில சிதைவுகள் நாளையும் அதன் பின்னும்!

- பரிமாறுவேன்...