Published:Updated:

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

Published:Updated:

குறுங்கவிதைகள்

பேயோன் பக்கம்!

ழையை அறிவிக்கக்
கிளம்பிய தும்பி
என் வீட்டில் சிறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழுந்து பல முறை ஆனது
அறியாமல் சரியாக
இயங்குகிறது ரிமோட்.

படிக்கத் தெரியாத ஈ
புத்தகத்தைக் காலால்
தொட்டுப் பார்க்கிறது.

நடுத்தெருவில் ஏழு மாடுகள்
எண்ணி முடிப்பதற்குள்
கடந்த வண்டிகள் மூன்று.

காற்றும் இல்லை
வெளிச்சமும் இல்லை
பியூரிட் வழியே சலசலக்கும் நீர்.

இரவா லட்டும்
தொட்டால் உதிரும்.

சமையலறை இல்லாத வீடு

பேயோன் பக்கம்!

'இதுதான் ஹால். இங்கேதான் டி.வி. பார்ப்போம். அந்தப் பக்கம் இரண்டு படுக்கையறைகள் இருக்கின்றன. ஆனால், இரண்டிலும் படுக்கை இல்லை. தரையில் மெத்தை போட்டுத்தான் படுத்துக்கொள்வோம்... இது குளியலறை, கழிப்பறை தனித்தனியாக... இந்த அறை என்னுடையது. புத்தகங்களைப் பார்த்தாலே தெரியுமே. அந்த மேஜை, அந்தக் கணினிதான் என் வாழ்க்கை. இந்தப் புத்தகங்கள்கூடவும்... இதோ, இந்த அறை என் மகனுடையது. எவ்வளவு அலங்கோலமாகக் கிடக்கிறது பாருங்கள். எத்தனை வாட்டிகள் சொல்வது. இது... இது சமையலறை கிடையாது. என் சம்சாரத்தின் அறை. உண்மையில் எங்கள் வீட்டில் சமையலறையே கிடையாது. என் மிசஸ் வேண்டாம் என்றுவிட்டார்கள். சமைப்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் பெர்சனலானது என்று அவர் நம்புகிறார். தன் அறையிலேயே ஒரு மேடை அமைத்து அதற்கடியில் சிலிண்டர், அருகில் சிங்க் எல்லாம் வைத்துக் கொடுக்கச் சொன்னார். அவர் ஆசைப்படியே செய்துவிட்டேன். அலமாரிகளில் இருக்கும் டப்பாக்கள், பாத்திரங்கள் அனைத்தும் அவருடைய 'பெர்சனல் எஃபெக்ட்ஸ்’. சுவரெல்லாம் சாமி படம் பாருங்கள். மிகுந்த பக்தியுடையவர். இந்தப் பாத்திரம் கவிழ்க்கும் மேடையில் சின்னதாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வைத்துக்கொள்ளச் சொன்னேன். வேண்டாம் என்றுவிட்டார். எக்ஸாஸ்ட் ஃபேன், வால் மவுன்ட் ஃபேன்... வீட்டிலேயே காற்றோட்டமான அறை இதுதான்...'

காய்கறிப் பஞ்சாயத்து

பேயோன் பக்கம்!

னக்கு அவரைக்காய் பிடிக்கும்
ஆனால் முத்தல் என ஒதுக்கிவிடுவாய்
கத்தரிக்காய் உனக்குப் பிடிக்கும்
ஆனால் பழைய சுவை இல்லை என மறுப்பாய்
எனக்குப் பாவக்காய் உயிரென்றாலும்
உனக்கது பிடிக்காதென
நானதைச் சமைப்பதேயில்லை
சிப்ஸாக இல்லாத வாழைக்காய்
பொரியலாகிப் பயனில்லை என்பாய்
எனக்கு உருளைக்கிழங்கை வேகவைக்க
வரவில்லை என்பது உன் எண்ணம்
கரும்பலகையை அழிக்கத்தான்
கோவைக்காய் லாயக்கு என்கிறாய்
வெண்டைக்காயை வற்றலைப் போல்
ஆக்கிவிடுவதாகக் குற்றம்சாட்டுகிறாய்
மென்மையாக்கினாலோ, இப்படி ரோஜாப்பூ
போல் உதிரக் கூடாது என நிராகரிக்கிறாய்
பீன்ஸ், காராமணி குடும்பத்துடன் ஜென்மப் பகை
பூசணிக்காய், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் ஆகாது.
வெங்காயம், தக்காளி, கேரட், கோஸ் உனக்கு இனிப்பு
கீரை தின்கிறாயென தினமுமா கீரை செய்ய முடியும்?
மார்க்கெட்டில் இருப்பது இவ்வளவுதான்
உனக்குப் பிடித்தாற்போல் காய்கறிகள் வேண்டுமென்றால்
நீயே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக்கொள்.

சந்தேகம்

ன் அன்பின் மீதுனக்கு
சந்தேகம் வந்துவிட்டது
எனக்குத்தான்
உன் சந்தேகம் மீதின்னும்
அன்பு வரவில்லை.

அதிகாரம் படும் பாடு!

திகார பலம் உள்ளவர்கள் ட்விட்டரில் படும் பாட்டைப் பார்த்தால் இதயம் துடிக்கிறது. இவர்களது பிரத்தியேகக் கருத்துச் சுதந்திரம், சாலை விதிகளைப் போல் சர்வசாதாரணமாக மீறப்படுகிறது. ஆட்கள் கைதாகி இவர்களுக்குக் கெட்ட பேரைச் சம்பாதித்துக் கொடுக்கிறார்கள். இது அதிகாரத்தின் மீதான தாக்குதலன்றி வேறில்லை. ஆச்சரியக்குறி ஆக வேண்டிய இரு பெரிய மனிதர்களின் அரசியல், சினிமா வாழ்க்கைகள் இதனால் கேள்விக்குறி ஆகியுள்ளன. ட்விட்டர்வாசிகளுக்கு இந்த அநீதி தேவையா? இனிமேலாவது ட்விட்டர் பயனர்கள் தமது கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இனி, யார் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாதீர்கள். கண்ணியம் காறுங்கள். ரகசியப் பட்டப்பெயர் ஏதாவது வைத்துக்கொள்ளுங்கள். 'காவன்னா சீனா’ அல்லது வெறும் 'சீனா’ என்பதுபோல் சுருக்கி எழுதுங்கள். முக்கியமாக, இதில் சீனா இருப்பதைக் கருத்தில்கொள்ளுங்கள். ஏனென்றால், சில்லறைத் திருட்டுக்குக் கையை வெட்டும் புராதனத் தண்டனை இங்கேயும் வரப்போகிறதாம்.

வாசகர் கடிதம்

அன்புள்ள பேயோன் ஐயா அவர்களுக்கு,

நான் ஒரு புதிய வாசகன். விகடனில் நீங்கள் எழுதுவதைத் தொடர்ந்து உங்கள் பிற படைப்புகளை யும் தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை குறித்த என் பார்வையை உங்கள் எழுத்து அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது. உங்கள் மொழியில் நான் மயங்கிக்கிடக்கிறேன் ஓரமாக. நீங்கள் எழுதியிருக் கும் புத்தகங்கள் அடக்க விலையில் கிடைப்பதால் வாங்கியிருக்கிறேன். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள்தான் ஐயா வழிகாட்டி. நிறைய எழுதுங்கள். நன்றி.

இப்படிக்கு
பேயோன்

அன்பின் பேயோன்,

எனது படைப்புகளுக்கு அறிமுகம் கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தேடித் தேடிப் படிப்பது குறித்து மேலும் மிக்க மகிழ்ச்சி. மகத்தான எழுத்து என்பது நம் வாழ்க்கைப் பார்வையை அடியோடு மாற்றத்தான் செய்யும். அதில் பயப்பட ஒன்றும் இல்லை. என் மொழியில் மயங்குவதையும் நீங்கள் பாதுகாப்பாகவே செய்கிறீர்கள். நீங்கள் யாரும் சொல்லாமலே நான் நிறைய எழுதிக்கொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் மாற்ற முடியாது. உங்கள் கருத்துகள் அனைத்தும் எனக்கு உவப்பானவை. ஆனால், கடைசியில் ஒரு பெரிய தவறு நிகழ்ந்திருக்கிறது. வாசகர் பெயருக்குப் பதிலாக உன் பெயரையே எழுதிக்கொண்டுவிட்டாய். இனிமேல் ஜாக்கிரதையாக இரு!

அன்புடன்
பேயோன்

-புரட்டுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism