Published:Updated:

தெரு விளக்கு - மெளனம் கலை தமிழா !

பாரதி தம்பி படம்: கே.ராஜசேகரன்

தெரு விளக்கு - மெளனம் கலை தமிழா !

பாரதி தம்பி படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ஐ.டி. துறையினர் என்றதுமே நம் மனதில் ஒரு பிம்பம் எழும். நம்ப முடியாத சம்பளம், சொகுசான வாழ்க்கை, வார இறுதிக் கேளிக்கைகள், 'டோன்ட் கேர்’ வாழ்க்கைமுறை... என்ற இந்தச் சித்திரம் முழுப் பொய் இல்லை. ஆனால், முழு உண்மையும் இல்லை. அதே ஐ.டி. துறைக்குள் இருந்துகொண்டுதான், 'நம் சமூகத்தில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாதா?’ என்ற துடிப்புடன் செயல்படுகிறனர் பலர், இந்த 'சேவ் தமிழ்ஸ்’ இளைஞர்களைப் போல!

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத யுத்தம் இலங்கையைத் தாண்டி தமிழ்நாட்டு மண்ணிலும் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களைப் போராட்டக் களத்துக்குக் கொண்டுவந்தது. 2009 மே மாதம் ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்தபோது, தமிழ் மண்ணில் ஏராளமான புதிய அமைப்புகள் தோன்றின. அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பினர். பலர் ஈழத்துடன் தேங்கி நின்றுவிட, இவர்கள் முல்லைப்பெரியாறு, ராஜீவ் கொலை வழக்கில் மூவர் தூக்கு, காஷ்மீர், பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கூடங்குளம்... எனத் தொடர்ந்து செயல்படுகின்றனர். தனி நபர்களைத் தூக்கிப் பிடிக்காமல் பிரச்னையை மட்டுமே முன்னிறுத்தும் இவர்களின் செயல்பாடுகள் கவனிக்கத் தகுந்தவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு மாலை நேரத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்தோம். 'சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தங்களின் வரலாறு சொல்லத் துவங்கினார்.

''இங்கே இருக்கும் அதிகபட்சம் பேர் ஐ.டி. துறையிலும், வேறு பெரிய நிறுவனங்களிலும் வேலை பார்க்கிறோம். படித்து நல்ல வேலையில் இருக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். யாருக்கும் அரசியல் பின்னணி இல்லை. எல்லோரையும் போலப் படித்தோம், வேலைக்கு வந்தோம். 2008-ம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தம் எங்களைப் பதறவைத்தது. தினசரி 100 பேர், 200 பேர் செத்துக்கொண்டே இருந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் மரணம். மோசமான அந்த இலங்கைப் போரை நிறுத்தக் கோரி பல தரப்பினரும் போராடினார்கள். நாங்கள் பணிபுரிந்த ஐ.டி. துறையினர் மட்டும் வெளியில் வரவில்லை. 'நாமும் தமிழ்நாட்டில்தானே இருக்கிறோம்? ஏன் போராடவில்லை?’ என்று கேள்வி எழுந்தது. அப்படி நினைத்த ஆறு நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு டி-ஷர்ட் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம்.

தெரு விளக்கு - மெளனம் கலை தமிழா !

'போரை நிறுத்து’ என்று முன் பக்கமும் 'துப்பாக்கிகளுக்கு இதயம் இல்லை. உங்களுக்கு...’ என்று பின் பக்கமும் எழுதப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்தபடி டைடல் பார்க் முன்பு மனிதச் சங்கிலி அமைத்தோம். 300 பேர் வந்தார்கள். அதன் முடிவில் 20 பேர் ஒன்று சேர்ந்தோம். மேற்கொண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கும்போது, எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ஏனெனில், எங்களுக்கு எந்தவித அரசியல் பின்னணியும் கிடையாது. அங்கு ஒரு போர் நடக்கிறது. அதை நிறுத்த வேண்டும். இது மட்டும்தான் எங்களுக்குத் தோன்றியது. அதன் பிறகு ஈழம் தொடர்பாக நடந்த ஏராளமான கூட்டங்களுக்குச் சென்றோம். அப்போதுதான் இந்தப் போராட்டத்தின் வரலாறு எத்தனை நீண்டது என்பதும், அதற்கான தியாகங்கள், உயிர்ப் பலிகள், அரசியல்பற்றியும் புரிந்தது. போரின் போக்கு ஒவ்வொரு மாதமும் தீவிரம் ஆனது. இந்தியா உட்பட பல உலக நாடுகள் இலங்கை அரசை ஆதரித்தன. அந்த ஜியோ பாலிடிக்ஸ் அதிர்ச்சி அடையவைத்தது. ஜனநாயகம், மனித நேயம், நாகரிகம் குறித்த எங்களுடைய நம்பிக்கைகள் புரட்டிப்போடப்பட்டன. பிறகு, நாங்கள் 20 பேரும் கோயம்பேடு மார்க்கெட் அருகே இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அது வரைக்கும் எங்களுக்கு எந்தப் பெயரும் இல்லை. 'ஷிtஷீஜீ ஷ்ணீக்ஷீ... sணீஸ்மீ tணீனீவீறீs’ என நாங்கள் பயன்படுத்திய வாசகத்தை வைத்து எங்களை 'சேவ் தமிழ்ஸ்’ என்று அழைத்தனர். பிறகு, அதுவே அடையாளம் ஆனது!'' என்கிறார் செந்தில்.

'வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ என்ற பெயரில் இவர்கள் தயாரித்த ஆவணப்படம் முக்கியமானது. இலங்கை யுத்தத்தின் 60 ஆண்டு கால வரலாற்றை விவரிக்கும் படம் அது. ஆரம்பத்தில் ஆறு பேருடன் தொடங்கிய இவர்களது அமைப்பில் இப்போது செயற்குழுவில் 10 பேர், பொதுக்குழுவில் 30 பேர் இருக்கின்றனர். எல்லோருமே வேலை பார்க்கிறார்கள் என்பதால், தினசரி ஒரு மணி நேரத்தை ஏதேனும் ஒரு வகையில் அமைப்புக்காகச் செலவிடுகின்றனர்.

''பொதுவாக, ஐ.டி. துறையில் 'வீக் எண்ட்’ என்பதன் பொருள் வேறு. எங்களுக்கோ வீக் எண்ட்தான் முழு நேர வேலை. எங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். தற்போதைய நாட்டு நடப்புகள்குறித்து விவாதிக்கிறோம். இப்போது எந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும், கடந்த காலத் தவறுகள் என்ன, எதிர்காலத்தில் எப்படித் திருத்திக்கொள்வது என்பது குறித்தும் பேசுகிறோம். 'இலங்கையில செத்தா எனக்கு என்ன? கூடங்குளத்துல அடிச்சா எனக்கு என்ன?’ என்று பொறுப்பற்ற மனதுடன் இருக்கும் சக ஐ.டி. நண்பர்களிடம் பேசுகிறோம். 'எந்த வம்புதும்புக்கும் போகக் கூடாது. பேசாமப் போயிட்டு பேசாம வந்துரணும்’ என்று சொல்லிச் சொல்லியே நம்மை வளர்ப்பதால், பொதுப் பிரச்னைகளில் பங்கெடுப்பதுகூட 'வம்புதும்பு’ வகைக்குள் வந்துவிடுகிறது. தனி நபராக அப்படி ஈடுபட்டால், வம்புதும்பில்தான் முடியும். அதுவே, ஓர் அமைப் பாகச் சேர்ந்து செயல்படும்போது உண்மையான அக்கறையுடன் அச்சமின்றி இயங்க முடிகிறது!'' என்று துறுதுறுவெனப் பேசும் இளங்கோவன் சேவ் தமிழ்ஸின் செய்தித் தொடர்பாளர்.

ராமேஸ்வரம் மீனவர்களை அழைத்து வந்து சோழிங்கநல்லூரில் உண்ணாவிரதம் நடத்தினார் கள். காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேச அங்கிருந்து இருவரை அழைத்து வந்து பயிலரங்கு நடத்தி னார்கள். பேபால் நிறுவனம் தங்கள் ஊழியர் களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிக்கு சாதிப் பெயர்களைப் பயன்படுத்தியதை எதிர்த்து அந்த அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி, பெயரை மாற்றவைத்தனர். இந்த வரிசையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்குமான தூக்குத் தண்ட னையை எதிர்த்து இவர்கள் மேற்கொண்ட பிரசாரம் முக்கியமானது.

''பொத்தாம் பொதுவாக 'இவர்கள் நிரபராதி கள், குற்றமற்றவர்கள்’ என்று பேசி இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது. அங்கே 1.5 லட்சம் பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இங்கே அப்பாவிப் பெண் செங்கொடி உயிரை விட்டிருக்கிறார். இதைப் பேசினால் உடனே இவர்கள் ராஜீவ் காந்தி கொலையை முன்வைக்கிறார்கள். சரி, நீங்கள் 91-ல் இருந்து தொடங்கினால், நாம் 87-ல் இந்திய அமைதிப் படையில் இருந்து தொடங்குவோம். இன்று ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளி என்று சொல்வதற்கான காரணங் கள் அனைத்தும் இந்திய அமைதிப் படைக் கும் பொருந்துமா, பொருந்தாதா? இரண்டை யும் ஒப்பிட்டு 'போர்க் குற்ற வரலாற்றில் ராஜீவ் காந்தியும் ராஜபக்ஷேவும்’ என்று நாங்கள் நடத்திய கூட்டம் நல்ல வரவேற் பைப் பெற்றது!'' என்கின்றனர் ஒருங்கிணைப் பாளர் செந்தில் மற்றும் பரிமளா ஆகியோர்.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இவர்கள் கவனம் செலுத்துவது கூடங்குளம் பிரச்னையில். 'கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பில்’ சேவ் தமிழ்ஸும் ஓர் அங்கம். இது தொடர்பான இணையப் பிரசாரங்களில் இவர் களின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. அதுபோலவே கடந்த ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது சென்னையில் முக்கியமான அரங்கக் கூட்டம் ஒன்றையும் நடத்தினார்கள். ''பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை எல்லோரும் அரச வன்முறை என்று மட்டும் சொன்னார்கள். ஆனால், அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அப்படியே பின்னோக்கிப் போனால், இமானுவேல் சேகரன் கொலை, முதுகுளத்தூர் கலவரம் வரை போய் ஆராய வேண்டியுள்ளது. 2000-ம் ஆண்டுகளுக்குப் பிறகான உலகமயமாக்கச் சூழலில் இனிமேலும் வெட்டரிவாள், வேல்கம்பு வைத்து யாரும் யாரையும் ஒடுக்க முடியாது என்ற கட்டம் வருகிறது. வேறு என்ன செய்யலாம்? லாபி செய்து இருக்கும் அரசாங்கத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி போலீஸை ஏவிவிட்டு அடிக்கவிடுகிறார்கள். அதன் ஒரு பகுதிதான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு. திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தப் படுகொலைகள்குறித்து, ஆதிக்கச் சாதியினர் யாரும் வாய் திறக்கவில்லை. இரண்டையும் இணைத்து, 'முதுகுளத்தூர் கலவரம் முதல் பரமக்குடி படுகொலை வரை... ஆதிக்க சாதி மனநிலையும், மௌன வன்முறையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினோம்'' என்கிறார் ஜான்சன்.  

''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒன்று சேர்ந்தபோது, இப்போதைய நிலையை எட்டுவோம் என்று நினைக்கவில்லை. ஆனால், பிரச்னைகள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அதுவாக அழைத்துச் செல்கிறது. எதுவுமே இங்கு துண்டாக, தனியாக நடப்பது இல்லை. எல்லா செயல்களுக்கும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது என்பது புரிந்தது. ஈழப் போருக்கு 60 ஆண்டு கால வரலாறு, கூடங்குளத்துக்கு 20 ஆண்டு கால வரலாறு, இன்றைய பரமக்குடி கலவரத்துக்கு 50 வருட வரலாறு என... இன்று நடக்கும் ஒவ்வொரு செயலும் இந்த வரலாற்றுத் தொடர்ச்சியின் பகுதிதான். இன்று நாம் பெற்றிருக்கும் அனைத்து உரிமைகளும் இதன் வழியாகக் கிடைத்தவையே. வரலாறு நெடுகிலும் இடைவிடாமல் நடந்துகொண்டு இருக்கும் போராட்டத்தில் நாமும் இணைந்து கொள்ள வேண்டும். அப்படி அல்லாமல் எல்லாவற்றையும் மௌனமாகக் கடந்து செல்பவர்களைப் பார்த்து மார்ட்டின் லூதர் கிங் சொல்கிறார்: 'மனித குலத்தின் அவலம் என்பது சிலரின் காட்டுமிராண்டித்தனம் அல்ல; பலரின் மௌனம்’!''

பிரெட் அண்ட் ரோசஸ்!

கடந்த 2010-ம் ஆண்டு மார்ச்-8 பெண்கள் தினத்துக்கு 'நியூயார்க் முதல் திருப்பூர் வரை’ என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். ஐ.டி. துறையில், திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில், குடும்பத்தில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதுகுறித்த கூட்டம் அது. இந்த ஆண்டு 'பிரெட் அண்ட் ரோசஸ்’ என்ற தலைப்பில் நடந்த பிரசாரம் வித்தியாசமானது. பிரெட் அண்ட் ரோசஸ் என்பது மகளிர் தினம் உருவான வரலாற்றைக் குறிப்பது. 'உழைக் கும் பெண்களுக்கு உணவும் ரோஜாக் களும் வேண்டும்’ என்று பொருள். அதை நினைவுபடுத்தும் விதமாக, சேவ் தமிழ்ஸ் அமைப்பினர் தங்கள் அலுவலகங்களில் உடன் பணிபுரியும் பெண்களின் மேஜை களில் அவர்களை வரவேற்று ஒரு ரோஜா வும் இனிப்பும் வைத்தனர். 'உழைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்’ என்ற குறிப் பைப் பின்தொடர்ந்து மின்னஞ்சலுக்குச் சென்றால், மகளிர் தினம் உருவான வரலாறுகுறித்த வீடியோ இணைக்கப் பட்டு இருக்கும். 'இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது!’ என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism