Published:Updated:

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

Published:Updated:

சிறுகதை - ஆறுதல்

##~##

காலையில் வெறும் வயிற்றில் ஃபேஸ்புக் பார்க்காதீர்கள். எழுத்துலகவாதியும் குறிப்பாக இலக்கியவாதியுமான இஷ்டமித்திரனுக்கு (புனைபெயர்) ரத்த அழுத்தம் தொடர்பாக மருத்துவரின் அறிவுரை. அவர் மருத்துவர். அப்படித்தான் சொல்வார். செய்தித்தாளைக் கையிலெடுத்தால், நாடாளுமன்ற அமளி, சட்டமன்ற வெளிநடப்பு, கொலை, திருட்டு, 'கற்பழிப்பு’, செயின் பறிப்பு, வேலைவாய்ப்பு மோசடிக்காரர் பிடிபாடு, பெட்ரோல் விலை உயர்வு, சாக்கடை நீர் தேக்கத்தை எதிர்த்து காலனிக்காரர்கள் தர்ணா, புதிய ஏ.டி.எம். திறப்பு விழா, அரசு அதிகாரிகள் மாற்றல், ஹாலிவுட் நடிகையின் மில்லியன் டாலர் கிரகப் பிரவேசம், ஹங்கேரியிடம் ஹாக்கியில் தோல்வி என்று எல்லாம் அரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. குளிக்கப்போவதற்கு முன்பு ஃபேஸ் புக்கில்தானே கொள்ளை போகிறது. ரத்த அழுத்தத்திற்கு மருந்தைத் தின்றால் போயிற்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இ.மி-யின் (இஷ்டமித்திரன்) அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. இந்த மாதிரி புனைவுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்தாயிற்று என யாராவது இவருக்குச் சொல்லுங்களேன்!' இது இ.மி-யின் சிறுகதை ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட ஒரு நண்பருக்கு 'நெகிழ்நன் கவிஞா’ என்ற இளம் எழுத்தாளர் எழுதிய பின் னூட்டம். நெகிழ்நன் கவிஞா, கவிதை, சிறுகதை, மதிப்புரை, எழுதுபவர். சமகாலப் பின்னூட்ட எழுத்தாளர்களில் அதிகம் காணக்கிடைப்பவர். இஷ்டமித்திரனின் சமீபத்திய தலைவலிகளில் ஒருவர். மொழி ரசத்தில் தொப்பலாக நனைந்த தமது உருவகச் சிறுகதைகளுக்கு யார் ஃபேஸ்புக்கில் சுட்டி கொடுத்தாலும் நெகிழ்நன் அங்கு வந்து அதை ஒரு எத்து எத்திவிட்டுப் போகத் தவறுவதில்லை என்பதை இஷ்டமித்திரன் கவனித்தார். சொல்லப்போனால் நெகிழ்நன் இந்தச் சேவையை இன்னும் சிலருக் கும் செய்துவந்தார். ஆனால், இஷ்டமித்திரனுக்கு அது பற்றிக் கவலையில்லை. வாய்க்கால் தகராறு இல்லாமல் ஒருவன் வந்து இம்சிப்பதுதான் அவருக்கு எரிச்சலேற்படுத்தியது. இவனுக்கு எங்கே அரிக்கிறது? இவன் எதிர்க்கும் விஷயங்களைத்தானே நாமும் எதிர்க்கிறோம்? (என்று அவர் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.) பதிலடி கொடுத்தால் சண்டையாக வளரும் என்று கை மூடி மௌனியாக இருந்தார் இ.மி. போலி அடையாளம் தயாரிக்கக் கை துறுதுறுத் தது. ஆனால், இஷ்டமித்திர பந்துக்கள் எனப் படும் தமது ரசிகர்கள் அதைச் செய்யட்டும் என விட்டுவிட்டார்.

பேயோன் பக்கம்!

அவ்வகைப் பின்னூட்டங்களுக்குப் பின்பு நெகிழ்நனை ஓரிரு முறை இலக்கிய நிகழ்வுகளில் பார்த்தார் இஷ்டமித்திரன். ஒரு விழாவில் ஓர் அறிவுக்கொழுந்து ரொம்ப முக்கியமாக நெகிழ்நனை அறிமுகப்படுத்தினார். இஷ்டமித்திரன் தம்மை யாரோ கூப்பிட்டாற்போல் திரும்பிப் பார்த்து அங்கிருந்து விலகினார். நெகிழ்நன் வீடு திரும்பியதும் முதல் வேலையாக அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டார். 'விடுங்கள் தலை, இந்தப் பெரிய மனிதர்களே இப்படித்தான்' ரக பின்னூட்டங்கள் குவிந்தன. இஷ்டமித்திரன் அதையும் விடாமல் தேடிப் படித்தார். நிலைமை இப்படி இருக்க, இன்னொன்றும் நடந்தது.

இஷ்டமித்திரன் அடிப்படையில் ஒரு பிரபலம் என்பதால், மக்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிகளைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போனார்கள். அப்படிப் போடப்பட்ட சுட்டிகளை அவர் மேய்ந்துகொண்டிருந்தபோது ஒரு மின்னிதழ் இணைப்பு கண்ணில்பட்டது. அவர் மிகவும் விரும்பிப் படிக்காத 'விசை’ இணைய இதழில் இந்த மாதம் யார் எழுதியிருக்கிறார்கள் என்ற பட்டியலும் அதில் இருந்தது. 'பொத்தான்’ என்று நெகிழ்நன் கவிஞா ஒரு சிறுகதையைப் படைத்திருந்தார். இந்த ஆள் என்ன எழுதுகிறான் பார்ப்போம் என இஷ்டமித்திரன் மின்னிதழ் சுட்டியை க்ளிக் செய்து தமக்கு வேண்டிய சிறுகதையைச் சென்றடைந்தார்.

சிறுகதை இப்படி ஆரம்பித்தது: 'என்னவோ தெரியவில்லை, தினேசனுக்குச் சற்று காலமாக எல்லோரது நெற்றியிலும் குங்குமப் பொட்டு போல ஒரு பொத்தான் தெரிந்தது. அவன் தன்னைக் கண்ணாடியில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாகப் பார்த்துக்கொண்டான். நல்ல வேளையாக அவனது நெற்றியில் பொத்தான் எதுவும் இல்லை. பொத்தான்கள் இருக்க வேண்டிய இடம் சட்டையேஅன்றி நெற்றியல்ல என்று அவன் ஒருவாறாக நம்பத் தொடங்கி சில காலம் ஆகிவிட்டிருந்தது.'

பேயோன் பக்கம்!

தொடர்ந்து படித்த இஷ்டமித்திரனின் இதழ்களில் அரும்பிய புன்னகை, அவரது சகல பற்களின் இருப்பையும் உலகிற்கு அறிவித்த இளிப்பாக விரிந்தது. 'பூ! இவ்வளவுதானா இவன்! இந்தப் பத்தோடு பதினொன்றா என்னைப் பற்றிப் பெரிய வார்த்தைகளில் வசைகிறான்!’ என்று நினைத்துக்கொண்டார் இஷ்டமித்திரன். இப்போது அவருக்குக் கவிஞா மீது கிட்டத்தட்ட ஏமாற்றமே வந்துவிட்டது. நெகிழ்நன் இன்னும் என்னென்ன எழுதியிருந்தாரோ அவற்றையெல்லாம் தேடிப் படித்துப் புளகித்தார் அவர். 'இவனெல்லாம் இப்படித்தான் எழுத வேண்டும்!' என்று சொல்லிக்கொண்டார்.

இலக்கியக் கூட்டங்களுக்கு ஏது பஞ்சம்? இன்னொரு புத்தக வெளியீட்டு விழா வந்தது. வெளியான ஆறு புத்தகங்களில் ஒன்று நெகிழ் நனுடையது. இஷ்டமித்திரன் இன்னொரு புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்று அது பற்றிப் பேச அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் இருந்த சிம்மாசன மாடல் நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்த நெகிழ்நனின் அருகில் அமர்ந்தார் இஷ்டமித் திரன். 'என்ன நெகிழ்நன்! அருமை யாக எழுதுகிறீர்கள். இதே மாதிரி எழுதுங்கள்' என்றார்.

நடுத்தெருவில் பூகம்பம்

பேயோன் பக்கம்!

ஒரு பிரச்னையாகிவிட்டது. மனைவி, மகனுடன் பழகிய தெரு வழியே சென்று கொண்டிருந்தபோது 'சார்! சார்!' என்று யாரோ கூப்பிட்டார்கள். மூவரும் திரும்பிப் பார்த்தால், எனக்குத் தெரிந்த ஒரு வாட்ச்மேன். முன்பு ஒரு வங்கி ஏ.டி.எம்-மில் காவல் காத்தார். இப்போது அவர் அமர்ந்திருந்தது ஒரு மகளிர் விடுதியின் வாசலில் ஸ்டூல் போட்டு. 'கண்டுக்காமப் போறீங்களே சார்! இப்பல்லாம் ஆளையே பாக்க முடியிறதில்லியே?' என்றார். நின்று பேச நேரமின்றிப் புன்னகைத்துவிட்டு, நடையைத் தொடர்ந்தேன். 'லேடீஸ் ஹாஸ்டலுக்கு அடிக்கடி போவீங்களோ?' சொன்னது என் மனைவி என்று ஊகிக்க முடியாதவர்களுக்குத் திருமணம் ஆகியிருக்காது; குறைந்தபட்சம் என் மனைவியுடன். எனக்கு உடனே தொடைகள் நடுங்கத் தொடங்கின. நான் விளக்குவதற்குள் 'இப்ப ஏன் உங்களைப் பாக்க முடியிறதில்லியாம்? அடிகிடி வாங்குனீங்களா?' என்று மேலும் கேள்விகள். குரல் வேறு கைக்குப் பதிலாக ஓங்கிக்கொண்டிருந்தது. 'ஆட்டோ!' என்று ஒரு காலி ஆட்டோவை வழி மறித்து 'போயிக்கிட்டேரு... போயிக் கிட்டேரு' என்று சாலையில் வழுக்கிச் சென்றுவிட்டேன்.

காலப் பயணி

பேயோன் பக்கம்!

ஒரு பிரபல இயக்குநரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'ஒரு டிஸ்கஷன் இருக்கு. அரை அவர்ல வீட்டுக்கு வரீங்களா?' எனக் கேட்டார். வந்த லட்சுமியை விடுவேனா? டாணென்று 4.00 மணிக்கே அவர் வீட்டில் இருந்தேன். பிரச்னை என்னவென்றால், என்னை அழைக்கும் யோசனையே அவருக்கு 5.55-க்குத்தான் தோன்றியிருக்கிறதுபோல. 5.55 ஆகும் வரை அவர் வீட்டிற்கு வெளியே காத்திருந்தேன். வேறென்ன செய்ய?

சுயமொழி

•  நட்புத் துரோகிகளுக்கும் நண்பர்கள் உண்டு.

• நீ சிரித்தால் உலகமும் உன்னுடன் சிரிக்கும். நீ அழுதால் அவனவனுக்கு ஆயிரம் பிரச்னைகள்.

• தமிழன் என்று சொல்லடா! இன்னொரு முறை சொல்லடா!

• 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கண்ண தாசன். 'கண்ணதாசன் காரைக்குடி, பேர சொல்லி ஊத்திக் குடி' - தமிழ் சினிமா.

- புரட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism