Published:Updated:

தெரு விளக்கு

புத்தகத் தாத்தா!பாரதி தம்பி, படங்கள் : பா.காளிமுத்து

தெரு விளக்கு

புத்தகத் தாத்தா!பாரதி தம்பி, படங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
##~##

'கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்ற முதுமொழியை இவருக்காக மாற்றலாம். இவர் படித்தது 2-ம் வகுப்பு. இவரது உதவியால் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்துக்கும் மேல்.

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் தமிழகத்தின் வேறு பல கல்லூரிகளிலும் தோளில் ஒரு ஜோல்னா பை, இரண்டு கைகளிலும் புத்தக மூட்டையுடன் முதுமையின் அழகு மிளிர இவர் நடை போடுவதைப் பார்க்கலாம். மாணவர்கள் 'புத்தகத் தாத்தா... புத்தகத் தாத்தா’ என்று சூழ்ந்துகொள்வார்கள். தன் வாழ்நாளைப் புத்தகங்களுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டு இருக்கும் 72 வயது முருகேசன், தன் செயலுக்குரிய சிறு அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் பிறந்தது மதுரை. அலங்காநல்லூர் பக்கம் குமாரம் தண்டலைனு ஒரு கிராமம். எங்க அம்மாவுக்கு மொத்தம் 10 பிள்ளைங்க. நான் ஒன்பதாவது ஆளு. அப்பா சீக்கிரமே இறந்துட்டார். பிள்ளைகளை வெச்சுக்கிட்டு அம்மாவுக்கு ரொம்ப சிரமம். ஒண்ணும் வருமானம் இல்லை. ரெண்டாம் வகுப்புக்கு மேல நானும் பள்ளிக்கூடம் போகலை. ஆளாளுக்குக் கிடைச்ச வேலையைச் செய்வோம். எனக்கு 14 வயசு இருக்கும்போது குடும்பத்தோட திண்டுக்கல்லுக்குப் பஞ்சம் பொழைக்கப் போனோம்.

தெரு விளக்கு

அங்கே ஒரு மளிகைக் கடையில் நாலஞ்சு வருஷம் வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு, என் மூத்த பையன் இறைமணி பேர்ல தனியா கடை போட்டேன். மளிகைச் சாமான், பழைய பேப்பர் வாங்குறது எல்லாம் பண்ணுவேன். நாள் முழுக்கக் கடையிலதான் வேலை. ஊரைச் சுத்திக் கடன். என்ன செய்யிறதுனு தெரியாது. கடைக்கு வர்ற பழைய பேப்பர்ல எழுதியிருக்கிறதைப் படிப்பேன். சிலது மனசுக்கு ஆறுதலா இருக்கும். அது அப்படியே பழக்க மாகிப்போச்சு. வர்ற பழைய பேப்பர்ல ஏதாவது புத்தகம் மாதிரி இருந்துச்சுன்னா, அதை மட்டும் எடுத்துத் தனியா வெச்சிருவேன். எதுக்குனு தெரியாது. ஆனா, யாருக்காச்சும் பயன்படும்னு எடுத்துவைப்பேன்.

நிறைய ஆசிரியர்கள் என் கடைக்கு வந்துபோவாங்க. அவங்க அந்தப் புத்தகங்களில் அவங்களுக்குப் பிடிச்சதை

தெரு விளக்கு

எடுத்துட்டுப் போவாங்க. படிச்சவங்ககூடப் பழகுறதும், பேசுறதும் என் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. கடைக்கு 'இறைமணி’ங்கிற பேர் வித்தியாசமா இருக்கேனு என்கிட்ட கேப்பாங்க. என் மத்த பிள்ளைங்க பேர், இறைராணி, இறைமலர், இறைதாசன்னு ஒண்ணுபோல வெச்சிருந்தேன். அதைக் கேட்டதும் இன்னும் நெருக்கமா பழகுவாங்க. இப்படியே நிறைய ஆசிரியர்கள் அறிமுகம் ஆனாங்க. கடையைச் சாத்தின பிறகும் அவங்ககூட உட்கார்ந்து பேசிட்டு இருப்பேன்.

அந்த ஆர்வம் அப்படியே வளர்ந்து எங்கேயாவது கருத்தரங்கம், சொற்பொழிவு, தமிழ் மாநாடு, பட்டிமன்றம் நடந்தா கிளம்பிப் போயிருவேன். அப்படிப் போனதுல திண்டுக்கல்லைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்னு ஒரு ஃபாதர் எனக்கு அறிமுகம் ஆனார். அப்போ என்கிட்ட நிறைய புத்தகங்கள் இருக்குனு அவர்கிட்ட சொன்னேன். 'அதைவெச்சு என்ன பண்றீங்க?’னு கேட்டார். 'என்ன பண்றதுனு தெரியலை. ஆனா இருக்கு’னு சொன்னேன். அதுக்குப் பிறகு அவர்தான் நிறைய கல்லூரிகளுக்கு, மாணவர்களுக்கு புத்தகங்களைக் கொடுத்துவிடச் சொல்வார். சந்தோஷமா போய் கொடுத்துட்டு வருவேன். அப்படிப் போனதுல 1990-ல மதுரை யாதவா கல்லூரிக்கு வந்தேன். நான் புத்தகப் பையோட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்துட்டு அங்கே கோதண்டம்னு ஒரு ஆசிரியர் விசாரிச்சார். விவரம் சொன்னதும் சுசீலா கோபாலகிருஷ்ணன்னு பி.ஹெச்டி. பண்ற ஒரு பொண்ணுக்குப் புத்தகங்கள் கொடுக்கச் சொன்னார். கொடுத்தேன். அவங்கதான் என்கிட்ட புத்தகம் வாங்கி பி.ஹெச்டி. பண்ண முதல் ஆள். அவங்க தன்னோட ஆய்வுக் கட்டுரையில் என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லியிருந்தாங்க. நான் வெறும் ரெண்டாம் வகுப்புப் படிச்ச ஒரு ஆள். என் பெயர் ஒரு பி.ஹெச்டி. ஆய்வேட்டில் வந்ததைப் பார்த்துட்டு, எனக்கு அளவில் லாத சந்தோஷம்!''-வெள்ளந்தியாகப் பேசுகிறார் முருகேசன்.

இவர் பழைய புத்தகக் கடையை மூடியபோது மீதமான பழைய நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களை இன்னும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கிறார். அது போக, இத்தனை ஆண்டுகளில் இவர் சிறுகச் சிறுக வாங்கிச் சேமித்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரு நூலகம் அளவுக்கு வைத்திருக்கிறார். அனைத்தும் ஆய்வு நூல்கள். இந்த நூல்கள் உதவியுடன் ஒரு வருடத்துக்குச் சுமார் 100 பேர் வீதம் கடந்த 20 ஆண்டுகளில் குறைந்தது ஆயிரம் பேர் பி.ஹெச்டி. பட்டம் பெற்றுள்ளனர்.

''1990-ல் மனைவி இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகும் ரெண்டு, மூணு வருஷம் கடையை நடத்த போராடிப் பார்த்தேன். ஒண்ணும் ஒப்பேறலை. 'யாவாரம் பண்ற சாமர்த்தியம் நமக்கு வராது’னு 95-ல கடையை மூடிட்டேன். மிச்சம் இருந்த புத்தகங்களை மட்டும் பாதுகாப்பா மூட்டை கட்டி வீட்டுல வெச்சிருந்தேன். அப்போ பிள்ளைங்கள்லாம் ஓரளவுக்கு சொந்தக் கால்ல நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னை நம்பி யாரும் இல்லை. எனக்குப் புத்தகங்கள்தான் பெரிய மன ஆறுதலைக் கொடுத்துச்சு. அதனால முழுக்க அதே வேலையா திரிய ஆரம்பிச்சேன்.

எங்கேயாச்சும் ஒரு கல்லூரியில் ஒரு பேராசிரியர் புத்தகம் கேட்டிருப்பார். அவருக்குத் தேவையானதைத் தேடிப் பிடிச்சு எடுத்துட்டுப் போய்க் கொடுப்பேன். அவர் அங்கே உள்ள மற்ற பேராசிரியர்களையோ, ஆய்வு மாணவர்களையோ அறிமுகப்படுத்துவார். அவங்க தங்களுக்குத் தேவையான நூல்களைக் கேட்பாங்க. குறிச்சு வெச்சுக்கிட்டு வருவேன். நமக்கு அவ்வளவா படிப்பு கிடையாதுன்னாலும் அனுபவத்துல எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்னு தெரியும். அதனால் தலைப்பைச் சொன்னா போதும்...

தெரு விளக்கு

முடிஞ்சா வாங்கிருவேன். இல்லேன்னா, எந்த நூலகத்துல இருக்கோ அதில் உறுப்பினராகி புத்தகத்தை எடுத்துவந்து தருவேன். பஸ் செலவுக்கும் டீ செலவுக்கும் காசு தருவாங்க... எனக்கு அது போதும். நான் பணம் சம்பாதிக்க இதைச் செய்யலை. புத்தகங்கள்கூடப் புழங்குறது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குறதால சந்தோஷமா செய்ய ஆரம்பிச்சேன்.

2000-ம் வருஷத்துக்குப் பிறகு சீஸன் டிக்கெட் எடுத்துக்கிட்டு தினமும் திண்டுக் கல்ல இருந்து கிளம்பி மதுரைக்கு வந்திருவேன். தினசரி ஏதோ ஒரு கல்லூரிக்குப் போய் புத்தகங்கள் கொடுப்பேன். இப்பவும் தமிழ்நாடு முழுக்கப் போறேன். குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நிறைய ஆய்வாளர்கள் இருக்காங்க. அங்கே போவேன். மதுரை, வேலூர், திண்டுக்கல், சென்னை... எல்லா இடங்களுக்கும் போறேன். ஆனா ஒண்ணு... புத்தகம் கொடுத்துட்டு அப்படியே விட்டுட மாட்டேன். அவங்க வேலை முடிஞ்சதும் திரும்ப வாங்கிட்டு வந்துருவேன். மழையோ, வெயிலோ பத்து தடவை போன் பண்ணி, அலைஞ்சு திரிஞ்சு புத்தகத்தை வாங்கிருவேன். அப்பதானே அடுத்த ஆளுக்குக் கொடுக்க முடியும்?'' என்கிற முருகேசனை, 'புத்தகத் தாத்தா’ என்றும், 'திண்டுக்கல் தாத்தா’ என்றும் அழைக்கிறார்கள் மாணவர்கள். ஆனால், இவர் இப்போது வசிப்பது மதுரையில்.  

இவரிடம் புத்தகம் பெறுவது அதிகபட்சம் தமிழ் ஆய்வு மாணவர்கள்தான். 'இயல் எப்படிப் பிரித்திருக்கிறோம்?’ என்று சொல்லிவிட்டாலே அதற்கேற்ற வகையில் புத்தகங்களைச் சேகரித்துத் தந்துவிடுகிறார். சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், தமிழ் இலக்கண மரபுகள், நவீன இலக்கியம் என எத்தனை சிக்கலான தலைப்பாக இருந்தாலும் புத்தகங்களைக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார். தற்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் மா.திருமலை, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சந்திரா போன்றவர்களுக்கும் இவர் கொடுத்த புத்தகங்கள் உதவியிருக்கின்றன.

''சாராயம் குடிக்கிறவங்களுக்கு அதுல போதை இருக்குறது மாதிரி எனக்கு இந்தப் புத்தகங்கள் மேல போதை. கையில கொஞ்சம் காசு கிடைச்சா ஏதாவது ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போய் மொத்தமா வாங்கிக் குவிச்சிருவேன். 125 வருஷம் பழமையான புத்தகங்கள்லாம் என்கிட்ட இருக்கு!'' என்கிற முருகேசன் தாத்தா, இல.கந்தசாமி என்பவர் எழுதிய 'சித்திரைக்கனி’ என்ற புத்தகம்தான் தனக்குப் பிடித்தமானது என்கிறார்.  

''நான் வெறுமனே ரெண்டாங்கிளாஸ் படிச்சவன். ஆனா, எத்தனையோ பேர் தன்னோட ஆய்வுக் கட்டுரையை எனக்குச் சமர்ப்பணம் செஞ்சிருக்காங்க. அதைப் பார்க்கும்போது மனசுக்கு ஒரு சந்தோஷம். எனக்குன்னு குறிக்கோள் எதுவும் இல்லை. இதையே கடைசி வரைக்கும் செய்யணும். உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் இந்தப் புத்தகத் தாத்தா எல்லா கல்லூரிகளுக்கும் வந்துகிட்டே இருப்பேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism