Published:Updated:

''எம்.ஜி.ஆர்-க்குனு எழுதுன கதை இன்னமும் இருக்கு!''

''எம்.ஜி.ஆர்-க்குனு எழுதுன கதை இன்னமும் இருக்கு!''

தன் வீட்டு வாசல் முன்பு தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்டவர், 12 முறை தேர்தல்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோற்றாலும் டயர்டு ஆகாமல் தொடர்ந்து போட்டியிடுபவர், சைக்கிள், பைக் என்று எல்லா வாகனங்களின் மேலும் ஒரு குடையைப் பொருத்திக்கொண்டு ஊருக்குள் உலா வருபவர் ...  இந்தத் தகுதிகள் போதாதா டைம்பாஸுக்குப் பேட்டி எடுக்க?

தஞ்சையில் வீட்டு வாசலில் இருந்த போர்டே செம டெரராக இருந்தது. 'குறித்த நேரத்தில் குறைந்த செலவில் சினிமா, நாடகம், கதை, வசனம், பாடல்கள் எழுதித் தரப்படும். - தஞ்சை கே.எஸ்.மன்னர், புதுப் பாடல் ஆசிரியர்’. இன்னொரு போர்டில், 'சோழ மன்னர், ஹோமியோபதி மருத்துவம்’ என்று எழுதி, 'திருமணம் ஆகி 10 வருடங்களாகக் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கேரன்டி’ என்றது. தனக்குத்தானே சோழ மன்னர் பெயர் சூட்டிக்கொண்ட இவரது உண்மையான பெயர் கனகராஜா.

''எம்.ஜி.ஆர்-க்குனு எழுதுன கதை இன்னமும் இருக்கு!''
''எம்.ஜி.ஆர்-க்குனு எழுதுன கதை இன்னமும் இருக்கு!''

''எம்.ஏ. ஹிஸ்டரி படிச்சுட்டு கவர்மென்ட் ஆபீஸ்ல வொர்க் பண்ணேன். ஆனா, மக்களுக்கு ஏதாச்சும் நல்லது செய்யணும்னு அரசியலில் குதிச்சுட்டேன். கங்கை - காவேரி¢ இணைப்புத் திட்டம்னு ஒண்ணை வெளியிலவிட்டேன். அதை எப்படியோ கேள்விப்பட்ட ஜெயலலிதா, என்னைப் பேசக் கூப்பிட்டாங்க. அது ஒரு காலம். ப்ச், சி.எம் ஆனதுக்குப் பிறகு இப்பல்லாம் கண்டுக்கவே மாட்றாங்க. (அய்யய்யோ!). அந்தத் திட்டம் மட்டும் நிறைவேறியிருந்தா, தமிழ்நாட்டு மக்களுக்குத் தண்ணிக்கும் கரன்ட்டுக்கும் பிரச்னையே இருந்திருக்காது. ஆனா, இந்தத் திட்டம் அப்துல் கலாமுக்கும் தெரிஞ்சுபோய் லெட்டர் போட்டு, அவர் எனக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டாரு.  இப்ப மட்டும் இல்லை, அந்தக் காலத்திலேயே ஜி.டி.நாயுடுவும் நானும் அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஸ். பொய் பேசினாக் கண்டுபிடிக்கிற கருவி ஒண்ணை நான் கண்டுபிடிச்சேன். ஆனா 'இதால நிறைய சிக்கல் வரும் ராஜா’னு ஜி.டிநாயுடு சொன்னதால நிறுத்திட்டேன்'' என்று விடாமல் இவர் பேசுவது உண்மையா, பொய்யா என்றே தெரியவில்லை.

''சார், கொஞ்சம் கேப் விடுங்க. ஆமா, தேர்தலில ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவிடுவீங்களாமே, அதைக் கொஞ்சம் சொல்லுங்க'' என்றேன்.

''கங்கை - காவேரி¢ நதிகளை இணைப்பேன். இயற்கையிடம் இருந்து மக்களைக் காக்க புயல், பூகம்பத்தை நிறுத்துவேன். வீட்டுக்கு வீடு பனங்கள், தென்னங்கள் ஆண், பெண் இருவருக்கும் கொடுப்பேன்'' என்று மனப்பாடமாக ஒப்பித்தார். ''நீங்க சொல்ற வாக்குறுதிகளைப் பார்த்தா, ஒபாமாவே வாடகை சைக்கிள் எடுத்துட்டு வந்து ஓட்டு போடுவார் போல இருக்கே. அப்புறம் ஏன் நீங்க ஜெயிக்கலை?'' என்று கேட்டேன்.

ரெண்டு நிமிடம் என்னை உற்றுப்பார்த்தவர், ''இந்த மக்களுக்குத்தான் நல்லவங்க யாருன்னே தெரியாதே. ஆனாலும் எலெக்ஷன்ல நிற்கிறதைவிட மாட்டேன்'' என்றவர் குடை மேட்டருக்கு வந்தார்.

''அந்தக் காலத்துல வித்தியாசமா எதாவது பண்ணணும்னு நினைச்சு, முதல்ல சைக்கிள்ல குடை செட் பண்ணேன். அது மக்களுக்குப் பிடிச்சுப்போனதால பைக், கார்னு குடையை கன்டினியூ பண்ணிட்டேன். 'புதிய உலகம்’னு ஒரு படம் எடுத்தேன். நான்தான் ஹீரோ. புஷ்பானு ஒரு பொண்ணு ஹீரோயின். ஒரத்தநாடுதான் ஷூட்டிங் ஸ்பாட். ஆனா, படம் பாதியிலேயே ஸ்டாப் ஆயிடுச்சு.  எம்.ஜி.ஆர்-க்குனு எழுதுன கதை அப்படியே இருக்கு. நம்ப விஜய் தம்பி மட்டும் ஓ.கே. சொன்னா, ஷூட்டிங்  ஸ்டார்ட் பண்ணிடலாம்'' என்றார்.

விட்றாதீங்க விஜய்!

- ச.மஞ்சுளா, படங்கள்: கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு