Published:Updated:

முகம்

பி.சி.ஸ்ரீராம் (ஒளிப்பதிவாளர்)எஸ். கலீல்ராஜாபடம் : ஸ்ரீராம் சந்தோஷ்

முகம்

பி.சி.ஸ்ரீராம் (ஒளிப்பதிவாளர்)எஸ். கலீல்ராஜாபடம் : ஸ்ரீராம் சந்தோஷ்

Published:Updated:
##~##

பி.சி.ஸ்ரீராம்... சுருக்கமாக பி.சி. சென்னைக்கு சர்வதேச பெருமை சேர்த்த ஒளி விஞ்ஞானி. ''என் ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம் மாதிரி இருக்கணும்!'' என்று சொல்பவரின் பெர்சனல் முகம் இங்கே...

• பி.சி.ஸ்ரீராமுக்கு ஒளிப்பதிவு உலகின் மீது கவனம் பதிய அவர் தாத்தாவே காரணம். பேரனுக்கு ஆசை ஆசையாக அவர் வாங்கிக்கொடுத்த 8 எம்.எம். கேமராதான் பின்னாளில் இந்தியாவுக்குத் தலைசிறந்த ஒளிப் பதிவாளரைக் கொடுத்தது. இன்றும் அந்த கேமராவைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் பி.சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• காலையில் டிபன் சாப்பிடும் வழக்கம் கிடையாது. படப்பிடிப்போ வீடோ எங்கு இருந்தாலும் காலையில்  ஆப்பிள்தான் உணவு.  

• பயணங்களின்போது எளிய மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையைப் படம் எடுப்பார். அந்த நேரம் கையில் என்ன கேமரா இருக்கிறதோ, அதைவைத்து எடுப்பார். சமயங்களில் செல்போன்கூட கேமராவாக மாறும். இப்படி எடுப்பதை அவரது உதவியாளர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். அந்தப் படங்களைக் கண்காட்சி வைக்கக் கேட்டபோது, மறுத்துவிட்டார்.

• பி.சி-க்கு அம்மா சென்டிமென்ட் அதிகம். அவர் ஆரம்ப காலங்களில் பயன்படுத்திய கேமராக்கள், மீட்டர்களை இன்றும் அவரது அம்மா சாந்தாவிடம் கொடுத்துப் பாதுகாக்கிறார்.

முகம்

• கேமராக்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார். இன்ன பிராண்ட்தான் பிடிக்கும் என்றெல்லாம் கிடையாது. அநேகமாக அத்தனை பிராண்ட் கேமராக்களையும் கையாண்டிருப்பார்.

• இன்னோவா வைத்திருந்தவர் இப்போது ஃபார்ச்சூனர் வாங்கியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநருக்கு விடுப்பு கொடுத்துவிடுவதால், அன்றைக்கு மட்டும் செல்ஃப் டிரைவிங்.

• கறுப்பு குர்தா, கறுப்பு ஃபிரேம் கண்ணாடி... இதுதான் பி.சி-யின் அடையாளம். ஆனால், சமீபமாக கலர்ஃபுல் சட்டைகள் அணிகிறார். வீட்டில் ஓய்வாக இருக்கும்போது மட்டும் வேட்டி.

• பி.சி. பற்றி பெட்டிச் செய்தியோ, அட்டைப் படக் கட்டுரையோ எந்தப் பத்திரிகையில் வந்தாலும், அதைச் சேகரித்துவைப்பார் அவரது அம்மா சாந்தா. அப்படிச் சேமித்த செய்திகளை இப்போது ஸ்கேன் செய்து சாஃப்ட் காப்பி ஆக மாற்றிக்கொண்டு இருக்கிறார்.

• தன் உதவியாளர்களைப் படப்பிடிப்புத் தளங்களில் லைட்டிங் செட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தச் சொல்லாமல், காஸ்ட்யூம் கன்டினியூட்டி, ஆர்ட் செட்டிங், மேக்கப் என ஓர் இயக்குநர் கவனத்தில் கொள்ள வேண்டிய அனைத்து வேலைகளிலும் கவனம் பதிக்கச் சொல்வார்.

• இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் பால்கி, விளம்பரப் பட இயக்குநர் ஜெயேந்திரா என பி.சி-யின் நெருக்கமான  சினிமா நண்பர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

• தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் பேசத் தெரியும். ஆனால், பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தன் உதவியாளர்களுக்கு அதுதான் வசதி என்பதாலேயே.

• ஜாலி மூடில் இருந்தால் பைக் பில்லியனில் அமர்ந்து ரவுண்ட் அடிப்பார். அப்படி தன்னை பைக் ரவுண்ட் அழைத்துச் செல்பவர்களுக்கு சாக்லேட் வாங்கித் தருவார். மூட் அவுட் என்றால், உடனே ஒரு கோப்பை காபி கேட்பார்.

• நிறையப் படங்கள் பார்ப்பார். பி.சி-க்கு மிகவும் பிடித்த படம் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’.

• கோயில் அருகிலேயே படப்பிடிப்பு நடந்தாலும், கோயிலுக்குச் செல்லும் பழக்கம் கிடையாது. மனைவி சீதா கோயிலுக்குச் செல்லும்போது மட்டும் உடன் செல்வார்.

• கீ செயின் லைட், டார்ச் லைட், எல்.இ.டி. லைட் என எங்கே வித்தியாசமான விளக்குகள் கண்ணில்பட்டாலும் அதை வாங்கிக்கொள்வார். அந்த விளக்குகளை எப்படி, எந்தக் காட்சிக்குப் பயன்படுத்தலாம் என்று ஓய்வு நேரங்களில் யோசித்துவைத்து, வாய்ப்பு கிடைக்கும் சமயம் அதைப் பயன்படுத்துவார்.