Published:Updated:

பேயோன் பக்கம்

பேயோன் பக்கம்

பேயோன் பக்கம்

பேயோன் பக்கம்

Published:Updated:

பாட்டி வடை சுட்ட கதை!

##~##

ந்தக் கதையை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காகத் திரைக்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் சில அத்தியாயங்களிலிருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 எபிசோட் 1

ஒரு காடு. அங்கு ஒரு பாட்டி வடை சுட்டு விற்கிறார். அந்தக் காட்டின் விலங்குகள், பாட்டியின் வாடிக்கையாளர்கள். ஒரு காக்கை சிறையிலிருந்து விடுதலையாகி காட்டுக்குத் திரும்பி வருகிறது. அதைக் கேட்டு ஒரு நரி அதிர்ச்சி அடைகிறது.

எபிசோட் 2

காக்கையின் குற்றப் பின்னணியைக் காட்டுகிறோம். காக்கைக்கும் நரிக்கும் முன்பகை உள்ளது. நரி மனதில் ஃப்ளாஷ்பேக்: நரி தன் மகளின் (அதுவும் நரிதான்) திருமணத்திற்காக வைத்திருக்கும் நாக ரத்தினத்தை, ஒரு வடையில் ஒளித்துவைக்கிறது. நரியின் கடைசி மகனான ஓர் இளம் உதவாக்கரை நரி அதை ஒளிந்திருந்து பார்க்கிறது.

பேயோன் பக்கம்

எபிசோட் 3

நரியின் மகளும் காக்கையும் ரகசியமாகக் காதலிக்கின்றன. இது நரியின் மகனுக்குத் தெரியவருகிறது. இளம் நரியும் அதன் தோழர்களும் ரவுடிகள் என்ப தைக் காட்டுகிறோம். தங்கையின் காதலை அப்பா விடம் வத்திவைக்கிறது மகன் நரி. குடும்பத்தில் பிரச்னை வெடிக்கிறது.

எபிசோட் 4

நாகரத்தினத்தைத் திருடித் தா, உன் காதலுக்கு என் அப்பாவைச் சம்மதிக்கவைக்க நான் உதவுகிறேன் என்று காக்கையிடம் மகன் நரி பேரம் பேசுகிறது. காக்கை காறித் துப்பிவிட்டுப் போகிறது. ஆனால், மகள் நரி அண்ணனின் பேரத்திற்கு ஒப்புக்கொள்ள, காக்கையை வற்புறுத்துகிறது. காக்கை வேறு வழி இன்றி ஒப்புக்கொள்கிறது.

எபிசோட் 5

காக்கை வடையோடு நாகரத்தினத்தைத் திருடுகிறது.

எபிசோட் 6

நாகரத்தினம் காணாமல்போனதால் நரி கோபப் படுகிறது. தாய் நரி அழுகிறது.

எபிசோட் 7

மகன் நரி தன் கைக்கு நாகரத்தினம் வந்ததும், காக்கையைத் தன் அப்பாவிடம் மாட்டிவிடுகிறது. காக்கை ஆத்திரமடைந்து, மகன் நரியைத் தாக்கத் திட்டமிடுகிறது. அண்ணனை ஒன்றும் செய்ய வேண்டாம் என மகள் நரி காதலனிடம் கெஞ்ச, திருடிய தற்காகக் காக்கை சிறை செல்கிறது (கைதியாக). ஃபிளாஷ்பேக் முடிகிறது.

எபிசோட் 8

பாட்டியின் வடையகம். கூட்டமாக இருக்கிறது. சிறையிலிருந்து வந்த காக்கையைக் காட்டுச் சமூகம் ஒதுக்குகிறது. பசியில் இருக்கும் காக்கை, பாட்டியின் வடையகத்தைப் பார்க்கிறது. வடையைத் திருட முடிவுசெய்கிறது. வடையகம் கூட்டமாக இருப்பதால், கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்கிறது.

எபிசோட் 9

காக்கை வடையைத் திருடி, ஒரு கிளையில் வந்து அமர்கிறது. அதைப் பின்தொடர்ந்து வந்த தந்தை நரி, காக்கையையும் வடையையும் பார்க்கிறது. அது தான் நாகரத்தினம் உள்ள வடை என்றெண்ணி அதைத் திருட, காக்கையைப் பாடச் சொல்லித் தூண்டுகிறது.

எபிசோட் 10

காக்கை பாட வாயைத் திறக்க, வடை கீழே விழுகிறது. நரி அதைக் கவ்விக்கொண்டு ஓடுகிறது. ஆனால், அதில் நாகரத்தினம் இல்லை என்று தெரிந்ததும் வடையை விட்டுச் செல்கிறது. நரியைத் துரத்தித் தோற்கும் காக்கை, அதைப் பழிவாங்க சபதம் செய்கிறது.

எபிசோட் 11

தொலைந்துபோன தனது நாகரத்தினத்தைத் தேடி பக்கத்துக் காட்டிலிருந்து ஒரு ராஜநாகம் வருகிறது...

இன்னும் 432 எபிசோடுகள் எழுத வேண்டும்.

புது மணம்

மனைவியாகிவிட்டாய்
இனி வெட்கிப்பதில்
அர்த்தமில்லை.
இப்போதாவது சொல்
உனக்கு என்னைப்
பிடித்திருக்கிறதா?

பேயோன் பக்கம்

பிரிவு

நமக்குள் எல்லாம்
முடிந்த கணம்
உனக்கொன்றும்
எனக்கொன்றுமாக
இருக்கிறது,
அதிலாவது ஒற்றுமை
இருந்திருந்தால்
பிரிந்திருக்க வேண்டாம்
போலயே.

வேலைக்காரி

நீ போட்ட கோலத்தை
ஊர் அழிப்பதற்குள்
ஹேண்ட்பேகை மாட்டிக்கொண்டு
வேலைக்குப் போய்விடுகிறாய்
நீ வீடு திரும்பும் வரை
காத்திருக்க வேண்டும் நான்
எனக்கொரு வேலை
கிடைக்கும் வரை.

'துப்பாக்கி’ விமர்சனம்

பேயோன் பக்கம்

'போக்கிரி’யில் மறைமுக போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் என்ன செய்தாரோ, அதைத்தான் துப்பாக்கியில் அதே நடிகர் இந்திய ராணுவத்தின் ரகசிய முகவராகச் செய்கிறார். ஒரு வித்தியாசம், இம்முறை மும்பை மாநகரைப் பல குண்டுவெடிப்புகளிலிருந்து காப்பாற்றுகிறார். ஏகப்பட்ட என்கவுன்டர்கள் மூலம் அவரிதைச் சாதிக்கிறார்.

இந்தப் படம் சமீபத்திய அமரர் பால் தாக்கரேவிற்கு நல்ல அஞ்சலி எனலாம். ஏனென்றால் பயங்கரவாதம் 'மும்பை சிட்டி’யின் பிரச்னையாகத்தான் படத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறதே தவிர, 'இந்தியா’, 'நாடு’ போன்ற வார்த்தைகள் அடிபடவில்லை (ஏன், பாகிஸ்தானைக்கூடத் திட்டவில்லை). கதாநாயகனின் தங்கையாகவே இருந்தாலும், பொதுமக்களும் நாட்டிற்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற மெசேஜில் மட்டும் தேசியம் எட்டிப்பார்க்கிறது.

ஒரு கட்டத்தில் தற்கொலைத் தாக்குதலில் இறங்குகிறார் விஜய். அதற்கு உருகக்கூட நேரம்இல்லாத வகையில் திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே சமயத்தில் ஏராளமான இசைக் கருவிகளைக்கண்டு உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிகிறது. ஒளிப்பதிவில் சந்தோஷ் சிவன் சுட்டுத் தள்ளியிருக்கிறார். இங்கே எடிட்டிங்கைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்: எடிட்டிங் நன்றாக இருக்கிறது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியிருப்பதால், படத்தில் சற்று 'குருதிப் புனல்’ வாசம். யார் உத்தரவும் இன்றி தனி ராணுவமாகச் செயல்படும் விஜய், சுயகட்டுப்பாடுடன் நடித்திருக்கிறார். காதலுக்கு மரியாதையில் கழுத்தை ஆட்டி ஆடிய விஜயா இது?! ஜெயராமின் நடிப்புக்கும் காஜல் அகர்வாலின் அழகுக்கும் போதுமான அளவு வெளிப்பாடு கிடைக்கவில்லை. படத்தில் இயக்குநர் முருகதாஸின் பங்களிப்பு முக்கியமானது. ஆகமொத்தம் துப்பாக்கி - செவ்வனே சுடுகிறது.

- புரட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism