Published:Updated:

விகடன் மேடை - வைரமுத்து

படம் : கே.ராஜசேகரன்

விகடன் மேடை - வைரமுத்து

படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

கணேஷ்பாபு, தஞ்சாவூர்.

 ''சீஸனுக்கேற்ற ஒரு கேள்வி... கொஞ்சம் 'கொசு புராணம்’ பாடுங்களேன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உலகத்தின் ஆதி உயிர்களுள் ஒன்று கொசு.

2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

விகடன் மேடை - வைரமுத்து

உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.

ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம்; இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும் பெண் கொசுதான்.

கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருள் செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.

'ஏடிஸ்’ வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.

ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.

டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

குடிநீர் முறையாகக் கிடைக்காத தேசத்தில் தெருவெல்லாம் நீர்த்தேக்கம். அதுதான் கொசுக்களின் ஜென்ம சமுத்திரம்.

எப்போது சுத்தமாகுமோ சாக்கடையும் அரசியலும்?''

ரங்க கோபாலன், வந்தவாசி.

''எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிப்பது?''

''அவரது அறச் சீற்றம்.

விகடன் மேடை - வைரமுத்து

ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

'நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.’

'வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.’

'என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.’

'அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங் கள்.’

'பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப் பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.

'கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.

விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டா ராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.

கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந் தனை நினைத்துக்கொண்டேன்.

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?’ ''

விகடன் மேடை - வைரமுத்து

லட்சுமி குணசேகரன், திருவான்மியூர்.

''உங்களுக்குத் திரையுலகத் தோழி என்று யாரும் இல்லையா?''

''அவரை ஒரு தேவதை என்பேன்.

நின்ற குன்று ஒன்றைச் சிலை செய்ததுபோல் நெடுந்தோற்றம்.

சந்திர சூரியரை விழுங்கி வெளியேற்றும் கடல்கள் அவர் கண்கள்.

என்றும் விடியாத இருட்காடு அவர் கூந்தல்.

கல்லூரி நாட்களில் அவர் படம் பார்த்த பரவசம் தித்திக்கும் நினைவுகளாய்த் திட்டுத் திட்டாய்ப் படிந்திருக்கிறது என் நெஞ்சில்.

அவரை எப்போதாவது நேரில் பார்த்து நான் உங்கள் ரசிகன் என்று சொல்ல ஆசைப்பட்டிருக்கிறேன்.

திரையுலகுக்கு வந்த 14 ஆண்டுகள்  வரைக்கும் அவரை நான் பார்த்ததே இல்லை.

ஒரு விமானப் பயணத்தில் என் அருகே இருந்த பயணியை எழுப்பி இடம்மாற்றி 'நான் உங்கள் ரசிகை’ என்று என் பக்கத்தில் உட்கார்ந்தார் ஒரு பேரழகி.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அவர்தான்; அவரேதான்.

நட்பானோம்; நாகரிகம் காத்தோம்; அடிக்கடி சந்தித்தோம்.

என் கவிதை நூல்களில் அவர் மனப்பாடம் செய்தது 'பெய்யெனப் பெய்யும் மழை’. வாய்விட்டுப் பாடுவது 'நறுமுகையே’.

வெள்ளந்தியாக இருந்த எனக்கு வெள்ளித்திரையின் மூன்று தலைமுறை மர்மங்களைஎல்லாம் மூச்சுவிடாமல் சொன்னவர் அவர்தான்.

அதிரும் உண்மைகள், ஆச்சர்யமான ரகசியங் கள், ஒப்பனைக்குள்ளிருந்த மெய்ம்முகங்கள் அவர் பேசப் பேச அம்பலமாயின. உடைந்துபோன தன் வாழ்வின் நொறுங்கிய பக்கங்களை அவர் சொல்லச் சொல்ல... பெரிய மனிதர்களின் சிறிய மனங்களும் சிறிய மனிதர்களின் பெரிய மனங்களும் துல்லியமாகத் துலக்கமாயின.

திரையுலகில் நான் அளந்து எட்டுவைப்பதற்கு அவர் சொன்ன செய்திகள் துணையாயின.

இன்று திரையுலகில் நிகழும் எதுவுமே எனக்குத் தெரியவில்லை;

காரணம் - இன்று அவர் இல்லை!''

 பெ.பாலசுப்ரமணி, தாடிக்கொம்பு.

''மரண பயம் வந்ததுண்டா?''

''இதுவரை வந்ததில்லை.

மரணம் எப்போது வந்தாலும் என்னிடம் அது ஏமாந்தே போகும்.

மரணம் ஒருமுறைதானே வரும்? நானோ இருமடங்கு உழைத்திருக்கிறேன்; இருமடங்கு வாழ்ந்திருக்கிறேன். மரணம் என்னிடம் நஷ்டப்பட்டே ஆக வேண்டும். நான் அஞ்சுவதெல்லாம் மரணத்தின் அழிச்சாட்டியமான உடல் உபாதைகளுக்குத்தான்.

பூப்போல் பாதுகாத்துப் பொன்னைப் போல் போற்றப்படும் உடல் உறுப்புகள் கிழிக்கப்படாமல், அறுக்கப்படாமல், துளையிடப்படாமல் புல்வெளியில் பூ விழுவதுபோலப் போய்விட வேண்டுமென்றே ஆசை.

இந்திரியம் பிரிவதுபோல் உயிர் பிரிய வேண்டும் அல்லது ஆனந்தக் கண்ணீரைப் போல் வெளியேற வேண்டும்.

மற்றபடி மரணம் என்பது நிறைவல்லவா? வாழ்வின் பூரணமல்லவா? உலகத்தின் அழியாத பேருண்மையோடு கலப்பது ஆனந்தமல்லவா?

'காமன் இருக்கிறானே, அவன் நண்பன்போல் ஓர் எதிரி. எமன் இருக்கிறானே, அவன் எதிரிபோல் ஒரு நண்பன்’ என்றார் ஆதிசங்கரர். ஆதி சங்கரரில் நான் பாதி சங்கரன்.''

விகடன் மேடை - வைரமுத்து

அ.பழனியாண்டி, திட்டக்குடி.

''மணிரத்னம்  ஏ.ஆர்.ரஹ்மான்  வைரமுத்து கூட்டணி எப்போதும் வெற்றி பெற என்ன காரணம்?''

''முதல் சந்திப்பிலேயே ஒரு முடிவெடுப்போம். படத்தின் சிறந்த பாடல் எதுவென்று கருதுகிறோமோ, அதை எழுதி ஒலிப்பதிவு செய்துவிடுவோம். அடுத்து எழுதவிருக்கும் பாடல்கள் அந்தப் பாடலைத் தாண்ட வேண்டும் என்று பாடுபடுவோம். சிறந்த பாடல் என்று கருதப்பட்ட முதல் பாடலை அடுத்தடுத்த பாடல்களால் கடைசிக்குத் தள்ளக் கடும் முயற்சி மேற்கொள்வோம். 'கடல்’ படத்தில் இடம்பெற்று இன்று உலகப்புகழ் பெற்றிருக்கும் 'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்’ பாடலைவிடவும் மிச்சப் பாடல்கள் உச்சப் பாடல்களாக உணரப்படும்; சற்றே காத்திருங்  கள்.''

டாக்டர் ஆர்.பாஸ்கரன், தஞ்சாவூர்.

''ஒவ்வொரு சமூக நிகழ்வின் மீதும் உங்கள் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்ள ஒரு கணிசமான கூட்டம் காத்தி ருக்கிறது. நீங்கள் மௌனம் சாதிக்கிறீர்களே ஏன்?''

'' 'ஒரு கருத்தைச் சொல்ல ஒரு சொல் போதுமெனும்போது இரு சொற்களைப் பயன்படுத்தாதே. அந்தக் கருத்தால் ஒரு பயனும் இல்லையெனும்போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே.’

சொன்னவர் - சீன அறிஞர் சிங்சௌ.

வாழ்பவன்  வைரமுத்து.''

- இன்னும் பேசுவோம்...