Published:Updated:

ஹாய் சோழன்! ஹாய் மதன் கேள்வி - பதில்

ஹாய் சோழன்! ஹாய் மதன் கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி
##~##
சிவராம சுப்பிரமணியன்,
தூத்துக்குடி.

வாலி இன்னும் வாலிபக் கவிஞராக இருப்பது எப்படி?

பெரிய வி.ஐ.பி-க்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அவரைப் பாராட்டிவிட்ட பிறகு, அவர்களை எல்லாம் மிஞ்சி நான் என்ன சொல்ல?!

பொதுவாகவே, கவிஞர்களுக்கு வயது ஆனாலும், மனதுக்குள் இளமைத் துடிப்பு நிறைய இருக்கும். கவிதைகளைச் சிந்திக்கும்போது புதுப் புது வார்த்தைகள் அவர்களுக்குத் திடீரென்று தோன்றுகிற சமயத்தில், ஒருவித மெய்சிலிர்ப்பு ஏற்படும் (orgasmic என்று சொல்லலாமா?!). வாலி அவர்களுக்குக் கூடுதலாக, ரசிப்புத் தன்மை வேறு அதிகம். 'பலே... அடாடா... அட்டகாசம்...’ என்றெல்லாம் மற்றவர்களை வாய்விட்டுப் பாராட்டுபவர் அவர். உரக்கப் பாராட்டும்போது 'கார்பன்டை ஆக்ஸைடு’ வாயு நுரையீரலில் இருந்து வெளியேறுகிறது. பதிலுக்கு ஆக்ஸிஜன் உள்ளே நுழைகிறது. மொத்தத்தில், பிராணாயாமம் மாதிரி! அதுதான் அவரை வாலிபக் கவிஞராக வைத்திருக்கிறது என்பது என் கருத்து!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

மோகம், தாபம், விரகம், போகம், காமம் இந்த வார்த்தைகள் அனைத்துமே ஏறக்குறைய ஒரே பொருள்கொண்டவையா?

இல்லை! ஆனால், எல்லாமே அடிப்படையில் ஆசை சார்ந்த சொற்கள். 'மோகம்’ என்றால் சித்தம் கலங்குவது. 'யாரைப் பார்த்து?’ என்கிற லாஜிக் எல்லாம் அதற்கு அவசியம் இல்லை! 'தாபம்’ என்றால், காதல் தாகத்தால் துன்புறுவது-அதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரிப்பது! விரகம் - பிரிவினால் ஏற்படும் (காதல்) துன்பம்! போகம்-சிற்றின்பங்களை அனுப விப்பது. காமம்-உடற்கூறு சம்பந்தப்பட்டது-Physical.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரே ஒரு ஆலோசனை கூற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் என்ன கூறுவீர்கள்?

ஹாய் சோழன்!  ஹாய் மதன் கேள்வி -  பதில்

ஆலோசனையா?! ஒரு குடிமகன் என்கிற முறையில் நான் கேள்வி மட்டும்தான் கேட்க முடியும். 'தன்னைச் சுற்றிலும் தவறுகள் நிகழ்ந்தபோது எல்லாம் அதை ஆட்சேபித்து காந்திஜி உண்ணாவிரதமே இருந்தது உண்டு. நீங்கள் காந்திஜியைவிட நிரம்பப் படித்தவர். தேனீக் கூட்டை தேனீக்கள் அப்பிக்கொண்டு இருப்பதைப்போல (தேனீக்கள் மன்னிக்க!) உங்கள் ஆட்சியில் ஊழல்கள் அப்பிக் கொண்டு இருக்கின்றன. ஒரு வார்த்தைகூட தட்டிக் கேட்காமல் நீங்கள் கம்மென்று இருப்பது என்ன நியாயம்? 100 கோடிக்கு மேற்பட்ட இந்திய மக்களின் தனிப்பெரும் தலைவராக, பிரதமராகப் பதவி வகிக்கும் நீங்கள், தார்மீகரீதியில்கூட கருத்துக்களை வெளியிட முடியாத பரிதாப நிலையில் இருப்பதற்கு என்ன காரணம்? எதிர்காலத்தில் வரலாறு உங்களை எப்படி அழைக்கப்போகிறது என்கிற கவலையே உங்களுக்கு இல்லையா?’ என்று கேட்பேன்!

தவமணி கோவிந்தசாமி, திண்டிவனம்.

அமேசான் நதி உலகிலேயே மிகவும் அகலமானது என்றும், நைல் நதி (தனியாக) நீளம் என்றும், மிஸெளரி - மிஸிஸிபி இணைந்தால் (உலகிலேயே) நீளம் என்றும் படித்து உள்ளோம். இதில் எது சரி?

ஹாய் சோழன்!  ஹாய் மதன் கேள்வி -  பதில்

நதி என்பது 'ஹைவே’ ரோடு இல்லை. இடத்துக்கு இடம் அகலம் மாறும். உலகிலேயே நீள நதி நைல் - 4,145 மைல். அடுத்தது அமேசான் - 3,900 மைல். மிஸெளரி-மிஸிஸிபி இரண்டும் இணைந்து 3,800 மைல். இருப்பினும், நீர் என்றால் கடல்தான். உலகின் 97 சதவிகித நீர் கடலில்தான் இருக்கிறது. இரண்டு சதவிகிதம் (அண்டார்டிக்காவிலும், ஆர்க்டிக்கிலும்) உறைந்த ஐஸ் ஆக. ஒரு பர்சென்ட்டுக்கும் குறைவான நீர்தான் நதிகளில்!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

நீங்கள் அஞ்சி அஞ்சி ஓடுவது யாரைக் கண்டு. அரசியல்வாதியையா, ஆன்மிகவாதியையா, இல்லை நடிகையையா?

ஆன்மிக(போலி)வாதியிடம் இருந்துதான். ஏனென்றால், ஆன்மிகவாதியை, அரசியல்வாதியும் நடிகையும் ஏற்கெனவே துரத்துவதால், நான் மொத்தமாக மூவரிடமும் இருந்தே ஓடுகிறேன் என்று ஆகிறது. ஒரே கல்லில் மூன்றுமாங்காய்!

பொன்விழி, அன்னூர்.

உங்களுக்குத் தொடர்ந்து கேள்வி கேட்பவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது இல்லையா?

யதேச்சையாகச் சிலரைச் சந்தித்தது உண்டு. நிச்சயம் மகிழ்ச்சியாகவே இருந்தது என்றாலும், சந்தித்தே தீர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நம்முடைய நட்பு கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைப் போன்றதாக்கும்! (அட, நீங்கதாங்க சோழன்!).

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

திருமண 'விவாகரத்து’ முறையைக் கொண்டுவந்தவர்கள் யார்?

விவாகம் பண்ணிக்கொண்டவர்கள்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு