Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ரசாங்கங்கள் தங்கள் நாடுகளுக்குள் வரும் இன்டர்நெட் இணைப்புகளைக் கட்டுப்படுத்தும் நிலை இருந்தால், மக்கள் என்ன செய்வது என்பதை இந்த வாரத்தில் பார்க்கலாம் என்றிருந்தேன். இந்தப் பிரச்னைக்குக் கூகுளும் டிவிட்டரும் இணைந்து ஒரு நல்ல தீர்வை இப்போதைக்குக் கொடுக்கிறார்கள். இதுபோன்ற நாடுகளில் இணையத்தில் இணைத் துக்கொள்ளும் வசதி இல்லாமல் போகும்போது மக்கள் தொலைபேசி மூலம் குறிப்பிட்ட எண்ணை அழைத்துத் தகவலைப் பதிந்து விட்டால், அந்த ஆடியோ பதிவு ட்வீட்டாக அனுப்பப்படும்.

 சிரியாவின் இன்டர்நெட் இல்லாத இரண்டு நாட்களில் அங்கிருந்து பதிவுசெய்யப்பட்ட ஆடியோ பதிவு ஒன்றை இங்கே கேளுங்கள்...http://bit.ly/VasdjO

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

(ஆடியோ கேட்கும் வசதி இல்லாதவர்களுக்கு... 'என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை; எங்களுக்கு உதவி செய்யுங்கள்!’ என்பது அந்த ஆடியோ பதிவின் வாசகம்!)

பெரும்பாலான பணிகளுக்குக் கணினியைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை. இதன் பக்க விளைவு, அதிக இயக்கம் இல்லாமல் நாள் முழுக்க அமர்ந்தே இருப்பது. அதுவும் ஐ.டி. போன்ற துறையில் இருப்பவர்களின் நிலை ரொம்பவே மோசம். இது உடல்நலத்துக்கு மிகவும் தீங்கானது என்கிறது மருத்துவ உலகம். நடந்துகொண்டே வேலை செய்ய உதவும் Treadmill சாதனம், அமர்ந்து வேலை செய்யும் மேஜையை, நாற்காலியில் அமர்ந்திருக்கையில் கீழாகவும், நின்றுகொண்டு இருக்கும்போது மேலாகவும் மாற்றிக்கொள்ள வசதி எனப் பலவாறான தீர்வுகள் இதற்கு வந்தபடியேதான் இருக்கின்றன. சமீபத்தில் பரவலாகிவருவது உடலில் அணிந்துகொள்ளும் வகையில் இருக்கும் நமது செயல்பாடுகளைக் கண்காணிக்கும் (Activity Tracking ) சாதனங்கள். எடுத்துவைக்கும் அடிகளை அளக்கும் Pedometer தான் இந்த வகை சாதனங்களின் முதல் பரம்பரை.

சில வாரங்களுக்கு முன்னால் யிJawbone  நிறுவனத்தின் Up சாதனத்தை வாங்கினேன். கையில் 24 மணி நேரமும் காப்பாக அணிந்துகொள்ள வேண்டிய இந்தச் சாதனம் தன் பணியைச் செவ்வனே செய்கிறது. நாளுக்கு இரு முறை அலைபேசியில் இணைத்துவிட்டால் அதுவரை சேகரமாகியிருக்கும் உங்களது இயக்கத் தகவல்களை அலைபேசியின் மூலம் தரவிறக்கி, உங்களது வலைப்பக்கக் கணக்குக்குப் பதிவேற்றிவிடுகிறது. உங்களது நண்பர்கள் யாராவது இதே சாதனத்தைப் பயன்படுத்தினால், அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடக்கும் வசதியும் இருக்கிறது. அதோடு, இடத்தைவிட்டு அசையாமல், 'இடிச்ச புளி’யாக அமர்ந்திருந்தால், 15  நிமிடங்களுக்கு ஒரு முறை லேசான அதிர்வுடன் 'எழுந்து நடமாடு’ என்று நினைவூட்டுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஒருவர் ஒரு நாளில் 10,000 அடிகள் நடக்க வேண்டுமாம். ஒரு நாள் குறைந்தாலும், மறு நாளில் அதைச் சமன் செய்யும்படி அதிகமாக நடக்க முயன்றுகொண்டு இருக்கிறேன்.

அறிவிழி

'இது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்படி ஒரு சாதனத்தை வாங்கும் விருப்பம் இல்லை’ அல்லது 'இதுபோன்ற சாதனம் ஒன்றும் நான் இருக்கும் நாட்டில் கிடைக்கவில்லை’ என்று சொல்பவர்களுக்கு ஓர் எளிதான தீர்வு இருக்கிறது. ஆண்ட்ராயிட் அலைபேசியை நீங்கள் பயன்படுத்தினால், 'Google Now’ மென்பொருளைப் பயன்படுத்தி உங்கள் இயக்கங்களை, குறிப்பாக நடப்பது/ஓடுவதை அளந்துகொள்ள லாம். கூகுள் தொடர்ந்து 'Google Now’ சேவையை மேம்படுத்தியே வருகிறது. அடுத்த வருடம் வெளிவர இருக்கும் கூகுள் கிளாஸ் கண்ணாடிக்கான மென்பொருளாக இது இருக்கும் என்பது எனது யூகம். மேலதிக விவரங்களுக்கான உரலி... http://www.google.com/landing/now/

அறிவிழி

கூகுளின் துணையுடனோ அல்லது துணைவியின் துன்புறுத்தலாலோ, ஏதோ ஓர் ஊக்கத்தில் அதிகம் நடக்கத் தொடங்கிவிட்டீர்கள். அப்படி நடக்கும்போது நீங்கள் இருக்கும் இடம் உங்களது அப்போதைய மூடு ஆகியவற்றை ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ பகிர்ந்துகொள்ள உதவியாக ஜீன்ஸ் பேன்ட் ஒன்றைத் தயாரித்திருக்கிறது இத்தாலிய நிறுவனம் ஒன்று. இதன் இடது பாக்கெட்டில் பொருத்தப்பட்டு இருக் கும் பட்டன் போன்ற சாதனத்தை, ப்ளூடூத் மூலம் உங்களது அலைபேசிக்கு இணைத்து விட்டு, கிடுகிடுவென நடக்கத் தொடங்கலாம். எப்போது எல்லாம், சமூக ஊடகத்தில் உங்களது தகவலைத் தெரிவிக்க வேண்டுமோ, அப்போது பாக் கெட்டில் இருக்கும் பட்டனை அமுக்கினால் போதும். Social Denim எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஜீன்ஸ் அடுத்த வருடத் தொடக்கத்தில் விற்பனைக்கு வருகிறதாம். 'இது கொஞ்சம் டூ மச்சா இல்லே!’ என்று நினைப்பவர்கள் பட்டிய லில் அடியேனையும் சேர்த்துக்கொள்ளவும்!

  - விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism