Published:Updated:

சரிகமபதநி டைரி 2012

வீயெஸ்விபடங்கள் : கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்

சரிகமபதநி டைரி 2012

வீயெஸ்விபடங்கள் : கே.ராஜசேகரன், சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

ந்த நாட்களில் சீடர்களின் வேலை, குருவுக்கு துணிகள் துவைத்துப் போடுவது, கால்களைப் பிடித்துவிடுவது, கடைகளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கிவருவது போன்றதாக இருந்தது. இப்போது, தனது போட்டியாளரின் கச்சேரிகளுக்குச் சீடனை அனுப்பிவிடுகிறார் குரு. போட்டிப் பாடகருக்குக் கூட்டம் எப்படி இருக்கிறது, அவர் என்ன ராகம் பாடுகிறார், என்னென்ன பாடல்கள், எப்படி வரவேற்பு போன்ற விவரங்களை 'ஸ்பை’ மாதிரியாக குருவுக்கு உடனுக்கு உடன் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டியது சீடனின் முக்கியப் பணி. காலம் மாறிடுச்சு.

 கிருஷ்ணகான சபாவில் டி.எம்.கிருஷ்ணா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் வருடம், சீஸனில் எங்கும் பாடவில்லை இவர். சென்ற வருடம், பாடிய இடங்களில் பைசா வாங்கவில்லை. இந்த வருடம் கேட்க வருபவர்களிடம் பைசா வசூலிக்கவில்லை (ஆல் ஆர் வெல்கம்). அடுத்த மார்கழிக்கு என்ன மாற்றுத் திட்டமோ?

முதல்வரின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கொலுவீற்றிருக்கும் பார்கவி (லட்சுமி) மீது மங்களகைசிகி ராகத்தில் தீட்சிதர் இயற்றியுள்ள 'ஸ்ரீ பார்கவி பத்ரம்’ கீர்த்தனையுடன் விளம்பக் காலத்தில் கிருஷ்ணாவின் சங்கீத அர்ப்பணம் ஆரம்பம். படலிக தீர (ரீதிகௌள), ஜம்பூபதே மாம்பாஹி (யமுனாகல்யாணி) என்று அடுத்து வந்த இரண்டு பாடல்களும் விளம்பக் காலத்தில் படு ஸ்லோவாக இருந்ததால், முதல் ஒரு மணி நேரத்துக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் உட்கார்ந்து இருந்த உணர்வு.

சரிகமபதநி டைரி 2012

அடுத்து, காம்போதி ஆலாபனை. கிருஷ்ணா மாதிரி குரல் வளம் அமையப் பெற்றவர்கள், இந்த ராகத்தில் வூடு கட்டி விளையாடலாம். ஒவ்வொரு ஸ்தாயியிலும் நின்று நிதானித்து செதுக்கிச் செப்பனிடலாம். இரண்டையும் பக்காவாகச் செய்தார் கிருஷ்ணா. பிறகு, ஆர்.கே.ஸ்ரீராம்குமார் காம்போதியில் தன் பங்குக்கு நகாசு வேலை செய்தார். மிருதங்க வித்வானை 'அவசரப்பட வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த சில மணித்துளிகளுக்கு இன்னொரு ராகத்தில் ஆலாபனை. அதாவது, சஹானாவுடன் சீராடல். வயலின் டர்ன் முடிந்ததும், இதிலும் கீர்த்தனை எதுவும் கிடையாது. பதிலாக, இன்னொரு ஆலாபனை. இந்த முறை தன்யாசி. கண்களை மூடியபடி ஒருவிதத் தியான நிலைக்குச் சென்றுவிட்டார் கிருஷ்ணா. அழுத்தமான பிடிகள் வந்துவிழும்போதெல்லாம் மெய்சிலிர்த்து 'ஆஹா’ என்று உருகினார். மூன்று ராகங்களையும் இப்படி ஆலாபனையுடன் மூட்டைக்கட்டி அனுப்பிவிட்டு, அடுத்ததாக கல்யாணியில் ஆலாபனை இல்லாமல் கீர்த்தனை, நிரவல், ஸ்வரங்கள். அதன் முடிவில் 'தனி’.

கிருஷ்ணா, கச்சேரிக் கட்டமைப்பு என்ற வட்டத்துக்குள் சுழன்றுகொண்டு இருக்காமல், வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதை, அவரது சக கலைஞர்களில் பலர் ஏற்க மறுக்கிறார்கள்; அதை வெளியே சொல்லத் தயங்கினாலும். அரங்கை நிரப்பும் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் புருவம் உயர்த்தி 'என்ன ஆச்சு இவருக்கு?’ என்று வியக்கிறார்கள்.

இதுபற்றி சம்பந்தப்பட்டவர் தரப்பின் நியாயம் என்ன? கிருஷ்ணா, நீ பேகனே போலோ!

தியாகப்பிரம்ம கான சபாவில் சஞ்சய் சுப்ர மணியன்.

அசுர சாதகத்தாலும், அயராத உழைப்பாலும் கர்னாடக இசையைத் தன்வசப்படுத்தி வரும் சஞ்சய்க்கு 'வார்ம் அப்’ செய்துகொள்ள அரை மணி நேரம் கொடுத்துவிட வேண்டும். பின்னரே சூடுபிடிக்கும். வெதுவெதுப்பாகத் தொடங்கி, வெப்பம் அதிகமாகிக்கொண்டே போகும். அதன் பிறகு பாய்லர்தான்!

கமாஸ் ராகத்தை சஞ்சய் எடுத்து ஆள ஆரம்பித்ததும், நீண்ட நாட்களுக்குப் பின் நெருங்கிய நண்பனைப் பார்த்துக் கட்டித் தழுவும் ஃபீலிங். இழுத்த இழுப்புக்கு எல்லாம் சங்கதிகள் வளைந்து கொடுத்து விறுவிறுப்பைக் கொடுக்க, சுவாதி திருநாளின் 'சாரஸ தள நயனா’ பாடலை எடுத்துக்கொண்டு, கமாஸின் முழுப் பரிமாணத்தையும் படம் பிடித்துக் காட்டிய பிறகே மறு வேலை பார்த்தார் சஞ்சய்.

ராகம் - தானம் - பல்லவிக்கு சண்முகப்ரியா. தேர்தல் சூறாவளிப் பயணம் மாதிரியாக இந்த ராகத்துடன் நீண்ட நேரப் பயணம் செய்தார். குழை வான நாகஸ்வரப் பிடிகள், கலக்கலான கார்வைகள், மதுரை சோமு பாணியில் சில சங்கதிகள் என்று பயண வழியில் அங்கங்கே அலங்காரத் தோரண வாயில்கள்!

தானம் செய்வதில் கொடை வள்ளல் சஞ்சய்! ஏதோ சம்பிரதாயத்துக்கு இரண்டு மூன்று ரவுண்ட் தானம் பாடிவிட்டுப் பல்லவிக்குத் தாவிவிடாமல், வயலினில் உழுவதற்கு இரண்டு நாகைகளும் தயாராக நிற்க, சண்முகப்ரியாவைப் பிழிந்து சாறு எடுத்துவிட்டார். 'தமிழுக்கு அமுதென்று பேர்... இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்பது இந்தத் தமிழ்க் காதலன் பாடிய பல்லவி வரி!

மியூஸிக் அகாடமியில் ரஞ்சனி - காயத்ரி.

சரிகமபதநி டைரி 2012

மசாலா கலக்காமல், சம்பிரதாயம் மீறாமல், இலக்கண சுத்தமாகப் பாடினாலும் ரசிகர்களைக் கவர்ந்திட இயலும் என்பதைத் தொடர்ந்து நிரூபிப்பவர்கள் ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்.

வஸந்தாவை ரஞ்சனி கலக்கலாகப் பாட, சஹானாவை காயத்ரி குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். பின்னர், சகோ தரிகள் இருவரும் பல்லவிக்கு சுபபந்து வராளியைச் சண்டை சச்சரவு இல்லா மல் பாகம் பிரித்துக்கொண்டார்கள். சோக ரசம் ஆறாக ஓடியது. காயத்ரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அதிகம் மெனக்கெடுகிறார். இவருக்குத் தேவை, இன்னும் கொஞ்சம் ஊட்டச்சத்து. பார்க்கப் பலவீனமாகத் தெரிகிறார். இன்னும் நிறைய நாட்கள் தாக்குப்பிடிக்கணுமே மேடம். ஒரே வார்த்தையில், கச்சேரி முழுத் திருப்தி. சாருமதி ரகுராமன், அருண்பிரகாஷ், புருஷோத்தமன் மூவர் கூட்டணியின் பக்கவாத்திய ஒத்துழைப்பு... ஓஹோ!

அகாடமி நிர்வாகம், தாமதமாக ஹாலுக்குள் வருபவர்களுக்கு 15 நிமிடங்கள் கிரேஸ் டைம் கொடுத்துவிட்டு, கதவைப் பூட்டிவிட வேண்டும். நாலேகால் மணிக்கு ஆரம்பமாகிவிட்ட கச்சேரிக்கு ஐந்தேகால் வரை ஒரு சிலர் கையில் டிக்கெட்டுடன் வருவதும், அவர்களுக்குப் பாதுகாப்பாக யூனிஃபார்மில் செக்யூரிட்டி ஒருவரும், மஃப்ட்டியில் வாலன்டியர் ஒருவரும் வந்து சத்தம் போட்டு இருக்கையைத் தேடுவதுமாக இருந்தால், டக்கரான சஹானாவையும் வஸந்தாவையும் எப்படி ரசிப்பதாம்?

இதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் மியூஸிக் அகாடமி.

பார்த்தசாரதி சபாவில் சித்ரவீணை ரவிகிரண்.

சரிகமபதநி டைரி 2012

'காமன் கணைகள் என்னைத் துளைப்பது கண்டு உள்ளம் உருகாதோ’ (வைரமுத்து எழுதிய வரிகள் அல்ல!) என்ற இந்தோள ராக வர்ணத்துடன் ஆரம்பித்து, பேகடாவில் வல்லபரைத் தொழுதுவிட்டு, 'நீது சரணமுலே’ என்ற சிம்மேந்திரமத்யம ராகப் பாடல். ''இந்தப் பாடலில் தியாகராஜரின் முத்திரை இருப்பினும், இது கே.வி.சீனிவாச ஐயங்கார் என்பவர் எழுதியது. நன்கு அறியப்பட்ட ஃபோர்ஜரி இது...'' என்று அறிவித்தார், இன்று சித்ர வீணையின் ஏகபோக அதிபரான ரவிகிரண்.

முன்பு ஒரு மாதிரி டல் அடித்துகொண்டு இருந்த சித்ரவீணையில் செம விறுவிறுப்பைக் கூட்டிவிட்டார் இவர். ஊத்துக்காடு வெங்கடகவியைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். 'கஜமுக’ என்று துவங்கும் முருகர் பற்றிய வேங்கடகவியின் பாடலை வாசித்துவிட்டு, கரகரப்ரியாவை மீட்டினார். அழகழகான சங்கதிகள் அடுக்கடுக்காக வந்து விழுந்தன. அசத்தலான வாசிப்பு. பிறகு, தியாகராஜரின் 'பக்கல நிலபடி’ நிரவல் - ஸ்வரங்களுடன்.

இதோ, தனி ஆவர்த்தனம் ஆரம்பமாகிவிட்டது. தவிலின் விஸ்வரூபம். ஹரித்வாரமங்கலம் பழனிவேல், குஜராத்தில் மோடி கணக்கில் இந்த முறையும் சிலிர்த்து எழுந்தார். மிஸ்ரத்தில் மூன்று இடம் தள்ளி எடுத்தார் என்பது லயத்தில் டெக்னிக்கல் விஷயம். அது புரியாதவர்கள் கூட, துரந்தோ எக்ஸ்பிரஸ் வேகத்தில் பழனி வேலின் இடதுகை விரல்கள் ஆனந்த நர்த்தன மாட, குச்சி வைத்துக்கொண்டு வலந்தரையில் நட்டுவாங்கம் செய்ய, கச்சேரி நடந்த ராயப் பேட்டை ஏரியாவில் பெருக்கெடுத்து ஓடிய நாத வெள்ளத்தில் காது நனைந்து மகிழ்ந்தார்கள்.

இந்த மகாவித்வானுக்குக் கடம் வாசித்த கிரிதர் உடுப்பா அற்புதமாக ஈடுகொடுத்ததைக் குறிப்பிடாவிட்டால் சாமி கண்ணைக் குத்திவிடும்.

யிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் டி.வி.கோபால கிருஷ்ணனின் வாய்ப்பாட்டு. எஸ்.வரதராஜன் (வயலின்), திருவாரூர் பக்தவத்சலம் (மிருதங்கம்), வி.சுரேஷ் (கடம்) பக்கா பலம்.

மேற்படி சபாவில் மேதகு பெரியவர் டி.வி.ஜி-க்கு 'சங்கீத கலா நிபுணா’ விருது கொடுத்தார்கள். அதனாலேயே பாடுவதற்கும் அவருக்கு வாய்ப்பு.

80 ப்ளஸ் வயதில் டி.வி.ஜி-க்குக் குரல் சொன்னபடி கேட்பதைப் பார்க்கும்போது, மலைப்பு ஏற்படுகிறது. மந்த்ர ஸ்தாயியில் நின்று நிதானிக்கிறது. ஜஸ்ட் லைக் தட், மேல் சட்ஜத்தைத் தொட்டுவிட்டு சடாரென்று கீழே இறங்குகிறது. கமலின் 'ராஜபார்வை’ படத்தில் 'அந்திமழை பொழிகிறது’ பாடலின் நடுவே கணீரென்று வஸந்தாவை இழுக்கும் குரல் இவருடையதுதான். அந்தக் கம்பீரம் இன்று வரை குறையவில்லை.

இசை உலகில் ஆச்சர்ய மனிதர்!

சரிகமபதநி டைரி 2012

நாரத கான சபாவில் இளம் பாடகர் ராம  கிருஷ்ணன் மூர்த்தி. அந்தப் பகல் பொழுதில் மினி ஹால் வெடித்துவிடும் அளவு கூட்டம். எதிர்காலத்தில், சங்கீத சாம்ராஜ்யத்தில் ராம கிருஷ்ணன் மூர்த்தி கோலோச்சப்போவதற்கு இந்தக் கூட்டமும் ஓர் அறிகுறிதான்.

கல்யாணியில் வர்ணம். ஸ்ரீரஞ்சனியில் 'மாறுபல்க...’. அதில், 'தாரி நெறிகி’யில் நிரவல். சுரட்டியில் 'அங்காரகமா..’ 'தீனரட்சகம் பூஜித’வில் நிரவல். ஜோதிஸ்வரூபிணி ராகத்தில் 'கானா அமுத பானம்’ என்கிற கோடீஸ்வர ஐயரின் பாடல்... சுவையாக மெனு தயாரித்து வயிறு (காது) நிரப்பி அனுப்பினார் ரா.கி. மூர்த்தி.

ஜோதிஸ்வரூபிணி மாதிரியான விவாதி ராகங்களைப் பாடும்போது முதலில் அந்த ராகத்தின் முழு சொரூபத்தைக் காட்டிவிட வேண்டும். போகப் போக வேண்டுமானால் தொடர்புடைய வேறு ராகங்கள் லேசாகத் தலைகாட்டுவதை அனுமதிக்கலாம். ஆனால், ராமகிருஷ்ணன் மூர்த்தி எடுத்த எடுப்பில் சண்முகப்ரியாவைத்

தொட்டுவிட்டு, பிறகுதான் ஜோதி யிடம் போனார். அதுவே, வயலினில் எம்.ராஜீவ் இந்த ராகத்தை வாசித்த போது நோ சண்முகம்... நோ ப்ரியா!

- டைரி புரளும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism