Published:Updated:

தெரு விளக்கு

"நம்ம வலிக்கு நாமதான் போராடணும்!"பாரதி தம்பிபடங்கள் : பா.காளிமுத்து

தெரு விளக்கு

"நம்ம வலிக்கு நாமதான் போராடணும்!"பாரதி தம்பிபடங்கள் : பா.காளிமுத்து

Published:Updated:
##~##

வரைப் பார்த்தால் என் அம்மாவைப் போலவே இருந்தார். 'வணக்கம்மா’ என்று சொல்ல வாய் எடுக்கும்போதே, 'வாங்க தோழர்’ என்கிறார் கம்பீரமாக. ஒரு நொடியில், இரு தலைமுறை வயது வேறுபாட்டைக் கலைத்துப்போடுகிறது அந்தச் சொல். கருவேல மரங்கள் சூழ்ந்த ஓரிக்கோட்டை கிராமத்தின் விவசாயக் கூலித் தொழிலாளியான சந்தனமேரி யின் வாழ்க்கைக் கதை அசாத்தியமானது!

 இறுக்கமான சாதி நடைமுறைகளைக்கொண்ட தேவகோட்டைப் பகுதியில் 'உழைக்கும் பெண்கள் இயக்கம்’ என ஓர் அமைப்பைக் கட்டி எழுப்பிஇருக்கும் இவர், பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க அப்பாவுக்கு கோழிக் கடையில் கழிவுகளைக் கூடையில அள்ளி, தலையில சுமந்து கொண்டுபோய்க் கொட்டுற வேலை. தலை எல்லாம் கழிவு வழியும். தம்பியைப் பார்த்துக்கணும்னு மூணாம் வகுப்போட என்னைப் பள்ளிக்கூடத்துலேர்ந்து நிறுத்திட்டாங்க. 'அந்நிய நாட்டுக்காரங்க எல்லாம் நாட்டைவிட்டுப் போகணும்’னு பர்மால சொல்லவும், என்னோட 12-வது வயசுல சிவகங்கை மாவட்டம் சூராணத்துக்கு வந்தோம். அதுதான் அப்பாவுக்குப் பூர்வீக ஊர்.

வந்தாச்சே தவிர, பொழப்புக்கு வழி இல்லை. வீட்டுல ஒன்பது பிள்ளைக. நான்தான் மூத்தவ. ஒண்ணும் பண்ணிக்கிற முடியாம, அப்பா கிளம்பி அந்தமானுக்குப் போயிட்டார். நான் ஒரு ஆளுதான் உழைக்கணும். வயல் வேலைக்குப் போனேன். நடவு முடிஞ்சதும் கொடுக்குற கூலிக் காசைவெச்சு சோளம் வாங்கிட்டுப் போயி ராத்திரி ஒன்பது மணிக்குப் பிறகு ஊறவெச்சுக் கிண்டிச் சாப்பிடணும்.

தெரு விளக்கு

இப்படி வேலைக்குப் போற இடத்துல நாங்க தண்ணியை ஒரு கிளாஸ்ல மொண்டு குடிக்க முடியாது. மேலே இருந்து கீழே ஊத்துவாக. ரெண்டு கையையும் ஏந்தி அதைப் பிடிச்சுக் குடிக்கணும். அதேபோல கஞ்சியைப் பனைமட்டைப் பட்டையில் ஊத்துவாக... அதைத்தான் குடிக்கணும். இதெல்லாம் எனக்கு அவமானமா இருந்துச்சு. 'நாம வேணும்னா வீட்டுல இருந்து கிளாஸ் கொண்டுவருவோம்’னு சொல்லுவேன். 'அதெல்லாம் தப்பு’னு சொல்லிருவாக. இப்படித்தான் பர்மாவுல இருந்து வந்த நான், இங்கே இருந்த சாதியைப் பத்தி அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டேன். ஒருவழியாக் கல்யாணம் பண்ணிட்டு ஓரிக்கோட்டைக்கு வந்தேன்.

இந்த ஊர்லயும் அதே சாதிக் கொடுமைதான். சாவுக்கு கேதம் சொல்லிப் போகணும், பறை அடிக்கணும், பொணம் பொதைக்கக் குழி தோண்டணும். இது எதுக்கும் சம்பளம்  இல்லை. கேதத்துக்கு வர்ற சொந்தக்காரங்க கோடி வரிசை நெல் கொண்டுவர்றாகள்ல... அதுல எந்த ஏனத்துல நெல் அதிகமா இருக்கோ, அதை எங்களுக்குக் கொடுப்பாக. அதைக் கடையில போட்டா, ஆளுக்கு 50 காசு கிடைக்கும். அவங்க வீட்டுல கல்யாணம் நடக்கும்போது ஓலைப் பெட்டியும், மண் பானையும் எடுத்துட்டுப்போனா, சோறு, குழம்பு கொடுப்பாக. வாங்கிட்டு வந்து எல்லாருமா பிரிச்சுக்கிடணும். அவமானமா இருக்கும். இதுக்கு என்னமாச்சும் பண்ணணும்னு மனசு கெடந்து அடிச்சுக்கும். அப்போ வழிகாட்ட யாரும் இல்லை.

அந்தச் சமயத்துலதான் இந்த சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த 'சிவகங்கை பல்நோக்கு சமூக சேவைச் சங்கம்’ அப்படிங்கிற அமைப்புல இருந்து வந்து, 'பெண்கள் அமைப்பு தொடங்கணும்’னு சொன்னாங்க. சந்தோஷமா சனங்களை ஒண்ணுசேர்த்தேன். கூடின 40 பேருல எனக்கு ஒரு ஆளுக்குத்தான் எழுதப் படிக்கத் தெரிஞ்சது. அதனால என்னையே செயலாளராப் போட்டாக. ஊர் ஊராக் கூட்டங்களுக்குப் போவேன். இந்தப் பகுதியில நினைச்சா 4,000 பெண்களைத் திரட்டுற அளவுக்கு விறுவிறுப்பா வேலை பார்த்தேன்.

அப்போ காளையார்கோவில்ல ஒரு கிறிஸ்துவ உடையார் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செஞ்சு கிணத்துல தூக்கி வீசிட்டாக. அதுக்காக ஆயிரக்கணக்கான பெண்களைத் திரட்டிப் போராடினேன். போலீஸ் நுழைஞ்சு அடிச்சது. நாங்களும் திருப்பி அடிச்சோம். உடனே, சங்கத்துக்காரங்க, 'அரசாங்கத்தை எதிர்க்கக் கூடாது’னு அறிவுரை பண்ணாக. அடிக்கிறவனை எதிர்க்காம கையைக் கட்டிக்கிட்டு நிக்கவா முடியும்னு அதுலேர்ந்து வெளியே வந்துட்டேன்.

தெரு விளக்கு

அப்போ 'இந்திய மக்கள் முன்னணி’ அமைப்புல சேரச் சொல்லி சில தோழர்கள் கேட்டுக்கிட்டாங்க. அது ஒரு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கம். அதுல சேர்ந்த பிறகுதான் இந்த சாதி அமைப்பு முழுசாப் புரிய ஆரம்பிச்சது. சின்ன வயசுல இருந்து என் மனசுக்குள்ள இருந்த கேள்விகளுக்குப் பதிலும், என்ன செஞ்சா அதைச் சரிசெய்ய முடியும்கிற தெளிவும் கிடைச்சது. 1990-களில் நான் அந்த அமைப்பில் சேர்ந்தப்போ ஒரு பெண்கூட இல்லை. 'புரட்சிகரப் பெண் விடுதலை இயக்கம்’னு நானே கட்சியோட பெண்கள் பிரிவை ஆரம்பிச்சேன். பக்கத்துல இருக்குற கைகாட்டியில் நித்யகல்யாணி மில் இருந்துச்சு. அதில் கட்சியோட தொழிற்சங்கம் ஆரம்பிச்சப்போ, நான்தான் முதல் கொடி ஏத்தினேன்!'' என்று தொழிற்சங்கத் தோழராகத் தான் உருவெடுத்த கதை சொல்கிறார் சந்தனமேரி. அதன் பிறகு, இவர் முன் நின்று நடத்தியவை ஏராளமான போராட்டங்கள்.  

''தொண்டி பகுதியில் பனங்குளம்னு ஒரு ஊர். அங்கே தலித் மக்கள் போற பாதையை அடைச்சுவெச்சிருந்தாங்க. நான் போய்ப் பெண்களைத் திரட்டினேன். அந்தப் பக்கம் ஆதிக்க சாதி ஆளுங்க, ஆயுதங்களோட நிக்கிறாங்க. 2,000 போலீஸ் குவிஞ்சு நிக்குது. எல்லாத்தையும் மீறிப் போராடினோம். போலீஸ் அடிச்சு நொறுக்குச்சு. எனக்குக் கடுமையான அடி. ஆனா, உடனே ரோடு போட்டாங்க. திருப்பாக்கோட்டையில ரோடு இல்லை. அங்கேயே போய்த் தங்கிட்டேன். 'எங்கே இருந்தோ ஒரு அம்மா வந்து நம்ம ஊருக்கு ரோடு போட மெனக்கெடுது. வாங்கப்பா’னு ஊரே கூடிப் போராட வந்துச்சு. பின்னாடியே ரோடும் வந்துச்சு.

இது எல்லாத்தையும்விட முக்கியமா, இந்த ஓரிக்கோட்டையில் தலித்துகள் யாரும் இப்போ அடிமை வேலை பண்றது இல்லை. என் வீட்டுக்காரரைவெச்சு, ஊர்க் கூட்டம் போட்டு, 'கேதம் சொல்றது, குழி வெட்டுறது... இந்த அடிமை வேலை எல்லாம் இனி மேல் பார்க்க முடியாது’னு சொல்லவெச்சேன். 'பெரிய வம்பாகிப் போகும்’னு கத்துனாக. ஆனா, இவர் முடியவே முடியாதுன்னு சொன்னதும், 'அப்போ நாங்களும் பண்ண மாட்டோம்’னு மொத்த ஊரும் சொல்லிடுச்சு. 'பறை அடிக்க மாட்டோம்’னும் சொல்லிட்டாங்க. இப்போ வரைக் கும் எங்க ஊர்ல யாரும் அடிமை வேலை பார்க்குறது இல்லை.

ஆனா, என் வீட்டுக்காரர் பல சமயங்களில் கோவப்படுவார். அதுல நியாயமும் இருக்கும். மொத்தம் மூணு பிள்ளைங்க. ரெண்டு பேரும் கூலி வேலை செஞ்சாத்தான் குடும்பம் ஓடும். நான் பாதி நாள் கட்சி வேலை, கூட்டம்னு போயிருவேன். பத்தாததுக்கு வீட்டுல இருக்கிற தையும் எடுத்துட்டுப் போயிருவேன். ஆனா, ஒரு கட்டத்துக்குப் பிறகு என்னைப் புரிஞ்சுக் கிட்டார். இப்போ அவர்தான் எனக்குப் பெரிய துணை. இன்னைக்குக் காலையிலகூட கண்டி ஷன் பெயில்ல கையெழுத்துப் போட அவர் தான் கொண்டுவந்துவிட்டார்'' என்கிற சந்தனமேரி, பத்துக்கும் மேற்பட்ட முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். இரண்டு வழக்கு கள் இவர் மீது இருக்கின்றன. கண்டதேவி தேரோட்டத்தில் தலித் பெண்களை ஒருங்கி ணைத்து, தேர் இழுக்க அழைத்துச் செல்வதில் இவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது.

''மொத்தம் 12 வருஷம் எம்.எல். கட்சியில் இருந்தேன். இந்தப் பகுதியில் இருக்கிற அத்தனை போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைஞ்சு இருக்கேன். அப்புறம் சில முரண்பாட்டால எம்.எல். கட்சியில இருந்து வெளியே வந்து 'உழைக்கும் பெண்கள் இயக்கம்’ ஆரம்பிச்சேன். இதுவும் ஆச்சு 10 வருஷம்... இயக்கம் எதுவா இருந்தாலும், பேர் என்ன மாறினாலும் போராட்டம் மாறலை. பொதுவா போராடுறதே பிரச்னைதான். பொம்பளைங்கிறது எனக்குக் கூடுதல் பிரச்னை. அதுலயும் தலித் பெண் வேற. 'நல்லதே செய்யுறதா இருந்தாலும், அதை ஒரு பொம்பளை செய்யுறதா?’னுதான் பார்க்குறாங்க'' என்கிற சந்தனமேரி, ஏராளமான எதிர்ப்புகளுக்கு இடையில்தான் இவை அனைத்தையும் செய்கிறார்.

தெரு விளக்கு

''ஊருக்குள்ள சின்னதா ஒரு பெட்டிக்கடை வெச்சிருந்தோம். வேணும்னு வம்பிழுத்து அதை அடிச்சு நொறுக்கிட்டாக. என் பொண்ணுக ரெண்டு பேரும் இவங்களோட மிரட்டல்களாலேயே ஒன்பதாம் வகுப்புக்கு மேல படிக்க முடியலை. இப்படி எத்தனையோ இழப்புகள். அதை எல்லாம் தாண்டித்தான் இந்தச் சமூகத்துக்கு உழைக்கணும். கஷ்டம், துன்பம்னு வீட்டுலயே உட்கார்ந்திருந்தா எதுவும் கிடைக்காது. போராடணும். போராடினா ஆபத்து வரும்தான். எதுலதான் ஆபத்து இல்லை? குழந்தை பிறப்புலகூடத்தான் உயிருக்கு ஆபத்து இருக்கு. அதுக்கு எல்லாம் பயந்தா எதையும் சாதிக்க முடியாது. உழைக் கக்கூடிய, ஒடுக்கப்பட்ட பெண்கள் ஒண்ணு சேரணும். தங்களை அடக்கிவெச்சிருக்குற அடிமைத்தனங்களை அடிச்சு நொறுக்கணும். அதுக்கு யாரும் வெளியில இருந்து வர மாட்டாங்க. நம்ம வலிக்கு நாமதான் போராடணும்!''

தீர்க்கமாகச் சொல்கிறார் சந்தனமேரி.

   உயர்வது உறுதி!

ந்தனமேரி, சுற்றியுள்ள கிராமங்களின் தலித் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாதம் இருமுறை 'குழந்தைகள் சமூகக் கல்வி மையம்’ என்ற பெயரில் வகுப்பு எடுக்கிறார். பள்ளிப் புத்தகத்தைத் தாண்டிய யதார்த்த வாழ்க்கையை இங்கே படிக்கலாம். அந்த வகுப்பில் குழந்தைகளின் உறுதிமொழி இது... ''நான் பிறந்த மண்ணுக்கும், தலித் என்ற சொல்லுக்கும் வீரம் உண்டு. இந்த இனத்தில் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். என்னை ஈன்ற தாயின் மணிவயிறு புனிதமானது. அந்தப் புனிதத்துக்குக் களங்கம் ஏற்பட்டால் பொங்கி எழுவேன். நான் பிறப்பால் தாழ்ந்தவள் அல்ல. அநீதியான சமூகத்தால் தாழ்த்தப்பட்டேன். இந்த வரலாற்றை மாற்ற மாமேதை காட்டிய வழியில் கல்வி கற்பேன். கற்பது என் கடமை; கற்பது என் உரிமை; உறுதி... உறுதி... ஒரு நாள் நான் உயர்வது உறுதி!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism