Published:Updated:

முகம்

சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட் வீரர்)சார்லஸ்

முகம்

சச்சின் டெண்டுல்கர் (கிரிக்கெட் வீரர்)சார்லஸ்

Published:Updated:
##~##

திர்காலத்தில் கிரிக்கெட்டில் பல சாம்பியன்கள் உருவாகலாம். பல சாதனை மன்னர்கள் வரலாம். ஆனால், இன்னொரு சச்சின் டெண்டுல்கர் வரவே முடியாது என்பது கிரிக்கெட் உலகம் உணர்ந்த உண்மை. அந்த சகாப்த வரலாற்றின் சில பக்கங்கள் இங்கே...

• சச்சினின் அப்பா ரமேஷ் ஓர் எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர். அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் துளியும் தொடர்பு இல்லை. சிறுவனாக சச்சின் செம சேட்டை செய்து மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட, தண்டனையாகத்தான் கிரிக்கெட் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• மும்பை ஜூனியர் அணியில் விளையாடத் துவங்கிய சச்சினுக்கு இந்திய தேசிய அணியின் வலைப் பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கபில்தேவின் பந்துகளை சச்சின் கையாண்ட விதம் பார்த்துப் பிரமித்த மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் திலீப் வெங்சர்க்கர், சச்சினை மும்பை ரஞ்சி அணியில் சேர்த்தார். குஜராத் அணிக்கு எதிராகச் சதம் அடித்து, அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையுடன் தனது பயணத்தைத் துவக்கினார்.

• இந்திய அணியில் இடம் கிடைத்த பிறகும் சச்சின் நான்காவது, ஐந்தாவது வீரராகத்தான் களம் இறக்கப்பட்டார். நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியின்போது ஓப்பனிங் பேட்ஸ்மேன் சித்துவுக்குத் திடீர் காயம். கேப்டன் அசாருதீனிடம் சென்று, 'எனக்கு இன்று மட்டும் ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்’ என்று கிட்டத்தட்டக் கெஞ்சிக் கேட்டு, ஓப்பனிங் இறங்கினார். நியூஸிலாந்து மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் 49 பந்துகளில் சச்சின் குவித்தது 82 ரன்கள். அதன் பிறகு ஓய்வு பெறும் வரை சச்சின்தான் இந்தியாவின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்.

முகம்

• 1991-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 148 ரன்கள் குவித்து உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார் சச்சின். அந்தப் போட்டிதான் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து சூறாவளி ஷேன் வார்னேவின் அறிமுகப் போட்டி. ஷேன் வார்னே உட்பட அத்தனை பௌலர்களையும் விளாசித் தள்ளிவிட்டது சச்சினின் ருத்ரதாண்டவம். ''சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடிப்பதே சாதனை. அதை 18 வயதுச் சிறுவன் செய்வதைப் பார்த்தபோது ஏதோ அதிசயம் நடப்பதைப் போல உணர்ந்தேன்!'' என்றார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர்.

• பேட்டிங், பௌலிங்குக்கு மட்டுமே வலது கையைப் பயன்படுத்துவார் சச்சின். மற்றபடி இடது கைப் பழக்கம் கொண்டவர்.

• 'ரோஜா’ படம் பார்க்க மாறு வேடத்தில் தியேட்டருக்குச் சென்றிருக்கிறார் சச்சின். இடையில் விக் கழன்று விழ, மொத்தக் கூட்டமும் அவரை மொய்க்க... ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் படலங்கள் முடிந்த பிறகுதான் படம் மீண்டும் திரையிடப்பட்டதாம்.

• 2003-உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயிப் அக்தரின் வேகப் பந்துகளை நாலா பக்கமும் விளாசி 98 ரன்கள் குவித்து இந்தியாவை ஜெயிக்கவைத்தார் சச்சின். ''பாகிஸ்தான் விளையாடி முடித்ததும் உணவு இடைவேளையில் நான் எதுவும் சாப்பிடவில்லை. 'நடுவர்கள் மைதானத்துக்குள் சென்றதும் என்னைக் கூப்பிடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டேன். ஒரு பெரிய கிண்ணத்தில் வெறும் ஐஸ்க்ரீமை மட்டும் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தேன். ஐஸ்க்ரீம் நல்ல டேஸ்ட். நடுவர்கள் மைதானத்துக் குள் நுழைந்ததும் ஹெட்போனைக் கழற்றிவிட்டு மைதானத்துக்குள் இறங்கி பேட்டைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டேன். ஐஸ்க்ரீம் சுவை நாக்கிலேயே இருந்தது'' என்பது சச்சின் ஸ்டேட்மென்ட்.

• சச்சின் காலத்துக்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் இரண்டு விதமாகத்தான் பேட் செய்வார்கள். முதல் ஓவர் தொடங்கி இறுதி ஓவர் வரை டெஸ்ட் போட்டி பாணியில் 'டொக்கு’ வைத்து ஆடுவார்கள். அல்லது, தடார் மடாரென சிற்சில ஓவர்கள் மட்டும் விளாசிவிட்டு அவுட் ஆகிச் செல்வார்கள். அதை மாற்றிக் காட்டியவர் சச்சின். முதல் 15 ஓவர்களில் அடித்து ஆடுவது, பிறகு 40 ஓவர் வரை நிலைமைக்குத் தக்க தடுத்தாடுவது, கடைசி 10 ஓவர்களில் மீண்டும் அதிரடி ஆட்டம் என ஒருநாள் போட்டிகளில் அதிரடி நிகழ்த்தியவர்.

• அசாருதீனின் ஃப்ளிக் ஷாட், பிரையன் லாராவின் லேட் கட், ரிக்கி பாண்டிங்கின் புல் ஷாட் என முன்னணி வீரர்கள் அனைவருக்குமே தனித்தனி ஸ்டைல் இருக்கும். இவை அனைத்தும் கலந்ததுதான் சச்சினின் ஆட்டம். ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் டிரைவ்களில் சச்சின் அளவுக்குச் சிறப்பாக ஆடியவர்கள் யாரும் இல்லை. ஏனென்றால், சச்சினுக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு காதல். கிரிக்கெட் உலகமோ அவரை அதைவிட அதிக மாகக் காதலிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism