Published:Updated:

திருப்பதியில் ஒரு திருப்பம்!

திருப்பதியில் ஒரு திருப்பம்!

திருப்பதியில் ஒரு திருப்பம்!

திருப்பதியில் ஒரு திருப்பம்!

Published:Updated:
திருப்பதியில் ஒரு திருப்பம்!
##~##

னவரி 3-ம் தேதி - திங்கட்கிழமை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஆந்திர மாநிலப் பொதுத் தேர்தலுக்கான கட்சிப் பிரசாரங்கள் அன்று மாலை 4 மணியுடன் முடிவடை யப்போகின்றன. திருப்பதியில் 'க்ளைமாக்ஸ்’ நெருங்கிக்கொண்டு இருக்க...

''ஏடுகொண்டலவாடா... வெங்கடரமணா கோவிந்தா... கோவிந்தா...'' என்ற பக்தர்களின் கோஷத்தையே கேட்டுப் பழகிப்போன சூழ்நிலையில்...

''மன தேசம்..?''

''தெலுகு தேசம்!''

''மன ஓட்டு..?''

''என்.டி.ஆருக்கே!''

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் முழக்கங்கள்போல், தங்கள் அபிமான தலைவர் என்.டி.ஆருக்கு ஆதரவாக மக்கள் வெள்ளம் முழக்கமிட்டது. ஏழு மலைகளிலும் எதிரொலிக்கின்றன கோஷங்கள்!

கிருஷ்ணராக, ராமராகத் திரையில் தோன்றிய அந்த 'தேவுடுகாரு’ தெய்வீகத் தலமான திருப்பதியிலே போட்டியிடுகிறார் என்றால் - கேட்க வேண்டுமா? எங்கே பார்த்தாலும் என்.டி.ஆரின் கட் அவுட்களின் விஸ்வரூபம். தெலுங்கு தேசத்தின் சின்னமான சைக்கிள் களை (கட் அவுட் அல்ல... நிஜமான சைக்கிள்கள்) எவ்வளவு உயரத்தில் நிற்க வைக்க முடியுமோ, அவ்வளவு உயரத்தில்... மாடிகளில், வாட்டர் டேங்குகளில். ஒரு மில்லி மீட்டர்கூட இடைவெளி இல்லாமல் திரும்பிய இடமெல்லாம் வகைவகையான வண்ண போஸ்டர்கள்.

திருப்பதியில் ஒரு திருப்பம்!

தேர்தல் பிரசாரக் கடைசி நாள் மட்டும் என்.டி.ஆர். திருப்பதியைச் சுற்றியுள்ள 30 கிராமங்களுக்குத் திக்விஜயம் செய்திருக்கிறார். இந்தக் கிராமங்களுக்கு, எந்த காங்கிரஸ் தலைவரும் ஒரு முறைகூட விஜயம் செய்ததே இல்லையாம். குண்டும் குழியுமாக இருந்த ரோடுகளில், புழுதி பறக்க வந்த தங்கள் 'தேவுடு’வைத் தரிசிக்க வயலில் வேலை செய்த பெண்களும் ஆண்களும் போட்டது போட்டபடி ஓடி வந்தார்கள். சில பெண்கள் பூமாரிப் பொழிந்தார்கள். சிலர் ஆரத்தி எடுத்துக் குங்குமம் இட்டார்கள்.

ஆர்வத்தின் காரணமாகச் சில இளைஞர்கள் கையைக் கீறித் தங்கள் ரத்தத்தினால் தலைவருக்கு வெற்றித் திலகம் இட்டு மகிழ்ந்தனர்.

''என்.டி.ஆர். எப்புடு ஒஸ்தாரு?''

''ஈ ரோட்லே ஒஸ்தினாரா?''

ஒருவருக்கொருவர் உணர்ச்சி பொங்கக் கேள்வி கேட்டுக்கொண்டு திருப்பதி மக்கள் தவியாய்த் தவிக்க, தன்னுடைய கிராம விஜயத்தை முடித்துக்கொண்டு பகல் ஒன்றே முக்கால் மணிக்குப் பட்டணப் பிரவேசம் செய்தார் ராமராவ்.

என்.டி.ஆர். நகரப் பிரவேசம் செய்து, ஊர்வலமாகப் போய்க்கொண்டு இருந்த அதே நேரத்தில், முனிசிபல் ஹைஸ்கூல் மைதானத்தில் பிரதமர் இந்திரா காந்தி முழக்கம் செய்துகொண்டு இருந்தார்.

''இது ஒரு புனிதமான ஸ்தலம். அதனால், சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்குப் புனிதமான பொறுப்பும் இருக்கிறது. எங்கள் குடும்பம் பல வருடங்கள் காங்கிரஸ் இயக்கத்தோடு தொடர்புகொண்டது. போட்டியிடும் வேட்பாளர் உள்ளூர்க்காரராக இருந்தால்தான், உங்கள் பிரச்னைகளை நன்கு அறிந்து தீர்த்துவைக்க முடியும்.''

என்.டி.ஆரின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசாமல் மறைமுகமாகப் பேசினார் பிரதமர் இந்திரா. ''தேசத்தின் பிரச்னைகளைத் தீர்க்க நாம் அரசியல் மூலம் வழி காண வேண்டுமே தவிர, நாடகத்தின் மூலமாக அல்ல. எனக்கும் நாடகம் என்றால் பிடிக்கும் - அது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதனால். ஆனால், அரசிய லில் எனக்கு நாடகம் பிடிக்காது. அரசியலில் குதிக்க வேண்டுமானால், பிரச்னைகளைத் தீர்க்க, ஆழமான அணுகுமுறையும் அனுபவமும் வேண்டும்.''

பிரதமர் பேசிய கூட்டத்தில் 20 ஆயிரம் பேரே இருந்ததாகக் கணக்கு. அதற்கு ஒரு நிருபர் கூறிய காரணம், ''சென்ற நவம்பரில் ராஜீவ் காந்தி இங்கே வந்தபோது கூடிய கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்குதான் அவரின் அன்னைக்கு வந்திருக்கிறது...'' ராஜீவ் வந்தபோது 60 ஆயிரம் பேர் வந்திருந்தார்களாம்.

திருப்பதியில் ஒரு திருப்பம்!

என்.டி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட இ.காங்கிரஸ் வேட்பாளர் ஈஸ்வர ரெட்டி, திருப்பதிக் காரர். ஆனால், இவர் மேல் பொதுமக்களுக்குத் திருப்தி இல்லை. சொந்தத் தொகுதிக்கு இவர் எதுவுமே செய்யவில்லை என்ற புகாரும்அதிருப்தி யும் நிறையப் பேரிடம் இருந்தது. ஆனால், இதைச் சரிக்கட்ட இ.காங்கிரஸ்காரர்கள் கார் களில் (அநேகமாக தமிழ்நாட்டு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்கள்) சுற்றிக்கொண்டுதான் இருந்தார்கள். செவன் ஹில்ஸ் ஹோட்டலில் கதர்ச் சட்டைகளும், கார்களும் ஏராளம். கருப்பையா மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி, இவர்களோடு ஆற்காடு வீராசாமியும் காணப்பட்டார். மூப்பனார் மிகவும் தீவிரமாகச் செயல்படுவதாகச் சொன்னார்கள்.

என்.டி.ஆர். ஊர்வலம் லீலா மஹால் என்ற தியேட்டருக்கு அருகில் உள்ள மைதானத்தை அடையும்போது மாலை 3 மணி. லீலா மஹாலுக்குப் போகிற வழியில் மக்கள் சமுத்திரம் பொங்கி வழிந்தது. உணர்ச்சிவசப்பட்டு ஆர்ப்பரித்த இளைஞர்களின் அன்புப் பிடியில் என்.டி.ஆர். சிக்கித் தவித்தார்.

அனுபவப்பட்ட அரசியல்வாதிபோல் பேசினார் என்.டி.ஆர். ஆந்திர மக்களின் சுயமரியாதையைப் பற்றியும், பிரதமர் இந்திரா காந்தி, முதலமைச்சர்களைப் பொம்மைகளாக்கி அடிக்கடி மாற்றியதைப் பற்றியும் பேசி விளாசித் தள்ளிவிட்டார். சில சமயங்களில் பேச்சு காதில் விழாதபடி ஓயாத கைதட்டல்... ஆரவாரம்... உணர்ச்சிப் புயலோசை!

'தெலுகு தேசம் பிலுஸ் தோந்தி’ - (தெலுங்கு தேசம் உங்களை அழைக்கிறது’).

'ஈ தேசம் மீதேனண்டி’ ('இது உங்கள் தேசம்!’).

'மீ ராஜ்யம் மீர் ஏலண்டி’ ('இதை நீங்கள்தான் ஆள வேண்டும்’).

இதுபோன்ற கோஷங்கள் காதைப் பிளந்து வானைத் தொட்டன.

ஆந்திர அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய புரட்சிப் புயல் வீசப்போவதற்கான சின்னத்தைத் திருப்பதியில்

கண்டோம். என்.டி.ஆர். அலையில் எதிர் நீச்சல் போட முடியாமல், 'கை’ முழுகப் போவது நிச்சயம்!

- நமது நிருபர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism