Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்

''மறக்க முடியாத பழைய ரயில்வே ஸ்டேஷன்!''ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

 ##~##
பெ
ரியாரால் பெருமை பெற்ற மண், ஈரோடு. அந்த மண்ணின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

''என் அப்பா, ஈ.வி.கே.சம்பத். அம்மா, சுலோச்சனா சம்பத். தாத்தா பெரியாருடன் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். எங்கள் குடும்பத்தில் முதல் ஆண் குழந்தை என்பதால்,  நான் ரொம்பவே செல்லம். அதனால், எனக்கு வால் தனமும் அதிகம். என் தாத்தா ஈ.வே.கிருஷ்ணசாமிக்கு (பெரியாரின் அண்ணன்) நான் ரொம்ப செல்லம்.

என் ஊர்

உலகத்துல எங்கே சுத்தினாலும் இங்கே வந்து இறங்கும்போதுதான், சந்தோஷமும் நிம்மதியும் சேர்ந்து வரும். ஈரோடு மக்கள் அவ்வளவு அன்பானவங்க. வீட்டு வாசல்ல நின்னு ஏதாவது முகவரி விசாரிச்சாக்கூட, சொம்புத் தண்ணியைக் கொடுத்துட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பாங்க. வார்த்தைகளும் 'வாங்க... போங்க’னு மரியாதையா இருக்கும். சின்ன ஊருதான். ஆனா, தொழில் துறையில... குறிப்பா, ஜவுளித் துறையில் பிரபலம். இங்கே பக்கத்தில் இருக்கும் கோபிசெட்டிபாளையத்தை சின்ன கோடம்பாக்கம்னு சொல்லலாம். எப்பவும் சினிமா ஷூட்டிங் நடந்துட்டே இருக்கும்.

என் பள்ளிக்கூட நாட்களில் அதிகமாக சினிமாவுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. ஈரோடு கிருஷ்ணா தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி மன்னன்’ பார்த்ததை எப்போதும் என்னால் மறக்க முடியாது.

அன்று ஈரோடு மிகச் சிறிய நகரம். வலசு, சூளை, வீரப்பன்சத்திரம் எல்லாம் குக்கிராமங்கள். ஈரோடு ரயில்வே காலனியில் ஆங்கிலோ - இந்தியக் குடும்பங்கள் வசிக்கும். எல்லோரும் செக்கச்செவேல் என்று பொம்மைபோல அழகாக இருப்பார்கள். நாங்கள் அங்கு நண்பர்களை பிடித்து வைத்துக்கொண்டு, ஒரு குரூப்பாக உள்ளே சென்று 'ஆடுகளம்’ தனுஷ்போல வேடிக்கை பார்ப்போம். புத்தாண்டு, கிறிஸ்துமஸ் நாட்களில் அவர்களோடு சேர்ந்து டான்ஸ் ஆடுவோம். விருந்து சாப்பிடுவோம். இப்போதும் சென்னை யில் இருந்து ஒவ்வொரு முறையும் ஈரோடு ரயில் நிலையத்தில் கால் வைக்கும்போது, அந்த நினைவுகள் மனதில் எழும். ஆடத்தான் ஆசை... அந்த நண்பர்கள் யாரும் இல்லையே!

ஈரோடு சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில் படித்தேன். எனது பேராசிரியர் என்.கே.சுப்ர மணியம், பெரியார் கொள்கைகளில் தீவிர நாட்டம்கொண்டவர். அவரால்தான் நான் உருப்பட்டேன். வகுப்புக்கு மட்டம் போடாமல்,  படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினேன். இதர நேரங்களில் நண்பர்களோடு பைக்கில் பறப்போம். பவானி கூடுதுறைப் பக்கம், காவிரிக் கரையில் அரட்டைக் கச்சேரி நடக்கும். ரிலீஸ் ஆகும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவோம். சில சமயங்களில் இந்தி படங்கள் பார்க்க... சேலம், கோவை எனக் கிளம்பிப் போய் வருவோம்.  

என் ஊர்

ஈரோடு மாரியம்மன் கோயில், ரொம்பப் பிரபலம்.  நண்பர்கள் சிராஜுதின், சிவக்குமார், சிவா எல்லோரும் ஈரோட்டில் 'ரெக்கார்டு டான்ஸ்’ பார்க்க தலை மேல் துண்டைப் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு உள்ளே செல்வோம். அங்கு சென்றால், வெளியில் பெரிய மனிதர்களாக இருக்கும் அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள். அவர்களைப் பார்த்து நாங்கள் பயப்படுவதும், எங்களைப் பார்த்து அவர்கள் பயப்படுவதும் வேடிக்கையாக இருக்கும். வெளியில் வந்து அவர்களுக்குக் கிண்டலாக வணக்கம் சொல்லுவோம். அதை நினைத்தால் இப்போதும் சிரிப்பாக வருகிறது. இப்படி ஜாலியாகத் திரிந்தாலும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிடுவேன்.

என் ஊர்

தாத்தா பெரியார் அடிக்கடி என்னை மடியில் அமரவைத்து, 'ரொம்ப நோஞ்சானா இருக்கியேடா... நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்துடா...’ எனச் செல்லமாகக் கண்டிப்பார். ஒரு சமயம் வீட்டில் பிரியாணி விருந்து. எனக்கோ வயிற்று வலி. உடனே தாத்தா, 'வீட்டில் எப்போதாவதுதான் பிரியாணி செய்வார்கள். அதெல்லாம் கிடைக்கும்போதே சாப்பிட்டுவிட வேண்டும். சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக்கொண்டால் போச்சு...’ என்றார்.

குடும்பத்தின் பழைய நினைவுகள் வந்துவிட்டால்... நான் எங்கே இருந்தாலும், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே என் முன்னோர்களை அடக்கம் செய்திருக்கும் நினைவகத்துக்கு வந்துவிடுவேன். இப்படி என் உயிரோடு இணைந்திருக்கும் 'என் ஊர்’-க்கு பதவியில் இருந்த வகையில் பல நன்மைகளைச் செய்துள்ளேன். இன்னும் செய்வேன். அதுதான் இந்த ஊருக்கு... என் தாத்தா பெரியாருக்கு நான் காட்டும் நன்றிக்கடன்!''

சந்திப்பு: வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு