##~##

மொட்டை மாடியில் கால் வைத்ததும், காற்று அள்ளிக்கொண்டு போனது. தரையில் ஓடிய நீல நிற பி.வி.சி. பைப்களை மிதிக்காமல் கவனமாக செந்தில் காலெடுத்து வைத்தான். கொடிகளில் படபடத்துக்கொண்டு இருந்த ஜட்டிகளிலும், பனியன்களிலும் தலைமுடி கலையாமல் குனிந்து வெளியே வந்தான்.

 இருள் உதிர்ந்து, வெளிச்சம் பூக்கத் துவங்கிஇருந்த மிக அதிகாலை. திருவல்லிக்கேணியின் அந்த மேன்ஷனின் மொட்டை மாடியில் இருந்து அரை கி.மீ. தொலைவில் கடற்கரை. கடலுக்குள் இருந்து கொக்கி போட்டு இழுப்பதுபோல் மேலே எழும் சூரியன்.

செந்தில் செல்போனை எடுத்தான். நோக்கியா வின் எண்கள் மேல் தோல் உரிந்திருந்தன. டயல் செய்தான். மறுமுனையில் ஒரு முறை ரிங் கேட்டதும், தொடர்பைத் துண்டித்தான். சில நொடிகளிலேயே அவனுடைய போன், 'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...’ என்று உரத்துப் பாடியது.

தீபாதான்.

'ஹாய்... குட் மார்னிங்!'

'மார்னிங் தீபா! எழுப்பிட்டேனா..?'

'உன் போனுக்காகத்தான்டா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.'

செந்திலுக்குக் குரல் சிக்கியது, 'ஸாரி தீபா...'

'எதுக்குடா?'

'இன்னும் எத்தனை நாளைக்குதான் உனக்கு மிஸ்டு கால் குடுத்துட்டுக் காத்திருக்கிறது? நீ அனுப்பற பணத்துல மேன்ஷன் வாடகை, மெஸ் பில்லுனு செட்டில் பண்ணிக்கிட்டு... வெக்கமா இருக்கு.'

'செந்தில்ல்ல்ல்...'

'அதுக்கு இல்ல தீபா...'

'எதுவும் சொல்லாத... இன்னிக்கு முக்கியமான ஒரு விஷயத்துக்குப் போற... மூட் அவுட் பண்ணிக்காத. நீ சிரிக்கறப்ப உன் கண்ல ரெண்டு பல்ப் போட்ட மாதிரி பளிச்னு இருக்கும்டா. அதுதான்டா உன் ப்ளஸ் பாயின்ட். அதை மிஸ் பண்ணிராத!'

செந்திலின் கண்களைச் சற்று உற்றுநோக்கினால், இப்போதுகூடப் பூத்திருந்த கண்ணீரில் சூரிய வெளிச்சம் பளிச்சென்று விளக்குப் போட்டாற்போல்தான் நெளிந்தது.

'ஷேவ் பண்ணியா?'

'பண்ணேன்...' செந்திலுடைய விரல், கன்னத்தில் இருந்த பென்சில் கோடு வெட்டுக் காயத்தை வருடிப் பார்த்தது.

'ரெடியாயிட்டியா?'

'கிட்டத்தட்ட...'

'அதே பிரவுன் கலர் ஷர்ட்டா?'

'ஆமா.'

'முட்டாள்... புதுசா எதுக்கு வாங்கின? அதைப் போட்டுக்கலாம்ல?''  

'இல்ல தீபா... இன்னிக்கு எடுக்கப்போறது கோபிசந்த். பெரிய கேமராமேன்கிட்ட அசிஸ்டென்ட். பீச் பின்னணி. வேற கேமரா. வேற லைட்டிங். சட்டை மட்டும் நீ வாங்கிக் கொடுத்தது. என்னோட அந்த சென்டிமென்ட்டை மாத்தாத... ப்ளீஸ் விட்டுரு!'

சற்றுத் தயங்கி, 'செந்தில், நேத்து உங்க அம்மாவைக் கோயில்ல பாத்தேன்டா!' என்றாள்.

'என்ன சொன்னாங்க?'

'சொன்னாங்களா..? கொல்லாம விட்டதே பெரிய விஷயம். என்னைப் பாத்ததும், சாமிகூடக் கும்பிடல... விருட்டுனு திரும்பிப் போயிட்டாங்க!'

செந்தில் கண்களை மூடினான். பெருமூச்சுவிட்டான்.  

'தீபா, உன் பேலன்ஸ் தீர்ந்துரப்போவுது. எனக்கு உன் லிப்ஸால ஒரு ஆல் த பெஸ்ட் சொல்லு!'

'ப்ப்ப்ச்ச்ச்... போதுமா? ஆல் தி பெஸ்ட். நீ ஜெயிப்படா. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள போஸ்டர் போஸ்டரா சிரிச்சுட்டு இருப்ப. உன் மூஞ்சி பேப்பர் பேப்பரா வரும்... பாரேன்...'

வழக்கம்போல் அவனுக்குள் அவள் ஆக்சிஜன் செலுத்தினாள். செந்தில் போன் தொடர்பைத் துண்டித்தான்.

தமிழகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருந்தும் சென்னையை நோக்கிப் பயணப்படும் கனவுகள் நிறைந்த பல ஆயிரம் இளைஞர்களில், செந்திலும் ஒருவன். ஊரில் மன்னார் ஸ்டுடியோவில் எடுத்த புகைப்படத்தின் பின்னால் செல்போன் நம்பரை எழுதி, எத்தனையோ சினிமா கம்பெனிகளில் எத்தனையோ அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம் கொடுத்துவிட்டு, ஒவ்வொரு முறை போன் ஒலிக்கும்போதும் நம்பிக்கையோடு ஏமாந்திருக்கிறான். அவனுடைய முன்கதைக்கு இதற்கு மேல் இங்கே நேரம் இல்லை.

செந்தில் போனை பாக்கெட் டில் போட்டுக்கொண்டு

மேன்ஷனின் மூன்றாவது மாடிக்கு இறங்கினான். மூன்றடி அகலக் குறுகலான காரிடாரில் நடந்தான். ஆறாம் நம்பர் கதவை இரண்டு முறை குட்டி னான். திறக்கவில்லை. மறுபடி தட்டுவதற்காகக் கை வைத்தபோது, கதவு தானாகத் திறந்துகொண்டது.

'கோபி...' என்று சன்னமாகக் குரல் கொடுத்தான். பதில் இல்லை. எட்டிப்பார்த்தான். சுவரில், விதவிதமான போஸ்டர்களில் சூப்பர் ஸ்டார் யோசித்தார், தலையைக் கோதினார், நரைத்த வழுக்கையுடன் இடுங்கிய கண்களால் மலர்ந்து சிரித்தார்.

கோபியைக் காணவில்லை. செந்தில் அறைக்குள் நுழைந்தான். ஒற்றைக் கட்டில். சுத்தமான படுக்கை விரிப்பு. சுகந்தமான ஒரு வாசம். டால்கம் பவுடர், டியோடரன்ட், பெர்ஃப்யூம்...

சௌந்தரிடம் ஆறாவது உதவியாளனாக இருப்பதாகத்தானே கோபிசந்த் சொன்னான். அட்டாச்டு டாய்லெட்டுடன் சிங்கிள் ரூம் எடுத்துக்கொள்கிற அளவுக்கு வசதியானவனா..? ('சொந்தமா கேமரா இல்ல, பிரதர். சீனியர்கிட்ட கேட்டிருக்கேன்.’)

குளிக்கிறானா? பாத்ரூமை நெருங்கினான்.

திடீரென்று காற்றில் ஓர் அசைவு. என்ன என்று உணரும் முன், பின்னால் இருந்து வலுவான ஒரு கை செந்திலைப் பிடித்து இழுத்தது. வாயையும் மூக்கையும் சேர்த்து நீளமான, உறுதியான விரல்கள் அழுத்தின.

'அசைஞ்சே... சீவிருவேன்!' என்று காதில் குரல் அதட்டியது. கழுத்தில் சிலீரென்று கூரான கத்தி முனை பதிந்தது. செந்தில் உறைந்தான்!

-தடதடக்கும்...