Published:Updated:

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்

##~##

கிர்ணிப்பழம் சைஸில் இருந்தது அந்தக் கொய்யாப்பழம். 'இவ்ளோ பெரிசா?’ என வாய் பிளந்தபோது, ''தாய்லாந்தில் இருந்து வந்திருக்கு சார். ஹைபிரிட் கொய்யா!'' என்றார் பழக் கடைக்காரர். பக்கத்தில், அப்படியே நம் ஊர் கொய்யா சைஸில், கொட்டை இல்லாத கலிஃபோர்னியன் திராட்சை; செக்கச்செவேல் என காபூல் மாதுளை, விதை இல்லாத பெரிய இலந்தை, 'லேத்’தில் அடித்துச் செய்ததுபோல் வார்த்தெடுத்த பளபள பெங்களூரு கேவன்டிஷ் வாழைப்பழம். விவரம் அறியாப் பழக்கடைக்காரர், ''எல்லாமே நல்ல இனிப்பு சார்... நல்ல ருசி!'' என்றார். 'இனிப்பு மட்டும்தான் பழத்தின் சுவையா?’ என்ற யோசனையுடன் கொஞ்சம் நகர்ந்தபோது, கண்ணைக் கவரும் மஞ்சள் வண்ணத்தில் ஆஸ்திரேலியன் ஆரஞ்சு கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன.

 வழக்கமாக, கொஞ்சம் தொளதொளவென்ற தோலுடன், உரிக்க ரொம்பத் தோதாக இருக்குமே... அந்த கமலா ஆரஞ்சைக் கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடிவது இல்லை. ஆனால், கமலா ஆரஞ்சு பெயரில் ஏராளமான ஆரஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு, அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவை எல்லாம் 'கமலா’வுக்கோ, 'கமலாவின் பாட்டி’க்கோ தூரத்து உறவுகூடக் கிடையாது. இப்படி எல்லாமே பெரிது பெரிதாக, கண்களை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆறாம் திணை

ஈர்க்கும்படியான நிறத்திலும் உருவத் திலும் இறக்குமதி செய்யப்படும் இவை எந்த அளவுக்கு உடலுக்கும் உழவுக்கும் நல்லது?

'இனிப்புச் சுவைக்கு ஸ்வீட் எல்லாம் கொடுத் துப் பிள்ளைங்களைக் கெடுக்காதீங்க... பழம் சாப்பிடச் சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப பழங்கள் மேலயும் பழி சொல்றீங்க!’ என்று பதற வேண்டாம். பழங்களைப் பரிந்துரைப்பதன் காரணமே, அதில் நிறைந்திருக்கும் கனிமங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல்வேறு உயிர்ச் சத்துக்கள் மற்றும் இவை எல்லாவற்றையும் கூட்டு இனிப்பு சேர்த்து சுவைபட அவை வழங்கும் அற்புதமான மருத்துவத் திறனுக்காகத்தான். ஆனால், இப்படிப் பருமனாக வரும் ஒட்டு இனங்கள் எத்தனை சத்து நிரம்பியவை? அதிக இனிப்பும், பருமனும், கூடுதல் சாறும் மட்டுமே இவற்றில் கிடைக்கும். ஒட்டு ரகங்களின் கூடுதல் இனிப்பைப் பார்த்தால், 'கொஞ்சம் வைட்டமின் தெளித்த மைசூர்பாகு தேவலையோ?’ எனத் தோன்றுகிறது.

கர்ப்பிணிக்கும் பாலூட்டும் அன்னைக்கும் உகந்தது என்பதால், மாதுளைக்கு எப்போதும் கனி வகையில் தனி இடம் உண்டு. ஆனால், தற்போது கண்ணை ஈர்க்கும் காபூல் மாதுளையின் இனிப்பு, நம் ஊர் நாட்டு மாதுளையை ஓரங் கட்டுகிறது. அதிக இனிப்புடன் இருக்கும் இவை கர்ப்பிணிக்கும் சர்க்கரை வியாதிக்காரருக்கும் சங்கடம் அல்லவா? மெள்ள உள்வாங்கும் இனிப்புடன், இரும்புச் சத்தையும், நார்ச் சத்தை யும், இதயத்துக்குப் பயன் அளிக்கும் புளிப்பின் சுவையும் நமக்குத் தரும் உள்ளூர் மாதுளை, விலை குறைவாக, ஓரமாக இருப்பது வேதனை.

மதுரை, தேனிப் பக்கம் கொடி கட்டிப் பறக்கும் கொட்டை உள்ள பன்னீர்த் திராட்சையின் உள்ளே இருக்கும் விதைகூட ஆரோக்கியம் நல்கும் மருந்து என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'மஸ்கட் திராட்சை’ என விவசாயிகளால் அழைக்கப்படும் இந்தப் பன்னீர் திராட்சையின் கொட்டையில் உள்ள எண்ணெய், இதய நோய்க்கு மருந்து. 'ரிஸ்வெரட்ரால்’ எனும் சத்து நிறைந்திருக்கும் இந்த கிரேப் சீட் ஆயிலுக்கு இப்போது கிரேக்க உலகிலும் வளர்ந்த நாடுகளிலும் ஏக கிராக்கி. ஆனால் நாமோ, 'இதென்ன துவர்க்கிறது’ எனத் திராட்சையைத் தின்றுவிட்டு, கொட்டையைத் துப்புகிறோம். புத்திசாலி அயல் வணிகர்கள், கலிஃபோர்னியன் இனிப்பு திராட்சையை நமக்குக் கூடுதல் விலையில் தந்துவிட்டு, திராட்சை விதை எண்ணெயைக் கேப்சூல் குப்பியில் அடைத்து, மருத்துவரை வைத்து மிரட்டிச் சாப்பிடவைக் கிறார்கள்.

ஆறாம் திணை

ஏற்கெனவே சந்தையில் இருக்கும் பெரும்பாலான கனிகள் ஒட்டுரகம்தான். இன்னும் இன்னும் இறக்குமதி செய்யப்படும் புதுப்புது ஒட்டுக்கள் மூலம், இனிப்பாக, பெரிதாக நமக்குள் புகும் சுவைகள், இத்தனை நாள் இருந்துவந்த பழங்களின் பொத்தாம்பொதுவான பயனையும் காலி செய்துவிடுமோ என்று அஞ்சவைக்கிறது. உணவின் சத்து விஷயம் இப்படி என்றால், ஹைபிரிட்டாக வரும் தாவரங்களுக்குத் தேவைப்படும் உரமும், பூச்சிக்கொல்லியும், தண்ணீரும், மண்ணை யும் விண்ணையும் மாசுபடுத்தும் கேடு இன்னொரு பக்க வேதனை.

'இத்தனை கோடி மக்களுக்கு, இப்படிக் கூடுதல் மகசூல் தரும் தாவரங்கள் இல்லாமல் காட்டுப் பக்கம் பறித்து வருவதைவைத்து எப்படிப் பசி ஆற்றுவது? பிராக்டிகலாப் பேசுங்க பாஸ்!’ என இணையத்தில் இதைப் படிக்கும் யாரேனும் திட்டி எழுதக்கூடும். போதாக்குறைக்கு, போன வாரம் நமது பிரதம மந்திரி வேறு, 'விவசாயத்தில் தொழில்நுட்பம் ரொம்ப அவசியம். மேம்போக்காக எதிர்க்க வேண்டாம். விவாதிக்க வேண்டும்’ என்று இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிஉள்ளார். நாங்களும் தொழில்நுட்பத்தை மேம்போக்காக எதிர்க்கவில்லை. விவாதிக்க வாருங்கள்; எவ்வித உள் நோக்கமும் இன்றி, பாரபட்சமின்றி, 'நான் படித்த அறிவியல் உன் அனுபவத்தைவிட மேலானது’ என்ற மமதை இன்றி விவாதிக்க வாருங்கள். அதில் பிறக்கும் விடை மட்டும் தான் சூழலுக்கு இசைவாயிருக்கும்; சாமானியனுக்கும் சுகாதாரம் தரும். நாட்டின் இறையாண்மைக்குப் பலம் தரும்; வாருங்கள் விவாதிப்போம்!

- பரிமாறுவேன்...