Published:Updated:

விகடன் மேடை - ஸ்டாலின்

விகடன் மேடை - ஸ்டாலின்

##~##

எஸ்.அங்கயற்கண்ணி, காரைக்கால்.

 ''ஒரு சில நண்பர்களைக்கூட அரசியல் பிரிக்கிறதே... இதற்குக் காரணம் என்ன?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நட்பை அரசியல் கண்கொண்டு அணுகுவதால்தான்!''

கே.அருண், வந்தவாசி.

''தி.மு.க-வில் இளைஞர் அணிக்கு மட்டும் ஏன் கூடுதல் முக்கியத்துவம்? நீங்கள் அதன் பொறுப்பாளராக இருப்பதால்தானே?''

''அப்படி இல்லை. தி.மு.க-வைப் பொறுத்த வரை இளைஞர் அணியைப் போலவே மகளிர் அணி, தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, வழக்கறிஞர் அணி என அனைத்து அமைப்புகளுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஓர் இயக்கத்திலும் மற்ற பிரிவுகளைவிட, இளைஞர்கள் அதிகமாக இருப்பார்கள். அதனால், அந்த அணிக்கு முக்கியத்துவம் இயல்பாகவே கிடைத்துவிடும்.

இளைஞர் அணியை மதுரை ஜான்சி ராணி பூங்காவிலே தொடக்கிவைக்கும்போது தலைவர் கலைஞர், 'இது தி.மு.கழகத்துக்குத் துணை நிற்குமே தவிர, இணை அமைப்பு அல்ல’ என்று கட்டளை இட்டார். அந்தக் கோட்டைத் தாண்டாமல்தான் இளைஞர் அணி இதுவரை செயல்பட்டு வந்தது... இனியும் அப்படித்தான் செயல்படும்!''

விகடன் மேடை - ஸ்டாலின்

க.மோகன், மங்கலம்.

 ''கல்லூரி நாட்களில் காதல் அனுபவங்கள் உண்டா?''

''அந்தப் பருவத்திலேயே பொதுப்பணி உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அதனால், அப்போது காதலிக்க நேரம் இல்லை!''

இரா.கமலக்கண்ணன், சித்தோடு.

''விஜயகாந்தின் அரசியல், திரைப்படச் செயல்பாடுகள்பற்றி உங்களது பார்வை..?''

''கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார். அந்தப் பிழையினால் ஏற்பட்ட பின்னடை வுகளை அவர் கண்கூடாகக் கண்டு வருகிறார். எனவே, அந்தப் பிழையைத் திருத்தும் பரிகாரத்தைத் தேடும் பண்பட்ட மனநிலையிலே அவர் இருந்துவருகிறார்.

திரைத் துறையைப் பொறுத்தவரையில், அவர் நடித்த 'சின்னக்கவுண்டர்’, 'கேப்டன் பிரபாகரன்’, 'ரமணா’ ஆகிய படங்கள் எனக்குப் பிடித்தவை!''

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

''தி.மு.க-வை விமர்சித்து கேலி, கிண்டல், நையாண்டி செய்து விகடனில் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அதிலேயே வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முன்வரும் உங்கள் பண்பு, தமிழக அரசியல் சூழலில் ஆச்சர்யம் அளிக்கிறதே?''

'' 'செவி கைப்பச் சொற்பொறுக்க’ வேண்டும் என்பது அய்யன் வள்ளுவரின் அறிவுரை. உள்நோக்கம் அற்ற யதார்த்தமான அனைத்து விமர்சனங்களும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால், சிலர் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு செயல்படும்போது கண்டிக்க வேண்டியிருக்கிறது. விகடனில் விமர்சனங்கள் வரும்போது அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, நம்மை நாமே பார்த்துக்கொள்ள அவை உதவுகின்றன. வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, அவர்களுடன் நேசத்தை வளர்த்துக்கொள்ளவும் விளக்கம் அளித்து ஒளியேற்றவும் பயன்படுகிறது!''

ஆ.கமலக்கண்ணன், புதுச்சேரி.

''இசைமுரசு நாகூர் ஹனீபா... பெயரைச் சொன்னதும் உங்களுக்கு நினைவு வருவது எது?''

'' 'ஓடி வருகிறான் உதயசூரியன்...’

  'அழைக்கின்றார்... அழைக்கின்றார்... அண்ணா...’

'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’

'இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...’

'வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா...’

- என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த 'தனிமனித வானொலி’. அவர் குரலுக்கு மனதைப் பறிகொடுத்த அனைவரும் இயக்கத்துக்குள் இணைந்து இரண்டறக் கலந்துவிட்டார்கள். திராவிட இயக்கம் இருக்கும் வரை அதன் செவிகளில் தூரத்து இடி முழக்கமாக இசைமுரசுவின் எக்காளப் பேரொலி எதிரொலித்துக்கொண்டே இருக்கும்!''

வி.குமரேசன், தூத்துக்குடி.

''நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார்?''

விகடன் மேடை - ஸ்டாலின்

''மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக் கூடாத மனிதர் ஒருவரைச் சொல்கிறேன். அவர்... சிட்டிபாபு!

என் மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன் மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்!

அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி யான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும். நான் சொல்வதை விட அண்ணன் சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் இப்படி எழுதுகிறார்...

'தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கைநீட்டினான். கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. எனக்கென்று ஒரு துணிவு. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தடிகள் கழுத்தில் விழுந்தன. அவை அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக்கொண்டேன்’ என்று கதறக் கதற எழுதி இருப்பார் சிட்டிபாபு. இத்தகைய விழுப்புண்களைத் தாங்கி விண்ணுயர இயக்கத்தை வளர்த்தவர்கள் தி.மு.க-வின் வீரர்கள். அத்தகைய தீரர்களில் ஒருவர் சிட்டிபாபு!''

அ.கணேசன், காஞ்சிபுரம்.

''ஊடகங்களால் (நாடகம், திரைப்படம், இதழ்கள்) வளர்ந்த இயக்கம் தி.மு.க. ஆனால், இந்நாளைய ஊடகங்களான (இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர்) ஆகியவற்றை நீங்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே?''

''இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். மேலும், அதை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பான ஆலோசனையில் இருக் கிறோம். எனினும் இதழ்கள், திரைப் படம், நாடகம் போன்று அனைத்துத் தரப்பு மக்களையும் இவை எளிமை யாகவும் வலிமையாகவும் நெருக்க மாகவும் சென்றடைந்திட முடியுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்பட வில்லை.''

கோ.பகவான்,  பொம்மராஜுபேட்டை.

''நீங்கள் கடைசியாக அழுதது எப்போது? எதற்காக?''

விகடன் மேடை - ஸ்டாலின்

''சேலம் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மறைந்தபோது ஆற்றாது அழுதேன். சேலம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழகத்தைக் கட்டிக்காத்தவர். சோதனைகள் பல வந்தபோதும் குன்றென நிமிர்ந்து நின்றவர். சாதனைகள் பலவற்றைச் செய்துகாட்டியவர். அவர் பழக்கத்தில் சேலத்து மாங்கனி. பகையை அழிப்பதில் சினங்கொண்ட சிங்கம்.

'தி.மு.கழகத்தின் தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது. சேலத்துச் சிங்கமான எனது தளபதியை இழந்த துக்கம் என்னை வாட்டி வதைக்கிறது’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் தேம்பித் தேம்பி அழுதபோது, நானும் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதேன்!''

அடுத்த வாரம்...

திருத்தம்: கடந்த இதழில் குறிப்பிடப்பட்ட 'எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடல் கவிஞர் கண்ணதாசனாலும், 'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ பாடல் கவிஞர் உடுமலை நாராயண கவியாலும் எழுதப்பட்டவை.

- இன்னும் பேசுவோம்...