Published:Updated:

யட்சன்

சுபாஓவியம் : ஸ்யாம்

##~##

செந்திலுடைய இதயம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் துடித்தது.

 ''கோ... கோ... கோ...பி...'' என்று முனகினான். பின்னால் இருந்து பிடித்திருந்தவன், நிலைக்கண்ணாடிக்கு எதிரே அவனை அப்படியே சற்று நகர்த்தினான். இருவருடைய பிம்பங்களும் தெரிந்தன. தன்னுடைய முகம் இவ்வளவு கோரமாக மாறும் என்று செந்தில் நினைத்ததே இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்னால் இருந்தவன், இவனைவிட ஆறு அங்குலமாவது உயரமாக இருந்தான். சற்றே அகலமான நெற்றி. அடர்ந்த புருவங்கள். ஒளிரும் விழிகள். நேரான நாசி. குறைந்தது ஒரு வாரமாவது ஷேவ் செய்யப்படாத மீசை, முள்தாடி. அதற்கு மேல் கவனிக்க நேரம் கொடுக்காமல், அவன் சட்டென்று பிடிப்பைத் தளர்த்தினான்.

''ஸாரி பிரதர்... என் லவ்வரோட அண்ணன் மெரட்ட ஆள் அனுப்பியிருக்கான்னு நினைச்சுட்டேன்'' என்று கத்தியை விலக்கிக்கொண்டான். ஒலிபரப்பாளர்களைப் பொறாமைகொள்ளவைக்கும் உறுதியான குரல். அச்சத்தில் இருந்து முழுமையாக விடுபடாமல், செந்திலுடைய மார்பு பொங்கிப் பொங்கித் தழைந்தது.

''கோ... கோபி இல்ல?''

''நீங்க ரூம் மாறி வந்துட்டு, என்னைக் கேள்வி கேக்கறீங்க? இங்க என்னைத் தவிர எவனும் இல்ல.''

யட்சன்

உதறும் விரல்களைக் கட்டுப்படுத்தி ''என் பேரு செந்தில்...'' என்று இவன் நட்பு டன் கை நீட்டினான்.

''நான் கேக்கலியே..!'' என்று தோளில் சற்று அழுத்தமாகவே கை வைத்து அறைக்கு வெளியே அனுப்பி, கதவை அவன் பட்டென்று அறைந்து சாத்தினான்.

கசங்கிய சட்டையை நீவிவிட்ட படி செந்தில் திகைத்து நின்றான். என்ன ஆள் இவன்..? தப்பான கழுத்தில் கத்தி வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வுகூடவா இல்லை? சுதாரித்து, கோபிசந்தின் எண்ணுக்கு டயல் செய்தான். இரண்டு கதவுகள் தள்ளி, போன் ஒலித்தது. அந்தக் கதவு திறந்தே இருந்தது. கேமரா லென்ஸை டிஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொண்டே, கோபிசந்த் நிமிர்ந்தான்.

''வாங்க செந்தில்...''

கோபிசந்த் ஓர் உற்சாகப் பந்து. அவனும் மதுரைப் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அடர்த்தியான கறுப்பு. சிரிக்கையில் பல் வரிசை பளீரென்று மின்னலாகத் தாக்கும். கண்களில் உயிர் இருக்கும். எப்போதும் காலர் வைக்காத டி ஷர்ட்தான்.

''நீங்க நாலுன்னு சொன்னத ஆறுன்னு நெனைச்சி, தெரியாம எதிர் ரூமுக்குள்ள போயிட்டேன்.''

''ஐயோ, அது சிங்கிள் ரூம். அவ்வளவு வாடகை நமக்குத் தாங்காது. அட்டாச்டு டாய்லெட் வேற. யார் க்ளீன் பண்றது? காமன் டாய்லெட்னா, தெனம் சுத்தம் பண்ணிடறாங்க. பிரச்னை இல்ல.''

''கத்திலாம் வெச்சிருக்கான் கோபி... யார் அது?''

''மூஞ்சியே பாத்ததில்ல... ரெண்டு வாரம் முன்னாடிதான் வந்தான். எப்ப வரான், எப்ப போறான்னு புரியல. ரூம்லேர்ந்து ரஜினி பாட்டு கத்திட்டு இருந்தா, இருக்கான்னு அர்த்தம்.''

கோபிசந்த் கேமராவை எடுத்துக்கொண்டான். ''போலாமா..?''

ஆழமான படிகளில் இறங்கினார்கள். மேன்ஷன் இருந்தது ஒரு குறுகலான சந்து. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தேய்த்துக்கொள்ளாமல் எதிரெதிரே கடப்பதே சாமர்த் தியம்.

கோபிசந்த், தன் பைக்கை உதைத்துக் கிளப்பினான்... ''ஏறுங்க..!''

கடற்கரை.

கரையோரப் படகு. குவித்துவைத்த நைலான் வலைகள். பரந்துவிரிந்த மணல்வெளி. ஆரஞ்சு வானம். வெவ்வேறு பின்னணியில் கோபிசந்த் அவனைக் கிளிக்கினான்.

''கொஞ்சம் லைட் வாங்கிக்கங்க... சின் அப்... லுக் இங்க...''

கிட்டத்தட்ட 40 நிமிடங்களில் 200 டிஜிட்டல் பிம்பங்களில் செந்தில் சிறைபட்டான்.  

பைக்கில் ஏறியதும், ''மல்லிகா மெஸ்ஸுக்கு விடுங்க'' என்றான். திருவல்லிக்கேணி மேன்ஷன்களை நம்பி, பல தனியார் மெஸ்கள் சந்துவாரியாக சிதறிக்கிடந்தன.

'மல்லிகாவுல இட்லி நல்லாயிருக்கும். குபேர்ல ஆனியன் ஊத்தப்பம் சூப்பர். ஜானுவுல சட்னி வீணாப் போயிருக்கும். வேலுல பிரியாணி பின்னும்!’ என்று அவ்வப்போது ரூம்வாசிகளால் வாய்வார்த்தையாக ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகும்.

மல்லிகா மெஸ். முதுகு இல்லாத பழமையான மர பெஞ்ச். வாழையேடு. 'டொக்... டொக்...’ என்று ஒலியுடன் வைக்கப்பட்ட டம்ளர்களில், கெட்டில் தும்பிக்கை மூலம் நீர் நிரப்பப்பட்டது.

''செட் தோச, வடகறி ரெண்டு.''

இலையில் தண்ணீர் தெளித்துத் துடைத்தபடி, ''அப்பா என்ன பண்றாரு செந்தில்?'' என்றான் கோபிசந்த்.

''கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர்.''

''மனசு வந்து சினிமாவுக்கு அனுப்பினாரா?''

யட்சன்

''ஆளைப் பாத்தீங்களே? 'ரெண்டு தங்கைங்களையும் கரையேத்தறது உன் பொறுப்பு’னு மெரட்டினாரேனு, டிகிரி முடிச்சதும் ஸ்கூட்டர் விக்கற கடையில கொஞ்ச நாளைக்கு சேல்ஸ்மேனா இருந்தேன். அங்கேயே மேனேஜர் லெவலுக்குப் போவேன்னு அவர் கனவு கண்டாரு. என் கனவு சென்னை. சினிமா. ஹீரோ. சொன்னதும் கோவத்துல பாதி சாப்பாட்டுல எழுந்து போயிட்டாரு. அம்மாவுக்கும் பிடிக்கல. தெனம் வீட்ல சண்டைதான். வீட்டுக்குச் சொல்லாமதான் ஓடி வந்திருக்கேன்.''

''இப்போ, லாட்ஜுக்கு வாடகையெல்லாம் எப்படிக் கொடுக்கறீங்க?''

அதற்குப் பதில் சொல்வதற்குள், செந்திலின் பார்வையில் அவன் வந்தான். செந்தில் குரலைச் சற்றே குறைத்துக்கொண்டு, ''உடனே திரும்பிப் பாக்காதீங்க. கத்தியைக் காட்டி மெரட்டினான்னு சொன்னேனே, ஆறாம் நம்பர் ரூமு... அவன் இங்க வந்திருக்கான்'' என்றான்.

-தடதடக்கும்...