Published:Updated:

"என்னையும் ஷீலாவையும் ஏமாற்றிய படம்!"

"என்னையும் ஷீலாவையும் ஏமாற்றிய படம்!"

"என்னையும் ஷீலாவையும் ஏமாற்றிய படம்!"
##~##

சென்ற வாரம் ஒரு நாள் மாலை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வழியாகப் போக நேர்ந்தது. அந்தச் சமயம், கல்லூரி விட்டு மாணவிகள் வெளியே வந்துகொண்டு இருந்தார்கள். நான் நடிக்க வராதிருந்தால், அதே கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றிருப்பேன். அந்தக் கல்லூரியைப் பற்றிய ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். சர்ச் பார்க் கான்வென்ட்டில் மெட்ரிக் முடித்த எங்கள் வகுப்பு மாணவிகள் 45 பேரும் ஸ்டெல்லா மேரீஸ் காலேஜில் சேர முடிவு எடுத்து, அந்தக் காலேஜிலேயே விண்ணப்பித்தோம். எங்கள் எல்லோருக்கும் அந்தக் கல்லூரியிலேயே இடமும் கிடைத்தது. நான் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் வாங்கிய மார்க்குகளைப் பார்த்து அகில இந்திய உபகாரச் சம்பளமே கிடைத்தது. அந்த நேரத்தில்தான் திரு ஸ்ரீதர் என்னிடம் 'வெண்ணிற ஆடை’ படத்தில் நடிக்கும்படி அழைத்தார். என் அம்மாவோ, ''இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. படிக்கப்போகிறாயா அல்லது நடிக்கப்போகிறாயா என்பதை நீயே முடிவெடுத்துச் சொல்'' என்று கூறிவிட்டார். நானும் யோசித்தேன். எவ்வளவோ பேருக்குப் பல ஆண்டுகள் காத்திருந்தும் சினிமாவில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பது இல்லை. எனக்குக் கைமேல் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை விடுவதா... வேண்டாமா என்று என்னுள் பல முறை சிந்தித்து, கடைசியில் நடிக்கலாம் என்று தீர்மானம் செய்தேன். இருந்தாலும், ஒரு நாளாவது கல்லூரி வகுப்புக்குப் போக வேண்டும் என்ற ஆசை இருந்தது. கல்லூரிக்கு ஏற்கெனவே பணமும் கட்டிவிட்டேன். அரை நாளாவது கல்லூரிக்குப் போகலாம் எனத் தீர்மானித்து, ஒருநாள் காலை கல்லூரிக்குச் சென்றேன். வகுப்பறைக்குள் சென்றேன். கையில் புத்தகம், பேனா, நோட்புக் ஒன்றும் எடுத்துச் செல்லாமல், வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து தோழிகளிடம் பேசிக் கொண்டு இருந்தேன். வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டு இருந்த விரிவுரையாளர், ''பாடம் நடக்கும்போது, யார் அங்கு பேசிக்கொண்டு இருப்பது?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"என்னையும் ஷீலாவையும் ஏமாற்றிய படம்!"

என்று கடுமையுடன் என் னைப் பார்த்து பெயரையும் கேட்டார். நானும் ''ஜெய லலிதா'' என்று சொல்லி உட்கார்ந்தேன். புத்தகத்தில் சில பகுதிகளை ஒவ்வொருவரையும் படிக்கச் சொன்னார். என் முறை வந்தபோது, ''புத்தகம் கொண்டுவரவில்லை'' எனக் கூறினேன். அவருக்கு இது மேலும் எரிச்சலை உண்டாக்கியது. மூன்றாம் முறையாகச் சில குறிப்புகளை எழுதிக்கொள்ளச் சொன்னார். நானோ எழுதாமல் உட்கார்ந்து இருந்தேன். அவரோ என்னைக் கோபத்தோடு பார்த்து, ''புத்தகமும் கொண்டுவரவில்லை; குறிப்பும் எடுத்துக்கொள்ளவில்லை; பேசிக்கொண்டு இருக்கிறாய். எதற்குத்தான் கல்லூரியில் சேர்ந்தாய்?'' எனக் கோபித்துக்கொண்டார்.

 நான் கான்வென்ட்டில் படித்தபோது ஒரு நாள்கூட எந்த ஆசிரியரிடமும் திட்டே வாங்கியது இல்லை. என்னை யாரும் கோபித்துக்கொண்டதும் இல்லை. ஆனால், கல்லூரியில் இருந்த அரை நாளில் மூன்று முறை திட்டு வாங்கியதை என்னால் மறக்க முடியாது.

ன் பரத நாட்டிய அரங்கேற்றம் திரு சிவாஜி கணேசன் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரையில் என்னைப் பாராட்டிவிட்டு எனக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்றும் சொன்னார். அப்போதுதான் முதன்முதலாக நான் சிவாஜியைச் சந்தித்தது.  வருடங்கள் சென்றன. அவரது படங்களைப் பார்ப்பது உண்டே தவிர, அவரை நேரில் சந்தித்தது இல்லை. ஒருநாள் 'இருவர் உள்ளம்’ படப்பிடிப்புக்கு என் அம்மாவுடன் சென்றிருந்தேன். முதலில் சிவாஜி என்னை அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. எனது அம்மா சொன்ன பிறகே, ''உன் மகளா... இப்படி வளர்ந்துவிட்டாளே'' என்று கூறினார். நான் 'வெண்ணிற ஆடை’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்த சமயம், ஒருநாள் நானும் அம்மாவும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தோம். அன்று யாருக்கோ விடைகொடுக்க சிவாஜியும் விமான நிலையத் துக்கு வந்திருந்தார். என்னைப் பார்த்த சிவாஜி ''என்னம்மா... படத்தில் நடிக்கிறாயாமே... என்னுடன் எப்போது கதா நாயகியாக நடிக்கப்போகி றாய்?'' என்று கேட்டார். நான் வெட்கத்துடன் மௌன மாக இருந்தேன். அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 'கலாட்டா கல்யாணம்’ படத்தில் அவருடன் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

முதல் நாள் செட்டுக்கு சிவாஜி வந்தார். என் உடை அலங்காரத்தைப் பார்த்து, ''வெரிகுட். முதன்முதலாக என்னுடன் கதாநாயகியாக நடிக்கிறாய். நாம் இருவரும் சேர்ந்து நடிக்கும் இந்தப் படத்தை ஒரு வெற்றிப் படமாக்குவோம். ஒத்துழைப்புத் தருகிறாயா?'' என்று கேட்டார். நானும் ''கண்டிப்பாக'' என்று சொன்னேன்.

"என்னையும் ஷீலாவையும் ஏமாற்றிய படம்!"

படமும் 100 நாட்கள் ஓடின. அவருடன் சேர்ந்து நடித்த முதல் படமே 100 நாட்கள் ஓடியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சிவாஜியைப் பற்றி இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். தான் நடிக்கும் கட்டத்தில், தனக்கு எதிராக நடிப் பவர்கள் யாராக இருந்தாலும், அவருக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து, காட்சியைச் சிறப்பாகச் செய்து முடிப்பார். நான் நடிகையாக இருந்தாலும் உங்களைப் போலத்தானே நானும். சில சமயம் நான் வீட்டில் இருந்து ஏதாவது மன வருத்தத்தோடு வருவேன். செட்டுக்குள் வரும்போதே சிவாஜி என்னை உற்றுப்பார்த்து, நான் எப்படி வருகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டுவிடுவார். அருகில் உட்கார்ந்து, விஷயத்தைத் தெரிந்துகொண்டு 'மூடை’ மாற்றி, காட்சியில் சிறப்பாக நடிக்கவைத்துவிடுவார். ஆனால், ஒரு வேடிக்கையான சம்பவம் 'எங்கிருந்தோ வந்தாள்’ படப்பிடிப்பின்போது நடந்தது. படத்தில் வரும் கற்பழிப்புக் காட்சிக்கு அடுத்து, நான் சோகமாக வெறித்துப் பார்ப்பதுபோல ஒரு காட்சி வருகிறதல்லவா? முதல் நாள் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் சமயம், டைரக்டர் திருலோகசந்தர் என்னிடம், மறுநாள் அந்தக் காட்சியை எடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், உண்மையாகவே மறுநாள் வீட்டில் கோபித்துக்கொண்டு, மன வருத்தத்துடனேயே செட்டுக்குள் வந்தேன். அப்போது என்னைப் பார்த்த சிவாஜி, ''திருலோக், உடனே காட்சியை எடுத்துவிடு. அம்மு இன்னிக்கு 'மூட்’லயே வந்திருக்கு'' என்று கூறி அவசரமாக ஷாட்டை எடுக்கவைத்தார். அந்தக் காட்சி மிகத் திருப்திகரமாகப் படமாக்கப்  பட்டது. பிறகுதான், சிவாஜி என்னிடம் வந்து வழக்கம்போல விசாரித்து, எனது 'மூடை’ மாற்றினார்.

நானும் ஷீலாவும் நெருங்கிய தோழிகள் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால், நாங்கள் பெரும்பாலும் சந்தித்துப் பேசுகிற இடம் தெரியுமா? முக்கால் பகுதி ஏதாவது ஒரு சினிமா தியேட்டரில்தான்.

சமீபத்தில் ஷீலா நடித்த 'முத்தாஸி’ (muthasi) என்ற படத்தை இருவருமாகச் சேர்ந்து பார்ப்ப தாக முடிவுசெய்தோம். எனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவருக்குப் படப்பிடிப்பு இருக் கும். அவருக்கு இல்லாத நாட்களில் எனக்கு இருக்கும். கடைசியாக இருவருக்கும் ஒருநாள் ஓய்வு கிடைத்தது. டிக்கெட்டும் ரிசர்வ் செய்துவிட்டோம். புறப்படுவதற்கு முன்புதான் தெரிந்தது; நாங்கள் எந்தப் படத்தைப் பார்க்க விரும்பினோமோ, அந்தப் படம் அதற்கு முன் தினத்தன்று நிறுத்தப் பட்டு, அன்றில் இருந்து 'சிக்ஷா’ என்ற ஷீலா நடித்த படமே திரையிடப்பட்டு இருக்கிறது என்று.

''நீ நடித்ததுதானே'' என்று கேட்டேன். இருவருமாக அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம்.