ஃபோட்டோ கமென்ட்
Published:Updated:

ராம்நாட் அவதார்!

ராம்நாட் அவதார்!

விதவிதமான கெட்-அப்களைக் கமல் மட்டும்தான் போட வேண்டுமா? ராமநாதபுரத்தில் அபர்ணாமணியும் போடுகிறாரே!

ராமநாதபுரத்தில் நீங்கள் எந்த இடத்தில், எந்த வேலையில் இருந்தாலும் அந்த இடத்தில் உங்களைக் கடந்து சென்றுகொண்டிருப்பார் அபர்ணாமணி.

ராம்நாட் அவதார்!

அதிகாலையில் எழும் 'அபர்ணாமணி’ என்ற மணிகண்டன், விடியும் முன்னே 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் திருப்புல்லானி கோயிலுக்குச் சென்று விடுகிறார். தோஷம் கழிக்க வரும் பக்தர்களுக்கு, சேதுக்கரை கடற்கரையில் அமர்ந்து சிறப்பு பூஜைகள் செய்வார். இது தினசரி வேலை. புதுவீடு, புதுக் கடைகளுக்கு கணபதி ஹோமம் செய்வதும் உண்டு. காலை 9 மணிக்கு ராமநாதபுரம் திரும்பிவிடும் மணி, தனது ஸ்ரீராம் ஸ்டுடியோவில் காத்துக்கிடப்பவர்களைப் புகைப்படங்கள் எடுத்துத் தள்ளுகிறார். கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைத்தால் ஸ்டுடியோ பக்கத்திலேயே உள்ள செல்போன் சர்வீஸ் சென்டரில் உட்கார்ந்து விடுகிறார். சர்வீஸ் முடிந்ததும் வந்து சேர்ந்த கூரியர்களைப் பிரித்து அடுக்கி டெலிவரிக்குக் கிளம்பிவிடுகிறார்.

மாலையில் தன் வீட்டில் அமர்ந்து தன் பிள்ளைகளுக்கும் தன் உறவினர் குழந்தைகளுக்கும் டியூஷன் எடுக்க வாத்தியார் அவதாரம் எடுப்பவர் 7 மணிக்கு மேல், தான் வாலன்ட்டியராக இருக்கும் ஆன்மிக அமைப்பின் புத்தக ஸ்டாலில் அமர்ந்து பக்தி புத்தகங்கள் விற்பனையில் ஈடுபடுகிறார். 10 மணிக்கு மேல் தான் வைத்திருக்கும் நாடகக் குழுவின் ஒத்திகையிலும் கலந்துகொள்கிறார்.

ராம்நாட் அவதார்!
ராம்நாட் அவதார்!
ராம்நாட் அவதார்!

''எங்கப்பா போலீஸ்ல வேலை பார்த்தவர். அந்தக் காலத்துல போலீஸ் வேலைக்கு சம்பளம் ரொம்பக் கம்மி. ரெண்டு அக்காவோடு சேர்த்து மொத்தம் ஆறு புள்ளைங்க. படிக்கிறதுக்கும் சாப்பிடுறதுக்கும் ரொம்பக் கஷ்டப்பட்டோம். அதனால, அப்பவே பார்ட் டைம் ஜாப் நிறைய பார்ப்பேன். விடுமுறை நாட்கள்ல சின்னச் சின்ன பிசினஸ் செய்வேன். மளிகைக் கடை, பெட்ரோல் பங்க் வேலைனு  எல்லாத்தையும் செஞ்சேன்.  அதே நிலைதான் இப்பவும் தொடருது. கொஞ்ச நாளுக்கு முன் வரைக்கும், இங்கே பிரபலமா இருந்த லோக்கல் சேனலான 'அபர்ணா டி.வி’- யில நியூஸ் ரீடரா இருந்தேன். அபர்ணாமணிங்கிற பேரு அதுல வந்ததுதான். ஒரு நாளிதழ்லயும் போட்டோகிராஃபரா இருந்தேன். அதனால, மத்த வேலைகள் பாதிக்கபட்டதால வேணாம்னு சொல்லிட்டேன்'' என்கிறார்.

- செ.சல்மான்