Published:Updated:

இந்த வருட பட்ஜெட்... என்ன செய்ய வேண்டும் அரசு?

ஒரு முன்னோட்டம்

இந்த வருட பட்ஜெட்... என்ன செய்ய வேண்டும் அரசு?

ஒரு முன்னோட்டம்

Published:Updated:
##~##

பட்ஜெட்டுக்கான அவசியத்தை அவ்வை பாட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். 'வரப்புயர நீர் உயரும், நீருயர நெல் உயரும், நெல்லுயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோலுயர கோன் உயர்வான்’ என்று அவ்வை சொன்னதற்கு அர்த்தம், ஒரு நாட்டில் இயற்கை வளங்களை செம்மையாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை வளர்த்தால், அந்நாட்டின் மக்களும், அரசும் உயர்வார்கள் என்பதே.

இன்றைய நவீன பொருளாதாரத்தில் அரசின் கொள்கைகளும், திட்டங்களும்தான் நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்திட முடியும் என்பதால், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு அரசின் எல்லா பொருளாதாரக் கொள்கைகளையும், திட்டங்களையும் ஒரு பட்ஜெட்டில் அடுக்கிவிட முடியாது என்றாலும், அரசின் மிகப் பிரதானமான

கொள்கைகள் / திட்டங்களின் பெட்டகமாக பட்ஜெட்டினை எடுத்துக் கொள்ளலாம். பட்ஜெட்டை ஆராய்ந்தறிவது தனிமனித, தொழில் நிறுவனங்களின் நிதி / பொருளாதாரத்திற்கு முக்கியம் என்றாலும், பட்ஜெட்டின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வது முக்கியம். காரணம், நம் ஒவ்வொருவரும் நம் நாட்டுப் பொருளாதாரத்தின் போக்கினால் வழி நடத்தப்படுகிறோமே தவிர, தனிமனிதனாக நாம் பொருளாதாரத்தை திசை திருப்பிவிட முடியாது.

இந்த வருட பட்ஜெட்... என்ன செய்ய வேண்டும் அரசு?

ஒவ்வொரு பட்ஜெட்டும் நாட்டின் சமகால பொருளாதாரப் பிரச்னைகளுக்குத்  தீர்வு காண்பதாகவும், எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுதலாகவும் இருக்க வேண்டும். எனவேதான், பட்ஜெட் சமர்பிப்பதற்கு முதல் நாள், இந்தியப் பொருளாதாரத்தை பற்றிய மதிப்பீட்டை‘ Economic Survey ’ என்ற ஆய்வறிக்கையாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்.

2012-13 ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, இந்த வருடம் இந்தியப் பொருளாதாரம் 7.6. சதவிகிதம் வளர்ச்சி அடையும் என்ற எதிர்ப்பார்ப்பை நிதி அமைச்சர் வெளியிட்டார். ஆனால், இவ்வாண்டின் முதல்

இந்த வருட பட்ஜெட்... என்ன செய்ய வேண்டும் அரசு?

இரண்டு காலாண்டில் (ஏப்ரல்-ஜுன், ஜூலை-செப்டம்பர்) இந்தியப் பொருளாதாரம் 5.5, 5.3 சதவிகித வளர்ச்சியை அடைந்தது. இந்தியாவில் முதலீடுகள் உயராமல் இருப்பது இந்த குறைந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசு பல கொள்கைகளை அறிவித்தது. சில்லறை வணிகம், காப்பீடு, விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் அந்நிய முதலீடுகளை அதிகரிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், இந்த முடிவுகளால் புதிய அந்நிய முதலீடுகள் உடனே வந்துவிடாது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உள்நாட்டில் முதலீடுகள் பெருகவேண்டு மெனில் வங்கி அளிக்கும் கடன் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று அரசும் தொழில் முனைவோரும் கூறிவருகின்றனர். பணவீக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதாலும், அரசு இந்த வருடம் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுபடுத்தாமல் அதிக கடன் வாங்கிக்கொண்டு இருப்பதாலும், வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது என ஆர்.பி.ஐ. கூறி வருகிறது.

இந்தியாவில், மந்தமான நிலையில் இருக்கும் பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்யாமல், பணவீக்கத்தை எதிர்கொள்ளும் பொருட்டு மக்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், தங்கம் இறக்குமதி அதிகரிக்கிறது. இதனைக் கட்டுபடுத்த அரசும், ஆர்.பி.ஐ.யும் முயன்று வருகின்றன. தங்கம் இறக்குமதிக்கு 6 சதவிகிதமாக வரி உயர்த்தியது இதன் ஒரு அங்கம்தான்.

அரசு தன் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமெனில், வரி வருவாயை அதிகரித்து, பொதுச் செலவுகளைக் குறைக்க வேண்டும். வரி வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பு, மந்தமான பொருளாதார சூழலில் குறைவு. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்பது, அலைகற்றை ஏலத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது என அரசு 2012-13-ல் முற்பட்டாலும் இதில் போதுமான வருமானத்தை அரசினால் பெற முடியவில்லை. அடுத்த ஆண்டிலாவது இந்த வழிமுறைகள் மூலம் அதிக வருமானம் பெற முடியுமா என அரசு முயற்சித்து வருகிறது.

பொதுச் செலவுகளில் மானியங்களின் அளவைக் குறைக்க டீசல் விலையை ஏற்றுவது, சமையல் எரிவாயு மானியத்தைக் கட்டுப்படுத்துவது நேரடி மானியம்     (Direct Benefit Transfer) வழங்க முற்படுவது எனப் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவற்றால் அரசு செலவுகளை ஓரளவிற்குக் குறைக்க முடியும் என்பது உறுதி.

இந்த வருட பட்ஜெட்... என்ன செய்ய வேண்டும் அரசு?

உலகமயமாக்கதின் விளைவாக, இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதார மந்தநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்களினால், இந்நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது.  2012- ல்  ஏப்ரல் - அக்டோபரில் மட்டுமே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதி 6.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவின் இறக்குமதி மட்டும் 2.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் அந்நிய வர்த்தகப் பற்றாக்குறை நம் நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 22.3 பில்லியன் டாலர் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையினால், இந்திய ரூபாயின் டாலர் மதிப்பு மிக வேகமாக இந்த வருடம் குறைந்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மார்ச் 2012 -ல் 50.32-ஆக இருந்த அமெரிக்க டாலர் இன்று (ஜனவரி, 20, 2013) 53.75 -ஆக உயர்ந்துள்ளது. இதுபோலவே யூரோ, யென் என எல்லா அந்நிய செலவாணி மாற்று விகிதமும் குறையத் தொடங்கியுள்ளது. முந்திய ஆண்டான 2011-12, பணவீக்கம் 9.62 சதவிகிதமாக இருந்து, தற்போது 7.59 சதவிகிதமாக குறைந்தாலும், இந்தியா மந்தமான பொருளாதார நிலையில் இருப்பதால் இந்த பணவீக்கம் அதிகமானதுதான் என எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த வருட பட்ஜெட்... என்ன செய்ய வேண்டும் அரசு?

இவ்வாறு குறைந்த பொருளாதார வளர்ச்சி, அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு, அதனால் அரசின் கடன் உயர்தல், ஏற்றுமதி குறைந்து, பன்னாட்டு வாணிபப் பற்றாக்குறை அதிகரித்தல், இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி சந்தை குறைதல், ஏறுமுகமான பணவீக்கம் என பல பொருளாதாரச் சிக்கல்களை தற்போது இந்திய அரசு சந்தித்து வருகிறது. இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாக 2013-14 பட்ஜெட் அமைய வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு.

இப்படி எதிர்பார்க்கும் சமயத்தில் கூடுதலாக எந்த வரியும் போட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள் மக்கள். ஆனால், கூடுதலாக எந்த வரியும் போடாமல் பிரச்னை தீருமா? இதை பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

(முன்னோட்டம் தொடரும்)

தோல் பையில் பட்ஜெட் !

பட்ஜெட் என்ற வார்த்தை bougette என்கிற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது. bougette என்றால் 'தோல் பை’ என்று அர்த்தம். பிரெஞ்சு நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு நிதி அமைச்சர், அரசின் வரவு-செலவு கணக்குகளை ஒரு தோல் பையில் வைத்து எடுத்துச் சென்றதால், அரசின் வரவு-செலவுக் கணக்குக்கு பட்ஜெட் என்ற பெயர் வந்தது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Constitution of India) பட்ஜெட் என்ற சொல் இல்லை. வருடாந்திர நிதி அறிக்கையைத்தான் (Annual Financial statement) நாம் பட்ஜெட் என்கிறோம். இந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை. எனவே, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி கடைசி வேலை நாளன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மார்ச் மாதம் முழுவதும் அது விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

செப்டம்பர் - அக்டோபரில் ஆரம்பமாகும் பட்ஜெட் தயாரிப்பு வேலைகள், பிப்ரவரி மாதக் கடைசி வாரத்தில் முடிவடையும். பட்ஜெட் பற்றிய முழு விவரங்களும் நிதி அமைச்சர், பிரதம மந்திரி தவிர மற்ற எவருக்கும் தெரியாது. பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நிதி அமைச்சக கட்டிடத்தில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்படும். இதை அச்சிடும் காலத்தில் அந்த ஊழியர்கள் யாரும் வீட்டுக்குச் செல்ல முடியாது.

பட்ஜெட் சமர்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்புதான் நிதி அமைச்சர் மற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய முடிவுகளை எடுத்துரைப்பார். அப்போதுதான் மற்ற அமைச்சர்களுக்கே பட்ஜெட் பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism