Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

DeoxyriboNucleic Acid, சுருக்கமாக DNA என்ற மூலக்கூறில்தான் நமது சரித்திரமும், சற்றே எதிர்காலமும் எழுதப்பட்டு இருக்கிறது. உங்கள் தலை முடியின் நிறத்தில் இருந்து இதயத் துடிப்பு வரை அனைத்தும் புரொகிராம் செய்யப்பட்டபடிதான் உங்கள் பிறப்பே நிகழ்கிறது. ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் எனப் பல்வேறு ஜன்களின் சங்கமமாக இருக்கும்DNA உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். பிறக்கும்போது நேர்த்தியாக இருக்கும் DNA ஆண்டுகள் கடக்கும்போது, சற்றே சிதற ஆரம் பிக்கும். இதுதான் வயதாவதன் அடிப்படை என்றெல்லாம் சொல்கிறார்கள் மூலக்கூறு ஆய்வு நிபுணர்கள்.

 DNA வால் பிராக்டிக்கல் பயன்பாடுகள் அதிகம் உண்டு. உதாரணத்துக்கு, தடயவியல் துறை DNA வை அடிப்படையாகக் கொண்டுதான் குற்றவாளிகளைச் சந்தேகத்துக்கு வழியே இல்லாத விதத்தில் கண்டறிகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

DNA பற்றிய அடிப்படைகள் ஒருபுறம் இருக் கட்டும்...

அறிவிழி

உங்களது உடலின் செல்களில் இருக்கும் DNA பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? உங்களது மூதாதையர் உலகின் எந்தப் பகுதியில் இருந்து வந்திருப்பார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா? ஒபாமாவுக்கும் உங்களுக்கும் பூர்வ வழித் தொடர்பு ஏதாவது இருக்குமோ என்ற கிரேஸித்தனமான சிந்தனை ஏற்பட்டது உண்டா?

இது போன்றவற்றைக் கண்டுபிடிக்க எளிதான வழியை அமைத்துத் தந்திருக்கிறது www.23andme.com என்ற பயோடெக் நிறுவனத்தின் வலைதளம். இவர்களது இயக்கம் சிம்பிள். DNA  சோதனை செய்ய வேண்டும் என்றபடி நீங்கள் ஆர்டர் கொடுத்துவிட்டால், விளக்க உரையுடன் டெஸ்ட் டியூப் ஒன்றை அனுப்புகிறார்கள். அதனுள் பலமாக எச்சிலை உமிழ்ந்து அடைத்து அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும். உங்களது எச்சிலில் இருக் கும் DNA மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து மேய்ந்து, சில வாரங்களில் உங்களுக்கு அறிக்கை அனுப்பிவிடுகிறார்கள்.

'மூதாதையரைப் பற்றிய விவரங்கள் எல்லாம் எனக்கு எதற்கு அண்டன்? நான் அடுத்த வருடம் கோடீஸ்வரன் ஆவேனான்னு சொல்லுமா?’ என்று கேட்பவர்களுக்குப் பதில் 'நோ’! ஆனால், வரப்போகும் பல்வேறு விதமான உடல் நலக் குறைகளைக் கண்டறிந்து சொல்கிறது இந்த நிறுவனத்தின் அறிக்கை. சர்க்கரை நோய், கண்பார்வை இழப்பு, பார்க்கின்சன், பலவகையான புற்று நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிக்கிறது. தம்பதியராக உங்களது DNAவைச் சோதித்து அறிந்தால், உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்னவிதமான நோய்கள் வரக்கூடும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

இணையம் நம் வாழ்வில் பல்வேறு அடிப்படை மாற்றங்களைக் கடந்த பல வருடங்களில் ஏற்படுத்திவிட்டது. ஆனால், இணையம் இயங்குவதற்குத் தேவை மின்சாரம். ஆனால், அந்த மின்சாரம் சீராகக் கிடைக்கிறதா? (முதலில், தமிழகத்தில் கிடைக்கிறதா?)  காற்றாலை, சூரிய ஒளி போன்றவற்றில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை நம்ப முடிவது இல்லை. காற்றின் வீச்சு குறைந்து போகும்போது பெறப்படும் மின்சார அளவு குறைந்துவிடுகிறது. சூரிய ஒளி இரவில் இருப்பதில்லை.

இந்தக் காரணங்களால்தான் கூகுள், மைக்ரோசாஃப்ட்டின் நிறுவனரான பால் ஆலன் போன்ற டெக் ஜாம்பவான்கள் சிலர் இணைந்து AltaRock Energy என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பூமிக்குள் கனன்றுகொண்டு இருக்கும் வெப்பத்தை மின் சக்தியாக மாற்றும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். புவிவெப்ப சக்தி (geothermal power) என அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமியில் துளைகள் இட்டு பைப் மூலமாகத் தண்ணீரைச் செலுத்தி பூமியின் உள் இருக்கும் வெப்பத்தில் கொதித்து வெளிவரும் நீராவியில் டர்பைன்களை ஓடவைத்து மின்சாரம் பெறப்படுகிறது. கலிஃபோர்னி யாவுக்கு வடக்கே இருக்கும் ஓரேகான் மாநிலத்தில் இந்தத் தொழில்நுட்பம் எப்படிச் செயல்படுகிறது என்பதைச் செயல் விளக்கமாகக் காட்டியது AltaRock Energy.

அறிவிழி

இந்தத் தொழில்நுட்பத்துக்கும் எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. பூமியைத் துளைத்து, பாறைகளை உடைப்பதால் இது அந்தப் பகுதியில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஃபேஸ்புக்கின் Graph Search வசதியைப் பயன்படுத்தினீர்களா? சென்ற வாரம் முழுக்கப் பலவிதமான நோக்கங்களுக்குப் பயன்படுத்த முயன்றேன். முடிவு ஏமாற்றம். 'இத்தாலியன் உணவு வகைகள்’ என்பதைக் கொடுத்துத் தேடினேன். எனது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அவ்வகை உணவு வகைகளைப் பற்றி எழுதிய நிலைக் குறிப்புகளோ, புகைப்படங்களோ பதிலில் வரும் என எதிர்பார்த்தால், ஃபேஸ்புக் எனக்குக் காட்டியது வேறு. நான் இருக்கும் சான்ஃபிரான் சிஸ்கோ நகரில் இருந்து பல நூறு மைல்கள் தூரத்தில் இருக்கும் லாஸ்வேகஸில் உள்ள இத்தாலியன் உணவகங்களைக் காட்டுகிறது. இந்தத் தகவலை நான் கூகுளிலேயே எடுத்துக்கொள்வேனே!  

அறிவிழி

'என்ன நடக்கிறது இங்கே?’ என்பதைச் சற்றே கூர்ந்து அலச முயன்றேன். ஃபேஸ்புக்கின் இந்தத் தேடல் இயந்திரமாகப் பயன்படுவது மைக்ரோசாஃப்ட்டின் பிங். மைக்ரோசாஃப்ட் சரிவர சோதனை செய்யப்படாத மென்பொருள்களைப் பயனீட்டாளர்களை வைத்துச் சோதனை செய்து, தங்களை மெதுவாகத் திருத்திக்கொள்வதில் கில்லாடி. ஒருவேளை அதே டெக்னிக்கைத்தான் இங்கும் தொடர்கிறார்களோ என்பது தெரியவில்லை. ஃபேஸ்புக்கையும் கூகுளையும் தரதரவென இழுத்து ஓர் அறையில் உட்காரவைத்து, 'தம்பிகளா, நீங்கள் உங்கள் போட்டி, பொறாமை, சண்டை சச்சரவுகளை மறந்து ஒண்ணா இருந்தால் தான் பயனீட்டாளர்களான எங்களுக்கு நல்லது!’ என்று யாராவது சொல்ல வேண்டும். சொல்வது யார் என்றுதான் தெரியவில்லை.

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism