Published:Updated:

ஆறாம் திணை!

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை!

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

மதர் டே, ஃபாதர் டே’ தெரியும்; அது என்ன புதிதாக 'சாப்பாடு டே?’ இது புதுசுதான். இந்தியா எங்கும் மாற்று அறிவியலாளர்கள் பிப்ரவரி 9-ம் தேதியை 'தேசியப் பாதுகாப் பான உணவு தினம்’ என இந்த வருடத்தில் இருந்து கொண்டாட அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2010-ல், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ், பி.டி. கத்தரிக்குத் தடை விதித்த நாள் அது. அறிவியல் வளர்ச்சியின் பெயரால் கொண்டுவரப் பட்ட ஒரு விஷயத்தைப் பல கட்ட ஆய்வுகள் செய்து, 'இன்னும் சிந்தித்து அனுமதிக்க வேண்டிய விஷயம் இது; அவசரப்படக் கூடாது’ என மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிருக்குத் தடை விதித்த நாளைத்தான், 'பாது காப்பான உணவு தினம்’ என இந்தியா முழுமையும் மாற்றுச் சிந்தனையாளர்கள் கொண்டாடுகின்றனர்.

'இந்திய வேளாண்மையின் வளர்ச்சிக்கே வேட்டுவைத்துவிட்டதாக’ குய்யோ முறையோ என்று கதறிய சில தொழில்நுட்பக் காதலர்கள், சமீபத்தில் 'மரபணு மாற்றிய பயிர்கள் மீது நடந்த ஆய்வு முடிவுகள் அவ்வ ளவு நம்பிக்கை தருபவையாக இல்லை; நிறையத் தகிடு தத்தங்கள் நடந்திருக்கின்றன; கம்பெனிக்காரர்களின் நலன் முன்னிறுத்தப்பட்டு, விவசாயிகளின் நலன் பின்னுக்குத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறாம் திணை!

தள்ளப்பட்டுள்ளது’ என நாடாளுமன்ற விவசாயக் குழு தெரிவித்ததில் ஆடிப்போயிருக்கிறார்கள்.

நீங்களும் நானும் மரபணு மாறியவர்கள்தான். உங்கள் வீட்டுக் குருமாவில் போடும் பெங்களூரு தக்காளியும், புளிக் குழம்புக்குப் பக்கத்தில் வைத்துச் சாப்பிடும் வெண்டைக்காயும் மரபணு மாறியதுதான். ஆனால், இந்த மாற்றங்களை நிகழ்த்தியது இயற்கை; அம்மாவின் 'முணுக்’ கோபமும் அப்பாவின் சாம்பார் பிரியமும் பையனுக்கு வருவது அப்படித்தான். அதிகம் காய்க்கும் சுமாரான மாம்பழமும் கொஞ்சமாகக் காய்க்கும் சூப்பர் மாம்பழமும், அருகில் இருக்கிறது எனக்கொள்ளுங்கள். அப்போது பற்றிக்கொண்ட காதலின் விளைவாக மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதன் பிறகு 'சூப்பர் மாம்பழம்’ கன்னாபின்னாஎனக் காய்த்துத் தள்ளக்கூடும். இதில் அருகருகே இரண்டையும் வளர்ப்பதுடன் அறிவியலின் வேலை முடிந்து விடுகிறது. 'சூப்பரா... சுமாரா?’ என்பதை இயற்கைதான் முடிவுசெய்யும். ஆனால், மரபணுப் பயிர்கள் இப்படி இல்லை. நாட்டுக் கத்தரிக்காயின் மரபணுவை, 'பேஸிலஸ் துருஞ்சியேனம்’ எனும் பாக்டீரியாவின் மரபணுவோடு வெட்டி ஒட்டி புதிய மரபணுவை உண்டாக்குகின்றனர். அதை விதையாக்கி, காயாக்கும் வித்தையைச் செய்கிறார்கள். 'இப்படிப் பிறக்கும் கத்தரிக்காயைப் புழு தாக்காது; அந்தப் புழுவைத் தாக்கும் நஞ்சுக்கு எதிரான நச்சுப்புரதம் கத்தரிக்காய்க்குள் உள்ளது. தனியாக பூச்சிமருந்து தெளிக்க வேண்டாம்’ என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. பூச்சி சீண்டாது... சரி. ஆனால், காய்க்குள் உள்ள நமக்குப் பழக்கம் இல்லாத புரதம் நம்மைச் சீண்டாதா? இதைக் கேட்க அதிகம் பேர் இல்லை என்பதுதான் வருத்த மான விஷயம். 'அதுசரி சார்... வேற புழு, பூச்சி எல்லாம் தாக்காதா?'' என்றால், ''அதெல்லாம் தெரியாது. எங்க கம்பெனி யைப் பத்தி மட்டும் கேளுங்க'' என்று 'மன்னாரன் கம்பெனி’ தங்கவேலு பாணி யில் சொல்கிறார்கள் அந்த பிரைவேட் லிமிடெட்காரர்கள்.  

கத்தரியில் துவங்கும் இந்தப் படைத்தல் தொழில், அரிசி, ராகி, சோளம், தக்காளி, பப்பாளி... என வகை வகையான உணவுப் பயிர்களிலும் தொடர்கிறது. கத்தரிக்காய் ஓ.கே. ஆகிவிட்டால், இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில் மொத்த நாட்டுப் பயிர்களையும் கூகுளில் மட்டுமே தேட முடியும். இதே உத்தியில் வணிகப் பயிரான பருத்தியில் நடத்திய பலாத்காரத் தில் பிறந்த பி.டி. பருத்தி, நாடு முழுக்கப் பரவி, நம் நாட்டு மரபுப் பருத்தியைக் காணாமல் அடித்துவிட்டது. இன்று பயனில் உள்ள பருத்தியில் 90 சதவிகிதக் கும் மேலானவை பி.டி. பருத்திதான். பூச்சி தாக்காது என்றார்கள். ஆனால், அது அதிகபட்சம் மூன்று, நான்கு வருடங்கள்தான் தாங்கியது. பிறகு, பூச்சி இவர்களுக்குப் பெப்பே காட்டி பருத்திக்குள் பாய் போட்டுப் படுத்துக்கொண்டது. இப்போது 'பி.டி. காட்டன் வெர்ஷன்-2’ கொண்டுவந்துள்ளார்கள். இது எத்தனை வருடங் கள் தாக்குப்பிடிக்கும் எனத் தெரிய வில்லை.

ஆறாம் திணை!

Genetic Engineering என்ற வார்த்தையை, இந்தியாவில் அறிமுகம் செய்த முன்னாள் மத்திய மாலிக்குலர் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் புஷ்ப பார்கவா, 'தயவுசெய்து மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிக்காதீர்கள்' என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டுவருகிறார். 'இந்தப் பயிர்கள் ரொம்ப சாது; எந்தச் சேட்டை யும் பண்ணாது’ எனச் சான்றளித்த அவர்களே இப்போது, 'சோதித்துப் பிறகு முடிவெடுக்கலாம்’ என்கிறார்கள். உலக சுகாதார நிறுவனமோ, 'அதை அனுமதிப்பதும், அனுமதிக்காததும் அந்தந்த நாட்டின் பொறுப்பு. அலர்ஜி வரலாம்; மரபணு, உடலுக்குள் உள்ள பாக்டீரியாவின் மரபணுவோடு கலக்கலாம்; பக்கத்துப் பயிரில் கலக்கலாம்; (allergenicity, gene transfer, out crossing)'' என எச்சரிக்கிறது. போதாக்குறைக்கு, 'இதைச் சாப்பிட்ட எலிக்குக் குழந்தை பிறக்கவில்லை; இன்னொரு எலி ரொம்பவே மெலிந்துவருகிறது' என வரிசையாக மருத்துவ அறிக்கைகள் வேறு. ஆனால், மரபணு மாற்ற உணவுப் பொருட்களை உருவாக்கும் கம்பெனிகளோ, 'நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு கவள உணவும், நான் படைத்த விதையில் இருந்து பிறந்ததாக இருக்க வேண்டும்' என்ற அறைகூவலுடன் தொடர்ந்து எப்படியாவது இந்திய உணவுச் சந்தையைக் கைப்பற்றத் துடிக்கிறது.

'புழுவில் இருந்து பயிரைக் காக்கத்தானே மரபணு மாற்றம்? அதை ஏன் எதிர்க்கிறீர்கள்? புழு பூச்சியில் இருந்து பயிரையும் உணவையும் காப்பதில் என்ன தவறு?’ என்பது வேறு சிலரின் கேள்வி. காலங்காலமாக நம் நாட்டில் பயிரும் இருக்கிறது; புழுவும் இருக்கிறது. பனங்காடை, கரிச்சான், தேன்சிட்டு, கொக்கு, நாரை, மரங்கொத்தி, உழவாரன், கீச்சான் என எண்ணற்ற பறவைகள் புழுவையும் பூச்சியையும் தின்று பயிரைக் காத்தன. கழுகும் பருந்தும் எலியைத் தின்று வாழ்ந்தன. 'காக்கை குருவி எங்கள் சாதி; நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்'' என்று பாரதி பாடியது, பல்லுயிர் மேலாண்மை புரிந்துதான். ஆனால், பூச்சிக்கொல்லிகள் மூலம் புழுவோடு சேர்த்துப் பறவைகளையும் கொன்றுபோட்டோம். விளைவு, பல்லுயிர்ச்சூழல் கெடுத்து குட்டிச்சுவராக்கப்பட்டுள்ளது.

இந்த உலகில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது; உணவுப் பகிர்வுதான் இல்லை. கடந்த வாரம் ஒரு திருமண விருந்துக்குச் சென்றிருந்தேன். ஏழு வகை இனிப்புடன் கூடிய அந்த விருந்தில், அத்தனையும் ஒருவன் சாப்பிட்டான் என்றால், அன்றிரவே அவனுக்கு 78 முறை ஒண்ணுக்குப் போகும். காலையில் ஏதாவது டயாபடிக் டாக்டர் கிளினிக்கில்தான் நிற்க வேண்டும். ஒருபக்கம் இப்படி என்றால், இன்னொரு பக்கம் மூன்று வேளை சமச்சீர் உணவு கிடைக்காத குழந்தைகள் இந்தியாவில் 46 சதவிகிதம் என்கின்றன புள்ளிவிவரங்கள். ''தேவைக்கு இங்கே எல்லா வளமும் உண்டு; ஆனால், களிப்பாட்டத்துக்குக் கிடையாது' என்று காந்தி சொன்னது இதைத்தான். எல்லோருக்கும் எல்லாமும் எனப் பகிர்ந்து வாழும் நிலையை நோக்கி நகராமல், வளர்ச்சி என்ற பெயரில் பல்லுயிர் பன்முகத்தைச் சிதைப்பது, கவிஞர் அறிவுமதி சொன்னதுபோல், 'காடு நம் தாய்; தாயிடம் பால் அருந்தலாம். ரத்தம் உறிஞ்சக் கூடாது.'

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism