எக்ஸ்பிரஸ் தொடர்

##~##

சென்ற மாதம் வரை, மதுரையை விட்டு வெளியேறும் எண்ணம் பாரிக்கு இல்லை. அவசியத்தை உண்டுபண்ணியவன் மலையப்பன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பாரி, ஒனக்கு ஒரு சூப்பர் வேலை காத்துட்டு இருக்கு... வா... சரக்கடிச்சிட்டே பேசுவோம்' என்று அழைத்தான்.

என்ன வேலை என்பதைச் சொல்லாமல் தனக்குள் கழுதைப் புலிபோல் சிரித்துக்கொண்டு இருந்தான். நான்கு லார்ஜ் ஏறியதும், 'பாரி, இன்னிக்கு வீரபாகுவப் போட்டுட்டாங்கடா...' என்று அவனை அணைத்துக்கொண்டான்.

'தெரியுண்ணே...'

'இன்னிலேர்ந்து இங்க நான்தாண்டா சூப்பர் ஸ்டாரு...'

பாரி அவனிடம் இருந்து உதறி விலகினான்.

''வேற பேரு வெச்சுக்கண்ணே... இந்தியால ஒரு சூப்பர் ஸ்டாருதான். அது எங்க தலைவர் ரஜினிதான்.'

'அவர என்னோட ஒத்தைக்கு ஒத்தை வரச்சொல்றா... யார் சூப்பர் ஸ்டாருன்னு பாப்பம்...' என்று உள்ளே போன சரக்கு மலையப்பனைக் கெக்கலிக்கவைத்தது.

அந்தக் கணம் பாரி நிலையிழந்தான். மலையப்பனைக் கோபமாகப் பிடித்துப் பின்னால் தள்ளினான்.

மூன்றாவது மாடியில் இருந்து தலைகுப்புற விழுந்து, உயிர் பிழைக்கும் அதிர்ஷ்டம் மலையப்பனுக்கு இல்லை. அங்கு நடந்ததை யாரும் கவனிக்காத அதிர்ஷ்டம் பாரிக்கு இருந்தது.

அவர்களுடைய இந்தக் கடைசிச் சந்திப்பு யாருக்கும் தெரியாது என்பதால், இரவோடு இரவாக சென்னைக்கு பஸ் ஏறிவிட்டான்.

யட்சன்

சென்னையில் மேன்ஷன் அறை எடுத்து எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக இருந்தான். அதைக் கெடுப்பதுபோல், மூன்று நாட்களாக எவனோ பின்னாலேயே இடைவெளிவிட்டுத் தொடர்ந்துகொண்டு இருந்தான்.

அவன்தான் அறைக்குள் நுழைந்துவிட்டான் என்று நினைத்து, அவசரப்பட்டு மடக்கிவிட்டான். கத்தியைக் கண்டு செந்தில் மிரண்டதை நினைத்து, பாரி தனக்குள் சிரித்துக்கொண்டு நிமிர்ந்தான். அவன் பார்வை கூர்மையானது.

மூன்று நாட்களாக அவனைப் பின்தொடர்பவன் இந்த அதிகாலையிலேயே எதிர்ப்புறம் தென்பட்டான். இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

பாரி, மேன்ஷன் இருந்த சந்தில் நுழையாமல் தவிர்த்து, நேராக மெள்ள நடந்தான். பெல்ஸ் ரோடு போக்குவரத்து சூடுபிடிக்க ஆரம்பித்து இருந்தது. இஸ்திரி போட்டுக் காலம் தள்ளும் தள்ளுவண்டிகள் நடைபாதையில் ஏற்றப்பட்டுக்கொண்டு இருந்தன. கரித்

துண்டு பிரமிட்கள் மண்ணெண்ணெயால் குளிர்விக்கப்பட்டு, தீக்குச்சிகளால் பற்றவைக்கப்பட்டன. நடைபாதைக் கோயிலில் அம்மனைக் கூவி அழைக்க ஒலிபெருக்கி விளக்குக் கம்பத்தில் ஏறிக்கொண்டு இருந்தது.  

பாரி, சாலையைக் கடந்து வலதுபுறம் இருந்த சந்துக்குள் நுழைந்தான். மூன்று தெருக்கள் சந்திக்கும் சந்திப்பு வந்ததும், ஒரு நகை ஆசாரி யின் மூடப்பட்டு இருந்த கடை நிழலில் ஒதுங் கினான். பதுங்கினான். பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்தான்.

பர்ஸில் ஒரு பக்கம் சூப்பர் ஸ்டாரின் புகைப்படம். இன்னொரு பக்கம் நான்கு விரற்கடை அகலம் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டு. பின்னால் வருபவர்களைக் கவனிப்பதற்காகவே எப்போதும் பர்ஸில் இருக்கும். மலையப்பன் கற்றுத்தந்த பாலபாடம்.

பதுங்கி இருந்த இடத்தில் இருந்து கையை மட்டும் சற்றே வெளியே நீட்டியதும், தொடர்பவன் அந்தக் கண்ணாடியில் தென்பட்டான். அந்தச் சந்திப்பில் நுழைந்து, அங்கும் இங்கும் கண்களால் தேடியபடி மெள்ள பாரியின் மறை விடத்தை நெருங்கினான்.

தான் ஒளிந்திருந்த இடத்தைக் கடக்கவிட்டு, பாரி சட்டென்று பின்னால் போய் அவனை மடக்கினான்.

அவன் கழுத்தில் இரண்டு விரல்களால் அழுத்தி, 'யார்றா நீ..? எதுக்கு என்னை வேவு பார்க்கற..?' என்று உறுமினான்.

அந்த ஆளின் தொண்டையில் க்ளக் என்று எச்சில் அச்சத் தாண்ட வம் ஆடியது. இரு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டான்.

'பிரதர், நான் எதிரி இல்ல...' என்ற வார்த்தை களை உதிர்ப்பதற்குள் அவனுக்கு உயிர் போய் உயிர் வந்தது.

பாரி, அவனுடைய தொண்டைக்குழியில் அழுத்தியிருந்த விரல்களை விலக்கினான்.

'அப்ப யாரு..?'

'எம் பேரு பூமணி. நீ பாரிதான..?'

'நான் யாரா இருந்தா உனக்கு என்ன..?'

'மலையப்பன்தான் உன்னைப் பத்தி விவரம் கொடுத்தான்...'

பாரியின் நடுமுதுகில் பனிக்கட்டி சரிந்தது.

'என்ன சொன்னான்?'

'இங்க ஒரு வேலை இருக்கு. செஞ்சு முடிச்சா, கையில பத்து லட்சம். சென்னைக்குப் பழக்கம் இல்லாத புதுமுகம் வேணும்னு கேட்டு இருந்தோம். மலையப்பன் இந்த போட்டோவ அனுப்பினான்.'

அவன் தன் செல்போனை எடுத்துக் காட்டினான். மலையப்பனுடன் பாரி சரக்கு அடித்த வேறொரு தருணத்து செல்போன் புகைப்படம்.

எந்த மலையப்பன் தன் பெயரைச் சிபாரிசு செய்தானோ, அந்த மலையப்பனே இப்போது இல்லை என்பது இவனுக்குத் தெரியுமா?

'வா, டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.'

சேம்சன் பேக்கரி வாசலில் மலாய் டீயைச் சுவைத்தபடி, 'என்ன வேலை?' என்று கேட்டான் பாரி.

'மேஸ்திரி ஆதிமூலத்தைப் போட்டுத் தள்ளணும்' என்றான் பூமணி.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism