ஸ்பெஷல்
Published:Updated:

ஹலோ மைடியர் எமர்ஜென்சி நம்பர்!

ஹலோ மைடியர் எமர்ஜென்சி நம்பர்!

மெரிக்காவில் 911 என்ற எண் அவசர அழைப்புகளுக்கானது. இந்த எண்ணை டயல் செய்தால், உடனடியாக உதவி வரும். வீட்டில் தீ, குறிப்பிட்ட நபர்கள் திருடர்கள் அல்லது தீவிரவாதிகள் என்ற சந்தேகம், விபத்து என எந்தவிதமான அவசர உதவிகளையும் எதிர்பார்த்து 911 என்ற எண்ணை அழைத்தால் வெகு விரைவில் உங்கள் இருப்பிடம் நோக்கி சைரன் வண்டிகள் பறந்துவரும்.

ஹலோ மைடியர் எமர்ஜென்சி நம்பர்!

இதே மாதிரி 999 என்ற எண் இங்கிலாந்து முழுமைக்குமான அவசர உதவி எண். இங்கிலாந்தில் அவசர உதவிக்கு என்று இருக்கும் இந்த எண்ணுக்கு ஒரு வருடத்தில் 7 லட்சம் அழைப்புகள் வருகின்றனவாம். இங்கே பிரச்னை என்னவென்றால், குறிப்பிட்ட இந்த எண்ணுக்கு அவசர உதவிக்கான அழைப்புகள்தான் வரும் என்றில்லை. நம்ம டாஸ்மாக் பார்ட்டிகள் மாதிரி ஊருக்கு ஊர் எக்குத்தப்பா யோசிக்கிற ஆள் இல்லாமலா இருப்பார்கள்?

"என்னுடைய லேப்டாப் பாஸ்வேர்டு மறந்துவிட்டது. அவசரமாக ஒரு இ-மெயில் அனுப்பவேண்டும். எனவே தயைகூர்ந்து என்னுடைய லேப்டாப் பாஸ்வேர்டு என்ன என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் உண்மையுள்ள, கிறிஸ்டோபர்" என்பது மாதிரியான அழைப்புகளை என்ன செய்வது என்று தெரியாமல் லண்டன் போலீஸ் திகைத்து நிற்கிறது.

ஹலோ மைடியர் எமர்ஜென்சி நம்பர்!

நைட் கிளப்புக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதற்காக ஒரு போன் அழைப்பு வந்திருக்கிறது. இதுவாவது பரவாயில்லை, ஒரு சிறுமி 999-ஐத் தொடர்புகொண்டு, ''என்னுடைய அக்கா என்னை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிறாள், நீங்கள் வந்து அவளை மிரட்டி விட்டுப் போக முடியுமா?" என்று கேட்டிருக்கிறாள்.

எதற்காக இந்த விஷயத்தை இவ்வளவு நீட்டி முழக்கி இருக்கிறோம் என்றால், இந்தியா முழுவதற்கும் இதே மாதிரியான ஒரு பொது அவசரத் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்த மத்திய அரசு யோசித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுவேறு  மாதிரியான அவசர உதவி எண்கள் இருக்கின்றன. மேலும், இந்த எண்களுக்கு அவசரமாக அழைப்பு விடுத்தும், உதவி சரியான நேரத்தில் கிடைப்பது இல்லை, அதற்குக் காரணமான அதிகாரிகளையும் கண்டுகொள்ள முடிவது இல்லை. ஆனால், இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு எண் அறிமுகப்படுத்தப்படும்போது, எங்கிருந்து யார் அழைக்கிறார்கள் என்பதை அறிந்து சம்பந்தப்பட்ட ஏரியாவின் போலீஸுக்கோ, தீயணைப்புத் துறைக்கோ, மருத்துவமனைக்கோ உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும் கண்டுபிடித்துவிடலாம். அவசர உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு "கைமாத்தா ஒரு 500 கிடைக்குமா, அடுத்த வாரம் கண்டிப்பா திருப்பித் தந்துடுறேன்" என்றெல்லாம் கேட்கப்படாது. ஆமா!

     - சீலன்