ஸ்பெஷல்
Published:Updated:

லவ் பண்ணுங்க... டார்ச்சர் பண்ணாதீங்க!

லவ் பண்ணுங்க... டார்ச்சர் பண்ணாதீங்க!

லவ் பண்ணுங்க... டார்ச்சர் பண்ணாதீங்க!

'லவ்’கீக வாழ்க்கையில் அட்டுப் பசங்களையும் சூப்பர் ஃபிகர்களையும் கோத்துவிட்டு வேடிக்கை

லவ் பண்ணுங்க... டார்ச்சர் பண்ணாதீங்க!

பார்க்கிற ஆண்டவன், இடையில செவனேனு உதவி செய்ற நம்மள மாதிரிப் பசங்களை மட்டும் ஏன் சார் போட்டுப் பொளக்குறார்? 'காதல்னா போட்டுத் தாக்கணும்’கிறது சரி. ஆனா, அதுக்காக காதல் தூதுவர்களையா போட்டுத் தாக்கணும்? இதோ பல காதல் நண்பர்களுக்கு நேர்ந்த... மூஞ்சி மொகறை பேர்ந்த அனுபவங்கள்...

முதன்முதல்ல காதலிக்கிறவன்தான் கவிதை எழுதுவான். கொஞ்சம் வைரமுத்து, கொஞ்சம் குமரிமுத்து, கொஞ்சம் டி.ஆர்., கொஞ்சம் பவர் ஸ்டார் சேர்த்துப் பிசைந்து செய்து முடித்தால், அவன்தான் கவிதை எழுதும் காதல் கிறுக்கன்! அதுவும் எல்லாமே கொலவெறிக் கவிதையா வந்து நிக்கும்.. 'என் முகத்தில் எச்சிலையாவது துப்பிவிட்டுப் போ... அந்தக் குளிர்ச்சியில் உயிர் வாழ்கிறேன்’ என்றும், 'என்னவளே... உன் டூத் பேஸ்ட்டில் இருக்கும் நுரைதான், கடல் அலையாக என் கால் நனைக்கிறது’ என்றும் மொக்கைக் கவிதை எழுதி உங்ககிட்ட விடிய விடிய முடிய முடிய வாசித்துக் காட்டி, செதில் செதிலா உங்களைச் சிதைப்பானுங்க.

நடுராத்திரியில போன் பண்ணி எழுப்பி, ' குட்டிம்மாவுக் கும் எனக்கும் சின்ன பிராப்ளம். செல்லையும் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டா. மனசு கேட்கலை. அதான்டா உனக்கு கால் பண்ணினேன்’னு சொல்வாய்ங்க. விடியக்காலை நாலு மணிவரை அவன் கண்ணீரும் கம்ப்ளெய்ன்ட்டுமா சொல்ற மேட்டரோட சாராம்சம் இதுதான் : 'பபிள் கம் பாதி மென்னுட் டுக் கொடுடினு கேட்டேன் மாப்ளே... கொடுக்க மாட்டேனுட்டா. நம்ம வாய்க்குள்ள ஒரு லட்சம் கிருமி இருக்குனு சொல்றாடா. நீயே சொல்லு. இப்படி இருந்தா எப்படிடா எங்களுக்குள்ள நெருக்கம் வரும்?’  'ஏண்டா, எப்பப் பார்த்தாலும் எச்சில் மேட்டரே சொல்றே எச்சிக்கலை’னு மனசுக்குள்ள காண்டு ஆனாலும், 'காலையில உன் ஆளுக்கு போன் பண்றேன் மாப்ளே. கவலைப்படாமத் தூங்கு’னுதான் சொல்வோம். ஏன்னா நாமதான் 'நண்பேன்டா’ ஆச்சே!

காதலுக்கு உதவி பண்றேன்னு சொல்லிட்டு சமயங்கள்ல நாம தங்கி இருக்குற ரூமைக்கூட அவிய்ங்க 'மனசுவிட்டுப் பேச’ தாரை வார்க்க வேண்டி வரும். ரூம் பக்கமே வராமல் சித்தன் போக்கு சிவன் பார்க்னு அழுக்காத் திரிய வேண்டி இருக்கும்.

லவ் பண்ணுங்க... டார்ச்சர் பண்ணாதீங்க!

காதலிக்கும் பொண்ணுங்களுக்கு ஃப்ரெண்டா இருந்தோம்... செத்தோம் மக்கா. அடிக்கடி 'அவனுக்கும் எனக்கும் இனிமே எதுவும் இல்லை’ என ஆரம்பித்து கடைசியாய், 'இனி நான் எதுக்கு வாழணும்? நான் தற் கொலை பண்ணப்போறேன்’னு சொல்லிட்டு வெச்சிடும். திகிலா இருக்கும். ஆறுதல் சொல் றோமோ இல்லையோ, 'ஐயய்யோ... நீ சாவுறதுன்னா சந்தோஷமா செத்துக்க தாயி. கடைசியா எனக்குக் கால் பண்ணிட்டு ஏன் சாவுறே? போலீஸ் கீலீஸ்னு என் டவுசர் கிழியணுமா?’ என நம்ம மைண்ட் வாய்ஸ் மைலாப்பூர் வரை கதறும்.  

'குட்டிம்மா, பப்ளிமாஸ், புஜ்ஜிக்குட்டி, பொம்முக் குட்டி, அமுல்பேபி, பாப்புக்குட்டி, ஜுஜ்ஜும்மா, செல்லக்குட்டினு நம்மளை தெய்வீகப் பிறவினு அவிய்ங்களா நினைச்சுக்கிட்டு நம்ம முன்னாடியே கொஞ்சிக் கொஞ்சி ரொமான்ஸ் பண்ணி நம் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு வெளாட்டு காட்டுவாய்ங்க. 'பெருமாளே நேக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?’னு 'அந்நியன்’ அம்பி மாதிரி கிணத்துல தண்ணிய இறைச்சுக் குளிக்கவெச்சுருவானுக பாஸ்!

காதலி கொண்டுவந்து கொடுத்த 4 இட்லியை, அதிகாலை 6 மணிக்கு, நண்பகல் 12 மணிக்கு, சாயங்காலம் 4 மணிக்கு எனப் பிட்டுப் பிட்டுக் கோயில் பிரசாதம் போல சாப்பிடுற ஃப்ரெண்ட்ஸெல்லாம் எனக்கு இருந்திருக்காய்ங்க. அந்தப் பொண்ணு கொடுத்த சட்டையை ராசினு சொல்லி அடிக்கடி போட்டு நம்மளை டார்ச்சர் பண்ணுவானுங்க. ஃப்ளோரசென்ட் போன்ற அடிக்கும் கலர்ல அது இருந்தா போச்சு. நாம அகர்வால்ல அட்வான்ஸா ஒரு டோக்கன் போட்டு வெச்சிரணும்.

'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க/பசங்க இருக்கும்போது அவனை/ளை ஏன்டா காதலிச்சேன்’னு ஃபீல் பண்ற லவ்வர்ஸே, 'உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும்போது உங்களுக்கு நாங்க ஏன் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்?’ ஏன்...ஏன்...ஏன்?

- ஆர்.சரண்