ஸ்பெஷல்
Published:Updated:

காவு கொடுக்கலாமா கருத்துச் சுதந்திரத்தை?

காவு கொடுக்கலாமா கருத்துச் சுதந்திரத்தை?

'விஸ்வரூபம்’ வெளிவரக் கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் சொன்னார்கள். 'கடல்’ படத்துக்குத் தடை போட கிறிஸ்தவ அமைப்புகள் குரல் உயர்த்துகின்றன. 'ஆதிபகவன்’ படத்தை எங்களிடம் காட்டிவிட்டுத் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அறிக்கை தயாரிக் கின்றன இந்து அமைப்புகள். மொத் தத்தில் மத்திய அரசாங்கம் அமைத்த சென்ஸார் போர்டு தேவை இல்லை... கத்திரிக்கோலை நாங்கள் வைத்துள் ளோம் என்று சாதி, மத அமைப்புகள் இறங்கி வருவதைப் பார்த்தால், பயமாக இருக்கிறது. இனி இந்தியா வில், குறிப்பாக தமிழகத்தில் யாரும் யாரையும் விமர்சிக்கும் எந்தப் படத் தையும் வெளியிட முடியாது. சகிப்புத் தன்மையும் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவமும் இல்லாமல்போனதன் அடையாளம் இது. குறிப்பிட்ட மதத்தைக் கொச்சைப்படுத்து வது, கடவுள்களைக் கிண்டல் செய்வது, அசிங்கப்படுத்துவது, மத ரீதியான நம்பிக்கைகளை உதாசீனப்படுத்துவது போன்றவை படங்களில் வருமானால் அதனை சென்ஸார் போர்டு உறுப்பினர்களே தடைபோட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்ட காட்சிகள் நீக்கப்பட வேண்டியவைதான். ஆனால், மதங்களின் பெயரைச் சொல்லி நடத்தப்படும் அநியாயங்களை அட்டூழியங்களைக்கூட  விமர்சனம் செய்யக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம் என்பதை இத்தகையத் தடை கோருபவர்கள் சொல் வது இல்லை.  

காவு கொடுக்கலாமா கருத்துச் சுதந்திரத்தை?

தமிழகத்தில் அரசியல்வாதிகளும் போலீஸ்காரர்களும்தான் மிகமிக நல்லவர் கள், சகிப்புத்தன்மை உள்ளவர்கள், பெருந்தன்மையானவர்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. தமிழ் ஹீரோக்கள் அனைவருமே அரசியல்வாதிகளின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கேள்வி கேட்கிறார்கள்... போலீஸ் அதிகாரிகளை நடுரோட்டில் நாய் அடிப்பதுபோல அடிக் கிறார்கள். இதனைப் பார்த்து எந்த அரசியல்வாதிக்கும் எந்த போலீஸ்காரருக்கும் கோபம் வரவில்லை. அவர்களும் குடும்பத்துடன் படம் பார்த்து ரசித்து சிரித்துத்தான் செல்கிறார்கள். இந்த அடிப்படையில் சகிப்புத்தன்மைக்கான விருதை கருணாநிதிக்கே தூக்கிக் கொடுக்கலாம். எம்.ஜி.ஆரின் 'நேற்று இன்று நாளை’ படத்தில் தொடங்கி, பாரதிராஜாவின் 'என் உயிர்த்தோழன்’, மணிரத்னத்தின் 'இருவர்’, மணிவண்ணனின் 'அமைதிப்படை’, ஆர்.கே.செல்வமணியின் 'மக்களாட்சி’, ஷங்கரின் 'முதல்வன்’ என்று கருணாநிதியை நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டும் படங் கள் ஏராளமாக வந்துவிட்டன. இவற்றைக் கருணாநிதி பார்க்க வும் செய்தார். மணிவண்ணனின் 'அமைதிப்படை’யில் கருணாநிதி நேரடியாகவே கிண்டல் செய்யப்பட்டார். 'பாலைவனத்தில் இருந்த வரை ரோஜாக்கள் முகரவைத்த தலைவருக்கு காட்டும் நன்றியா இது?’ என்று முரசொலியில் ஒரு பாக்ஸ் வந்தது. அவ்வளவுதான். மணிரத்னம் தனது 'இருவர்’ படத்தைப் பார்க்க அழைத்தபோது, 'ஏன் என் கதையை எடுத்தே... நான் சொல்ற ஆளோட கதையை எடுத்தா நல்லாப் படம் ஓடுமே?’ என்ற குத்தலோடு தனது எதிர்ப்பை முடித்துக்கொண்டார். படத்தின் உள் அர்த்தம் பார்த்து விமர்சிப்பதாக இருந்தால் அரசியல் படங்கள், பாடல்கள், கதைகள், நாவல்கள் எதுவுமே தப்பாது. கலை, கலைக்காகவா... மக்களுக்காகவா என்ற விவாதம் நடந்த நாடுகளில் எல்லாம் கலை, மக்களுக்காகத்தான் என்றே பெரும்பான்மையினர் கருத்தாக அமைந்தது. அத்தகைய கருத்து மக்களுக்குள் பேதங்களை ஏற்படுத்தாததாக அமைய வேண்டும் என்பதே முக்கியம்.

காவு கொடுக்கலாமா கருத்துச் சுதந்திரத்தை?

பொதுவாகவே சினிமாக்காரர்களைச் சீண்டுவது, பிரபலமானவர்கள் மீது வழக்குப் போடுவது நாட்டில் அதிகமாகி வருகிறது. பாப்புலர் ஆனவர்களைச் சீண்டும்போது கிடைக்கும் பாப்புலாரிட்டியும் அதற்கு ஒரு காரணம். சின்மயியை விட கொச்சைத்தனமான கமென்ட்கள் பலரும் இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், சின்மயி மட்டுமே குறிவைத்துத் தாக்கப்படுகிறார். தீவிரவாதிகளைக் கொல்லப்போகிறோம் என்று மிஷின் கன்னோடு ஏராளமானவர்கள் கிளம்பினார்கள். அதில் விஜயகாந்தும் அர்ஜூனும் முக்கியமானவர்கள். சரத்குமாரும் சில தீவிரவாத அமைப்பு களை சினிமாவில் ஒடுக்கி இருக் கிறார். இவர்களது படங்கள் வெளியானபோது இத்தகைய எதிர்ப்புகள் இல்லை. இன்று எதிர்ப்பு கிளப்பும் அமைப்புகள் அன்று இல்லையா? அல்லது விஜயகாந்த், அர்ஜூன்,சரத்குமாரை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று நினைத்தார்களா? தெரிய வில்லை.

மொத்தத்தில் கமல்ஹாசனுக்கு 100 கோடிக்கும் அதிகமான விளம் பரம் கிடைத்துவிட்டது. வீட்டுக் கவலை இல்லை. மதச்சார்பற்ற தன்மைக்காக கண்ணீர் மல்கப் பேசியவர், இனி வரும் காலத்திலும் இத்தகைய பிரச்னைகள் அடுத்த வர்க்கு உருவாகும்போதும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்!

_ முகுந்த்