ஸ்பெஷல்
Published:Updated:

வேலண்டைன்ஸ் டே சில ஆய்வுக் குறிப்புகள்!

வேலண்டைன்ஸ் டே சில ஆய்வுக் குறிப்புகள்!

வேலன்டைன்ஸ் டே - ஏதோ வேலன்டைன்னு ஒரு பாதிரியார் இருந் தாராம். அவர் காதல் பஞ்சர் ஆனதால அவர் நினைப்பா இதைக் கொண்டாடுறோம்னு, இதுக்கு எஸ்.டி.டி. அதாவது, வரலாறு சொல்லப்படுது. ஆனா, நாங்க இதை நம்பத் தயாராக இல்லை. இதுல ஏதோ வரலாற்றுச் சதி இருப்பதாக தோன்றியது. எங்கள் இன்டெலிஜென்ஸ் டீம் மூலமாக ஒரு ரகசிய ஆராய்ச்சி நடத்தினோம். அதன் அதிர்ச்சி கலந்த சுவாரஸ்ய முடிவுகள் இதோ....

வேலண்டைன்ஸ் டே சில ஆய்வுக் குறிப்புகள்!

ஆய்வு முடிவு 1: வால்பாறை அருகில் வாலாங்கி என்று ஒரு குறுநில மன்னர் வாழ்ந்துவந்தார். அப்போது நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களின் முகாமில் பணிப்பெண்ணாக இருந்தவரின் உறவுக்காரர் மகள் 'டைன்’. வாலாங்கி மன்னருக்கும் டைன்னுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்பு அது பிரிட்டிஷ்காரர்களுக்குத் தெரியவரவே, அவர்கள் இந்தக் காதலை எதிர்த்திருக்கிறார்கள். இது சார்பாக அவர்கள் ஒரு டைனிங் டேபிள் மாநாடு ஒன்றை நடத்தி வாலாங்கி மன்னருக்கு நிபந்தனை ஒன்று விதித்திருக்கிறார்கள். அதாவது, டைனை மணக்க விரும்பினால், தாங்கள் ஆண்டுவரும் நிலப்பகுதியை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தாரை வார்க்க வேண்டும் என்ற நிபந்தனைதான் அது. வாலாங்கி மன்னரும் அதை ஏற்று டைன் மீது கொண்ட காதலுக்காகத் தன் நாட்டைத் துறந்தார். ஆனால், இறுதியில் அந்தக் குள்ள நரிக்கூட்டம் நாட்டைப் பறித்துக்கொண்டு வாலாங்கியை ஏமாற்றியது. இந்தக் காதலை அனைவரும் நினைவுகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வாலாங்கி மன்னரும் காதலி டைனும் ஒரு மலை உச்சிக்குச் சென்று, குதித்து உயிர் துறக்க முடிவு செய்தனர். அதற்கு முன் டைன் வாலாங்கிக்குச் சொல்லிக் கொடுத்த ஒன்... டூ... த்ரீ... யை சொல்லிச் சாக முடிவு செய்தனர். அவர்கள் சாவதற்கு முன் ஒரு கல்வெட்டில் 'இந்தப் பயணம் மற்றுமொரு சரித்திரம்’ எனப் பதிந்துவிட்டு பிப்ரவரி-14 அன்று உயிர்விட்டனர். அவர்கள் நினைவாகத்தான் வாலன்டைன்ஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்தக் கதைக் கருவைத்தான் இயக்குநர் பாலச்சந்தர் பின்னாளில் 'புன்னகை மன்னன்’ என திரைக் காவியமாக வடித்தார் என்று நாலாம் நூற்றாண்டின் கல்வெட்டு கூறுகிறது.

ஆய்வு முடிவு 2: தமிழர்களின் மூத்த கடவுள் முருகன் என்பது நாம் அறிந்ததே. ஆதி காலத்திலேயே முருகன், வள்ளி, தெய்வானை என இருவரையும் காதல் புரிந்து சாதி மறுப்புத் திருமணத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட முருகனுக்கு வேலன் என்ற பெயரும் உண்டு. ஆதியில் காதலுக்கு வித்திட்டு காலம் கடந்து நிற்கும் வேலனைப் போற்றவே வேலன் டைன்ஸ் டே கொண்டாடப்படுகிறது. முற்காலத்தில் வேலவன் டே எனக் கொண்டாடப்பட்ட இது, நாளடைவில் மருவி 'வேலன்டைன்ஸ் டே’ ஆனது. இந்தச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் கமல்ஹாசன் நடித்த ’தெனாலி’. இந்தப் படத்தில் கமல் எப்போதும் வேல் ஒன்றைக் கையில் வைத்திருப்பார். தேவயானி மற்றும் ஜோதிகாவுடன் 'கிளியே கிளியே’ என கிளுகிளுப்பாக நடனம் ஆடி முருகன் வள்ளி - தெய்வானையுடன் காட்சி புரிந்ததையும் நினைவு படுத்தியிருப்பார்.

ஆய்வு முடிவு 3: 'வேலை இல்லாதவன்தான்டா காதல் கீதல்னு திரிவான்’னு எல்லா அப்பாக்களும் ஒரு முறையாவது நம்மளைத் திட்டி இருப்பாங்க. அப்படி வேலை இல்லாத பலரும் ஒண்ணா சேர்ந்து நமக்காக ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும். அதுதான் நமக்குப் பலம் என முடிவு செய்தனர். அப்படி வேலை இல்லாதவர் கள் டேதான் இப்போது வேலன்டைஸ் டே ஆனதுடே... புரியுதாடே?

- சத்யா சுரேஷ்