ஸ்பெஷல்
Published:Updated:

வூட்ல குரைச்சிக்கினு வந்துட்டியா?

வூட்ல குரைச்சிக்கினு வந்துட்டியா?

போக்குவரத்து விதிகளை மீறி உங்கள் வண்டியில் அவசரமாக எங்கோ செல்கிறீர்கள். உங்கள் வண்டிக்கு முன்னே விதிகளுக்கு உட்பட்ட வேகத்தில் இன்னொரு வண்டி செல்கிறது. உங்களுக்கோ அவசரம். என்ன செய்வீர்கள்? எப்படியாவது கிடைக்கிற சந்தில் அந்த வண்டியை முந்திச் சென்று, வண்டியின் டிரைவரைப் பார்த்து "நீ எல்லாம் ஏன்யா கார் ஓட்டுறே, குழந்தைங்க நடைவண்டியை வாங்கித் தள்ளிக்கிட்டுத் திரிய வேண்டியதுதானே, வூட்ல சொல்ட்டு வந்துட்டியா, நாயே..." என்றெல்லாம் திட்டத் தோன்றும். இதே நியூஸிலாந்து நாடாக இருந்தால், 'நாயே, பேயே’ என்றெல்லாம் திட்ட முடியாது. காரணம், நியூஸிலாந்தில் நிஜமாகவே இரண்டு நாய்கள் கார் ஓட்டி உலகச் சாதனை புரிந்திருக்கின்றன.

வூட்ல குரைச்சிக்கினு வந்துட்டியா?

10 மாத போர்ட்டர், மற்றும் 18 மாத மான்டி என்ற இரண்டு நாய்களுக்கு, விலங்குகள் நலத் தொண்டு அமைப்பு ஒன்று கார் ஓட்டக் கற்றுக் கொடுத்திருக்கிறது. 'விலங்குகள் புத்திசாலிகள், அவற்றை இரண்டாம்தர உயிரிகளாக நடத்தாதீர்கள், துன்புறுத்தாதீர்கள்’ என்ற பிரசாரம் மேற்கொள்ளவே இந்த முயற்சியைக் கையில் எடுத்து இருக்கிறது அந்த அமைப்பு. இந்த இரண்டு டிரைவர்களுக்கும் பயிற்சி கொடுக்க, எட்டே வாரங்களில் டிரைவிங் கற்றுக்கொண்டு எட்டுப் போட்டுக் காட்டியிருக்கின்றன இந்த நான்கு கால் டிரைவர்கள்.

இரண்டு பேரும் ஓட்டக்கூடிய வகையில் காரில் மாற்றங்களைச் செய்திருக்கிறார் மார்க் வெட் என்ற பயிற்சியாளர். முதலில் சொந்த இடத்தில் கார் ஓட்டப் பழகிக்கொண்ட இந்த இரண்டு டிரைவர்களும், தங்கள் திறமையை ஒரு ரேஸ் மைதானத்தில் ஓட்டி நிரூபித்து இருக்கிறார்கள். வளைவுகளில் வண்டியை லாவகமாகத் திருப்புவதை, சுற்றி இருந்த பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் போக, மூன்றாவதாக ஜின்னி என்ற ஒரு வயது நாயும் பயிற்சியில் மும்முரமாக ஈடுபடு கிறது. டிரைவிங் டாக்ஸ் என்று இணையத்தில் தேடினால் வீடியோவைப் பார்க்கலாம். நெடுஞ்சாலைகளில் எப்போது இந்த டிரைவர்கள் தங்கள் கால் வண்ணத்தைக் காட்டப்போகிறார் களோ தெரியவில்லை!

- சீலன்