Published:Updated:

ஷேர்லக் - பட்ஜெட் வரை நிதானம் !

ஷேர்லக் - பட்ஜெட் வரை நிதானம் !

ஷேர்லக் - பட்ஜெட் வரை நிதானம் !

ஷேர்லக் - பட்ஜெட் வரை நிதானம் !

Published:Updated:
##~##

''இன்றைய நிலைமையில் எல்லோருடைய மனதிலும் இருக்கிற கேள்வி என்ன தெரியுமா?'' - நம் கேபினுக்குள் நுழைந்தவுடன் கேட்டார் ஷேர்லக். ''என்ன கேள்வி..?'' என்று கேட்டோம், அவரை உட்காரச் சொன்னபடி.

''இந்த மாதக் கடைசியில் நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதே அந்தக் கேள்வி. முக்கிய மாக, ஜி.டி.பி. 5 சதவிகிதமாகவே இருக்கும் என்கிற கணிப்பு வெளியாகி இருக்கும் இந்த நிலையில், பொருளாதாரத்தை மீண்டும் வேகப்படுத்துகிற மாதிரி ஒரு கனவு பட்ஜெட்டை சிதம்பரம் தாக்கல் செய்வாரா  என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பினால்தான் சந்தை இப்போதைக்கு மேலேயா, இல்லை கீழேயா என்று முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது. பட்ஜெட் ராலி இந்த வாரத்திலேயே வந்துவிடும் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஜி.டி.பி. எதிர்பார்ப்பு குறைந்ததால் சந்தை இறங்கவே செய்தது. அடுத்த வாரமாவது பட்ஜெட் பற்றிய பாசிட்டிவ் செய்திகள் வருமா என்று பார்ப்போம். சந்தையில் பாசிட்டிவ்-ஆன சிக்னல்கள் ஏதும் உறுதியாகத் தெரியாதவரை கொஞ்சமாக டிரேடிங் மட்டும் செய்யலாம். டிரேடிங் செய்யாதவர்கள் பட்ஜெட் வெளியாகிற வரை பொறுமை காப்பதே நல்லது'' என்றவரிடம், ''என்.டி.பி.சி. பங்கு விற்பனை நன்கு களைகட்டியிருக்கிறதே?'' என்று கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி. பங்கு விற்பனை கடந்த வியாழக்கிழமை நடந்தது. வழக்கம்போல் எல்.ஐ.சி. கைதந்திருக்கிறது. அது பல தரகு நிறுவனங்கள் மூலம் இந்தப் பங்குகளை வாங்கி இருக்கிறது. கூடவே, எஃப்.ஐ.ஐ.களும் இந்தப் பங்கில் கணிசமான தொகையைக் கொட்டியிருப்பதால் மத்திய அரசு மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்த ஓ.எஃப்.எஸ்.-க்கு 1.7 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதனால் 11,430 கோடி ரூபாயை என்.டி.பி.சி. சுலபமாகத் திரட்டி இருக்கிறது. என்.டி.பி.சி. தந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து பொதுத்துறை பங்குகளை விற்றுத் தள்ளிவிடலாம் என்கிற நப்பாசையில் இருக்கிறது அரசாங்கம். ஆனால், எல்.ஐ.சி. எவ்வளவுதான் தாங்குமோ தெரியவில்லை!'' என்றவருக்கு, சுடச்சுட டீ தந்தோம்.

''எஃப்.ஐ.ஐ.-கள் சில பங்குகளிலிருந்து கடும் ஓட்டம் எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?'' என்றோம்.

ஷேர்லக் - பட்ஜெட் வரை நிதானம் !

''சில ரியல் எஸ்டேட், இன்ஃப்ரா மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் நிறுவனப் பங்கு களிலிருந்து எஃப்.ஐ.ஐ.-கள் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்குத் தங்கள் முதலீடுகளை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அலகாபாத் வங்கியில் எஃப்.ஐ.ஐ.கள் வைத்திருந்தப் பங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 12.54%. ஆனால், டிசம்பர் மாதக் கடைசியில் அது 9.55%-ஆக குறைந்துவிட்டது. இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷனில் 24.38% பங்கு வைத்திருந்தார்கள். பிறகு 17.76%-ஆக குறைந்துவிட்டது. ஐ.வி.ஆர்.சி.எல். பங்கில் 33.04% வைத்திருந்தார்கள். கடந்த டிசம்பர் கடைசியில் இது 28.16 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. எஃப்.ஐ.ஐ.களின் இந்த முடிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்நிறுவனங்களின் கடன் ஒரு முக்கியமான காரணம் என்கிறார் என் மும்பை நண்பர்'' என்று சொன்னார்.  

''பாம்பே டையிங் பங்கின் விலை 14% வீழ்ச்சிக் கண்டிருக்கிறதே?'' என்றோம்.

''மும்பையில் தனக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட புகாரை ஒட்டி மஹாராஷ்ட்ரா அரசு, மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்ததே இதற்குக் காரணம். வர்த்தக முடிவில் இறங்கிய விலையில் பாதி ஏறியதால் முதலீட்டாளர்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்'' என்றார்.

''மிட் கேப் பார்மா பங்கான ஸ்டிரைட்ஸ் அர்கோலேப்-ன் விலை கடந்த வியாழனன்று மட்டும் 17.5% இறங்கியதே, என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''இதன் ஊசி மருந்துப் பிரிவு, ஃபைசர் நிறுவனத்துக்கு விற்கப்படும் என்கிற வதந்தி பரவியதால் ஏற்பட்ட தாக்கம்தான் இது. இதுமாதிரியான வதந்திகளை யார் பரப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் செபி இன்னும் கொஞ்சம் கடுமையாக நடக்கவேண்டும் என்பதே என் கருத்து'' என்றார்.

''சஹாரா விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் செமத்தியாகத் திட்டு வாங்கி இருக்கிறதே செபி?'' என்று இழுத்தோம்.

''24,000 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சஹாரா நிறுவனம் மீது எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்பதே நீதிமன்றத்தின் கோபத்துக்குக் காரணம். பாவம், செபி. அதனிடம் ஆள்பலம் குறைவு. இதை நன்றாகத் தெரிந்துகொண்ட சஹாராவோ லாரிகளில் டாக்குமென்ட்களை அனுப்பி, செபியையே அசர வைக்கிறது. இந்த விஷயத்தில் செபி மட்டுமே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, தனி ஒரு அமைப்பை நிறுவி விசாரித்து நடவடிக்கை எடுப்பதே நல்லது'' என்றார்.

''பட்ஜெட் வருகிறதே, வரிச் சலுகை பற்றிய அறிவிப்பு ஏதும் வருமா?'' என்று கேட்டோம்.

ஷேர்லக் - பட்ஜெட் வரை நிதானம் !

''அரசாங்கம் கடுமையான நிதிப் பற்றாக் குறையில் இருக்கிறது. இந்தப் பற்றாக்குறையைப் போக்க வரி வசூலை அதிகரிப்பது கட்டாயம். இந்நிலையில் வரி வசூலைத் தீவிரப்படுத்தும்படி வருமான வரித் துறை அதிகாரிகளைப் பார்த்து கேட்க, 'எங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை முதலில் நிறைவேற்றுங்கள். அப்போதுதான் நீங்கள் சொல்வதைச் செய்வோம்’ என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம் வரித் துறை அதிகாரிகள். வரும் 20-ம் தேதி முதல் எந்த ரெய்டிலும் பங்கு கொள்ளப்போவதில்லை  என முடிவு செய்திருக்கிறார்களாம். பட்ஜெட் நேரத்தில் இப்படி ஒரு பிரச்னையா என கலங்கிப்போய் நிற்கிறதாம் நிதி அமைச்சகம்'' என்றவர், சட்டென புறப்படத் தயாரானார்.

''ஜி.டி.பி. குறைவதால் ஆர்.பி.ஐ. வட்டி விகிதங்களைக் குறைக்குமா?''  என்று கேட்டோம்.

''வளர்ச்சியை துரிதப்படுத்தவேண்டுமெனில் வட்டி விகிதங்களை குறைத்துதான் ஆகவேண்டும் என்பதே எல்லோரது கருத்தும். ஆனால், பணவீக்கம் இன்னமும் குறையாதபோது வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ. குறைக்காது. ஆனால், ஜி.டி.பி. 5 சதவிகிதத்திற்கும் கீழே செல்லும்பட்சத்தில் ஆர்.பி.ஐ. நிச்சயம் வட்டியைக் குறைக்கும்!'' என்றவர், ''ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் என்.எஃப்.ஓ. காலம்

15 நாட்களாக இருக்கிறது. இதை 30 நாட்களாக அதிகரித்து செபி அமைப்பு உத்தரவிட்டுள்ளது'' என்று சொன்னவர், ''வருகிற 11-ம் தேதி முதல் எம்.சி.எக்ஸ்-எஸ்.எக்ஸ். என்னும் புதிய எக்ஸ்சேஞ்ச் செயல்படத் தொடங்குகிறது. வெல்கம் எம்.சி.எக்ஸ்.-எஸ்.எக்ஸ்.'' என்று சொல்லிவிட்டு, புறப்பட்டவர்,

''இந்த வாரமும் ஷேர்டிப்ஸ் இல்லை என்று சொல்லமாட்டேன். இந்த வாரம் சொல்லப் போகும் பங்குகளை விலை குறைந்தபிறகு கொஞ்சமாக வாங்குங்கள்."

கேன்ஃபின் ஹோம்ஸ்
(Canfinhomes),
யுனைடெட் பாஸ்பரஸ்
(Unitedphos),
பி.ஐ. இண்டஸ்ட்ரிஸ்
(PIIndustires).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism