Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

புதிதாக நிறுவனம் தொடங்கும் பலருடைய ஆசை என்ன? தான் தொடங்கும் நிறுவனம் கிடுகிடுவென வளர்ந்து, பங்குச் சந்தையில் பொதுமக்களின் முதலீட்டில் நடத்தப்பட வேண்டும் என்பதாகவே இருக் கும். நிறுவனம் தொடங்கும்போது முதலீடு செய்தவர்களுக்குப் பலனும், இந்த பொதுச் சந்தை நிகழ்வில்தான் இருக்கும். ஆனால், பொதுச் சந்தையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மிகப் பெரிய கவலை, பங்கு மதிப்பு. அதைக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நிறுவனத்தின் கடமை. பங்கு விலை குறைய நேர்ந்தால், தனது நிறுவனத்தை போட்டி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முற்படலாம்; நிறுவனத்துக்கு சப்ளை செய்பவர்கள், 'முன்பணம் கொடுத்தால் மட்டுமே பொருட்களைக் கொடுப்போம்!’ எனச் சொல்லலாம்; ஏன், வேலைக்குச் சேர விரும்புபவர்களின் விருப்பம்கூடக் குறைய வாய்ப்பு உண்டு. இதனால், பொதுச் சந்தையில் தங்களது பங்குகளை வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிகள் பொதுவாக டென்ஷனிலேயே இருப்பதைப் பார்க்க முடியும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் நிறுவனத்தின் நிதி அறிக்கையைப் பார்த்து பொதுச் சந்தை முதலீட்டு நிபுணர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ என்ற திகிலில், நீண்ட காலத் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவது என்பது கடினம். இப்படிப்பட்ட காரணங்களினால், சில தருணங்களில் பொதுச் சந்தையில் இருக்கும் நிறுவனம் பங்குதாரர்களிடம் இருந்து அனைத்துப் பங்குகளையும் வாங்கிக்கொண்டு தனியார் நிறுவனமாக மாறிவிட்ட உதாரணங்கள் உண்டு. இந்த வாரம் மேற்படி நடவடிக்கையை எடுத்திருப்பது டெல் நிறுவனம். கணினிகளை  அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்; அவர்களுக்கு கணினியை எளிதாக வாங்கவும், வாங்கியதை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு சப்போர்ட்டும் கொடுத்துவிட்டால், விற்பனை பெருகும் என்பதை 80- களின் தொடக்கத்தில் கல்லூரி மாணவனாக இருந்தபோதே கண்டறிந்த மைக்கேல் டெல், கல்லூரி விடுதியில் இருந்தபோதே ஆரம்பித்த நிறுவனம்தான் டெல். இந்த நிறுவனம் தனது சாதனங்களைப் பயனீட்டாளர்களுக்கு நேரடியாக மட்டுமே விற்கும்; கடைகளில் இருக்காது என்பதால், விலையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. பொதுச் சந்தையில் டெல் நுழைந்த தினத்திலேயே பில்லியனர் ஆனார் மைக்கேல். 90-களிலும் நல்ல வளர்ச்சிதான். ஆப்பிளின் ஐபேட் எப்போது வெளியிடப்பட்டதோ அந்த நாளில் டெல்லுக்குப் பிடித்தது சனி. டேப்ளட் பயனீடு அதிகரிக்க ஆரம்பித்ததும், மேசை மற்றும் மடிக் கணினிகளின் விற்பனை குறைய ஆரம்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி

வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர் வயதாகி பழுதாகிப்போனால், அதற்குப் பதில் மற்றொன்று வாங்கும் பழக்கம் மறைந்து போய், ஆப்பிளின் ஐபேட் அல்லது சாம்ஸங் கேலக்ஸி போன்ற டேப்ளட் வாங்கும் பழக்கம் வந்துவிட்டது. விளைவு, டெல் போன்ற நிறுவனங்களுக்குக் கடும் சரிவு. குறிப்பாக, டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு தடாலடியாகச் சரிந்தபடியே இருக்க, கடந்த வருடம் முழுவதும் கலக்கத்திலேயே இருந்தது டெல். தனக்கே உரித்தான மொபைல் சாதனங்களைத் தயாரித்து வெளியிட வேண்டும் என்றால், அதிக முதலீடு தேவை. வீழ்ந்தபடி இருக்கும் பங்கு மதிப்பின் காரணத்தால் இந்த முதலீட்டைப் பெறுவது மிகக் கடினம். இந்த வாரத்தில் மைக்கேல் டெல் தனது சொந்தப் பணத்தையும், மற்றொரு தனியார் முதலீட்டு நிறுவனத்தின் பணத்தையும் எடுத்து டெல் நிறுவனப் பங்குகள் அனைத்தையும் மொத்தமாக வாங்கி டெல் நிறுவனத்தைத் தனியார் நிறுவனம்ஆக்கிவிட்டார். ஆப்பிள், சாம்ஸங் நிறுவனங் களுக்குப் போட்டியாக டெல் சாதித்துக் காட்டுமா அல்லது இந்த முயற்சியெல்லாம் வீண்தானா என்பது இந்த வருட இறுதிக்குள் தெரியவரும்.

சென்ற வாரம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடக்கும் Super Bowl நடந்து முடிந்தது. அமெரிக்கக் கால்பந்து விளையாட்டின் வருடாந்திர உற்சவம்தான் Super Bowl. நான் வசிக்கும் சான்ஃப்ரான் சிஸ்கோ அணி இந்த முறை இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஊரே வாரம் முழுக்க அமர்க்களப்பட்டது. Super Bowl விளையாட்டு நிகழ்வு 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரால் டி.வி-யில் பார்க்கப்படுவதால், இந்த நிகழ்ச்சியில் விளம்பரம் கொடுக்க போட்டா போட்டி நிலவும். 20 நொடிகளே நீடிக்கும் விளம்பரங்களுக்கு மில்லியன்கள் கொடுக்க வேண்டியிருக்கும். நாளடைவில், Super Bowl விளம்பரம் என்றாலே அதற்கெனத் தனி மதிப்பு உருவாகிவிட்டது. Super Bowl முடிந்ததும் எந்த விளம்பரம் மிகப் பிரமாண்ட 'வெற்றி’ பெற்றது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி எல்லாம் நடக்கும்.

அறிவிழி

இந்த வருட சூப்பர் பவுல் விளம்பரத்தில் பிரபலமானது, வலைதளப் பெயர்களை விற்கும் GoDaddy. தங்கள் நிறுவனம் செக்ஸியாகவும், ஸ்மார்ட்டாகவும் இருப்பதாகச் சொல்ல வேண்டும் என்பதைச் 'செயல்படுத்தியே’ காட்டிய இந்த விளம்பரத்தில், இஸ்ரேல் நாட்டின் செம செக்ஸி சூப்பர் மாடலும், வட்டக் கண்ணாடி அணிந்து இருக்கும் குண்டான சாஃப்ட்வேர் பையனும் அமர்க்களமாக, ஆழமாக ஃப்ரெஞ்ச் கிஸ் கொடுக்கிறார்கள். ‘Together they are perfect’  என்று முடிகிறது விளம்பரம். நிறுவனத்தைப் பிரபலப்படுத்துவதற்கு ‘perfect’ ஆன விளம்பரம்.

வீடியோ பார்க்கத் துடிப்பவர்கள் செல்ல வேண்டிய உரலி   http://videos.godaddy.com/super-bowl-commercials.aspx

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism