Published:Updated:

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...

என்ன செய்ய வேண்டும் சிதம்பரம்?

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...

என்ன செய்ய வேண்டும் சிதம்பரம்?

Published:Updated:

கவர் ஸ்டோரி

##~##

வருகிற மத்திய பட்ஜெட், தேர்தல் பட்ஜெட்டாக இருக்கும் என்பதுதான் எல்லோரது கருத்தும். எனவே, சலுகைகளுக்குக் குறைவிருக்காது என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், வறுத்தெடுக்கும் நிதிப் பற்றாக்குறையால் மத்திய அரசு ஏற்கெனவே மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், இந்த பட்ஜெட்டிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் என்னென்ன மாற்றங்களை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்? என்பதை அறிய அவர்களுடன் பேசினோம். தவிர, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருக்கும் மக்களுடனும் பேசினோம். அவர்கள் தெரிவித்த கருத்துக் குவியல்களின் தொகுப்புதான் இந்த ரிப்போர்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ஜெட் என்றாலே, புதிதாக ஏதாவது வரி விதித்திருக்கிறார்களா அல்லது சலுகை தந்திருக்கிறார்களா என்றுதான் முதலில் பார்ப்போம். அந்த வகையில் தனிநபர் வருமான வரியைப் பொறுத்தவரை, என்ன மாற்றங்களை செய்யவேண்டும் என்று சொல்கிறார் ஆடிட்டர் வி.பட்டாபிராம்.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...

ரூ.5 லட்சத்துக்கு வரிவிலக்கு!

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் வி.பட்டாபிராம் தன் எதிர்பார்ப்பை முதலில் வைக்கிறார்.

''தற்போது தனிநபர் வருமான வரிவிலக்கு அடிப்படை வரம்பு 2 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இது போதுமானதல்ல. வரி விலக்கு அடிப்படை வரம்பை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தால்தான் செலவுகளை செய்யமுடியும். இல்லை எனில், வரிச் சேமிப்புக்காகச் செலவுகளைச் சுருக்கவேண்டி இருக்கிறது.

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...

தற்போது பிள்ளைகள் கல்வி செலவுக்கான படி ஆண்டுக்கு 1,200 ரூபாய் மட்டுமே வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள முடியும். இதை 24,000 ரூபாயாக அதிகரிக்கவேண்டும். 80சி பிரிவின் கீழ்வரும் முதலீடு மற்றும் செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரைதான் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இதை 2.5 லட்சம் ரூபாயாக அதிகரித்தால் பலருக்கும் நன்மையாக அமையும்.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை 50,000 ரூபாயிலிருந்து 1,00,000 ரூபாயாக அதிகரிக்கவேண்டும். இதேபோல் வீட்டுக் கடனுக்கான வட்டியில் அளிக்கப்படும் 1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை, வீடு விலை மிகவும் அதிகரித்துவிட்ட நிலையில் போதுமானதாக இல்லை. இதை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவேண்டும்'' என்றார்.

இன்ஷூரன்ஸுக்கு ரூ.50 ஆயிரம்!

வரிச் சலுகை பெறுவதற்காகப் பலரும் பலவிதமான திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த முதலீடுகளில் ஒன்று ஆயுள் காப்பீடு. ஆயுள் காப்பீட்டிற்கான பிரீமியம் தற்போது 80சி பிரிவுக்குள் வருகிறது. அந்த வகையில் பலருக்கும் பி.எஃப்., கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் அசல் போக குறைவான பிரீமியத் தொகைக்குதான் வரிச் சலுகை பெற முடிகிறது. அல்லது வரிச் சலுகை பெற முடியாமலே போய்விடுகிறது.

இந்நிலையில், பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாசன், இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு என்னென்ன சலுகை கள் தரவேண்டும் என்று

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...

விளக்குகிறார்.  

''மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையால் திணறிவரும் இந் நேரத்தில், நீண்ட கால லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மற்றும் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் பென்ஷன் திட்டத் துக்கு மத்திய அரசு அதிக வரிச் சலுகை அளித்தால் தங்கம் போன்ற வருமானம் ஈட்டாத முதலீடுகளை நோக்கி மக்கள் செல்வது குறையும்.

தற்போது இந்த முதலீடு மற்றும் செலவு எல்லாம் கலந்த பிரிவாக 80சி பிரிவு இருக்கிறது.  இன்ஷூரன்ஸ் பிரீமியத்திற்கு தனியாகக் குறைந்தபட்சம் 50,000 ரூபாய்க்கு வரிச் சலுகை அளிக்கவேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் மத்திய அரசுக்கு தங்கம் போன்ற இறக்குமதி சுமை மற்றும் பாதிப்பு குறையும். அதிகம்பேர் கூடுதல் கவரேஜுக்கு பாலிசி எடுத்துக்கொள்வார்கள்'' என்றார்.

கல்விக் கடன் வேண்டும்!

இந்தியா வேகமாக வளர்ந்துவரும் நாடு. இந்த வளர்ச்சி தடைபடாமல் இருக்கவேண்டுமெனில் எல்லோருக்கும் கல்வி தேவை. கல்வியைப் பொறுத்தவரை, வரும் பட்ஜெட்டில் இந்த மாற்றம் தேவை என்பதைச் சொல்கிறார் இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச்-ன் இணை இயக்குநர் (பப்ளிக் ஃபைனான்ஸ்) சிவசுப்பிரமணியன். ''உலக அளவில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, உயர்கல்வியில் சேர்பவர்களின் சதவிகிதம் 24 சதவிகிதமாக உள்ளது. இது இந்தியாவில் 18.8 சதவிகிதமாக உள்ளது. இதற்கு காரணம், மேற்படிப்புக்கான செலவு அதிகமாக இருப்பது. இச்செலவை ஈடுகட்டும் விதமாக, கல்விக் கடன் சரியாகக் கிடைக்காமல் இருப்பது. இதை சரிசெய்ய குறைந்த வட்டியில் தாராளமாக கல்விக் கடன் தருவதுடன், கல்விக் கட்டணத்தை அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் குறைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.  

பென்ஷனுக்கு புது ஃபண்ட்!

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல மாற்றங்களை எல்லோரும் எதிர்பார்த்தாலும், பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிர மணியனின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்தது. ''தற்போதுள்ள மியூச்சுவல் ஃபண்ட் பென்ஷன் திட்டங்கள், 58 வயதில் பணம் எடுப்பதுபோல் மிக நீண்ட திட்டமாக இருக்கிறது. இடையில் எடுத்தால் அதிகபட்சம் 5% வரை வெளியேறும் கட்டணம் இருக்கிறது. மேலும், இவற்றில் பங்குச் சந்தையில் அதிகபட்சம் 40 சதவிகிதம்தான் முதலீடு செய்யப் படுகிறது. இதை முதலீட்டாளர் களுக்கு அதிக பயனுள்ளதாகவும் அதிக வருமானம் கிடைக்கக்கூடிய திட்டமாகவும் மாற்றி அமைக்க செபியின் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு மற்றும் ஆம்ஃபி அமைப்பைக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தத் திட்டம் தயாராகி இருக்கிறது. இது ஓப்பன் எண்டட் திட்டமாகவும், 10 முதல் 15 ஆண்டுகால திட்டமாகவும் இருக்கும். இதற்கு வரிச் சலுகை அளித்து பட்ஜெட்டில் வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

சம்பளக்காரர்களின் எதிர்பார்ப்பு!

மத்திய பட்ஜெட்டிலிருந்து மாதச் சம்பளக்காரர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசம்) டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சர்வே ஒன்றை நடத்தியது. இதில் சுமார் 90 சதவிகிதம் பேர், அடிப்படை வருமான வரம்பை தற்போதைய 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், மெடிக்ளைம் பாலிசி பிரீமியத்துக்கான வரிச் சலுகையை தற்போதைய 15,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தவேண்டும் என்றும் சொன்னார்கள்.

எதிர்பார்ப்புகளை எல்லாம் சொல்லி விட்டோம். இந்த நியாயமான எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றவேண்டியது நிதி அமைச்சர் சிதம்பரம்தான்! நிறைவேற்றுவாரா?

சி.சரவணன், செ.கார்த்திகேயன், ரா.அண்ணாமலை
மற்றும் மாணவ நிருபர்கள் குழு.
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து
மற்றும் மாணவப் புகைப்படக்காரர்கள். 

பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism