Published:Updated:

தேவை விவசாயத்திற்கு தனி பட்ஜெட் !

மு.சா.கௌதமன், படம்: செ.சிவபாலன்.

தேவை விவசாயத்திற்கு தனி பட்ஜெட் !

மு.சா.கௌதமன், படம்: செ.சிவபாலன்.

Published:Updated:

கோரிக்கை

##~##

மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் தாக்கலின்போது தொழில்துறை வளர்ச்சிக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு சில அறிவிப்புகளே வெளியாகும். அதுவும், விவசாயிகளின் ஓட்டுகளை பெறவேண்டும் என்கிற நோக்கத்திலேயே இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரயில்வே பட்ஜெட்போல, விவசாயத்துக்கும் தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யலாமே என்கிற கோரிக்கை பல ஆண்டுகாலமாகவே இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் விவசாயத்துக்கென ஒரு பட்ஜெட் தாக்கல் செய்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், வருகிற பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதைச் சொல்கிறார் ஒருங்கிணைந்த தஞ்சை (தஞ்சை, திருவாரூர், நாகை) மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர். ஆறுபாதி.ப.கல்யாணம்.

''ஒரு விவசாயிக்கு அடிப்படைத் தேவை நான்குதான்; அவற்றை சரி செய்தால் போதும் விவசாயத்தில் அனைத்தையும் பெற்றுவிடலாம். முதலில், விவசாயம் செய்ய அடிப்படை ஆதாரமாக உள்ளது நீர். இந்தியாவில் நீர் இல்லாமல் இல்லை; நம் நாட்டில் மட்டும் 65,000 டி.எம்.சி.க்கு அதிகமான நீர் இருக்கிறது. ஆனால், நாம் பயன்படுத்துவது எவ்வளவு தெரியுமா..? வெறும் 17,500 டி.எம்.சி.தான். நம் நாட்டின் மொத்த சாகுபடி நிலம் 114 மில்லியன் ஹெக்டேர். ஆனால், சரியாக நீர் பாசனம் கிடைப்பது வெறும் 57 மில்லியன் ஹெக்டேர்தான். .இந்த மீதமுள்ள நீரை சரியாக நிர்வகித்தாலே போதும். அதற்கு இந்த ஆண்டு போடும் பட்ஜெட்டில் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு அதிக நிதியை ஒதுக்கவேண்டும்.

தேவை விவசாயத்திற்கு தனி பட்ஜெட் !

விவசாயம் செய்யத் தேவையானது பணம். விவசாயிக்கு வங்கிக் கடன் 4 சதவிகித வட்டியில்  தருவதாக அறிவித்துள்ளது அரசாங்கம். ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. நம் அரசு, விவசாயிகளுக்கு

10, 11, 12 என வட்டி விகிதத்தை ஏற்றிக்கொண்டே போகிறது. இந்த விஷயத்தில் நிதியமைச்சர் அயல்நாடுகளைப் பார்ப்பதில்லை. அமெரிக்காவில் விவசாயிக்கு மானியங்களை அள்ளி வழங்குகிறார்கள்; சீனாவில் 0 சதவிகித வட்டியில் கடன் தருகிறார்கள். இதை எல்லாம் நம் அரசு பார்ப்பதில்லை.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அந்த இடத்திலேயே மதிப்பு கூட்டப்பட்டு விற்பனை செய்யவேண்டும். ஒரு தொழிற்சாலை உற்பத்திப் பொருளுக்கு அதிகமாக லாபத்தை வைக்கிறது. ஒரு மருந்துப் பொருளுக்கு அதிகமான லாபம் வைக்கிறது. ஆனால், விவசாயப் பொருட்களுக்கு அந்த அளவு லாபம் கிடைப்பது இல்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, கரும்பு விலை...

ஒரு டன் கரும்பின் விலை 2,500 ரூபாய். ஆனால், இந்த ஒரு டன் கரும்பிலிருந்து நாம் பெறும் பொருட்களின் மதிப்பு மட்டும் 35,000 முதல் 38,000 ரூபாய் வரை. கரும்பிலிருந்து சர்க்கரை, ஆல்கஹால், மொலாசாஸ் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. எனவேதான் இத்திட்டத்தை

தேவை விவசாயத்திற்கு தனி பட்ஜெட் !

கொண்டுவர வேண்டும் என்கிறோம். அரசு அப்படி செய்ய சம்மதித்தால் விவசாயிகள் யாரும் நகரத்திற்கு செல்லமாட்டார்கள்; எங்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.

அடுத்ததாக, நம் நாட்டில் மட்டும்தான் இன்ஷூரன்ஸ்கூட சாம்பிள் பார்த்து தரப் படுகிறது. பயிர் வளராமல் கருகிவிட்டாலோ, வாடிப்போனாலோ இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் சாம்பிள் பார்த்து முடிவை சொல்வார்கள். அவர்கள் சொல்லும் முடிவு விவசாயிக்கு சாதகமாக இருந்தால்கூட பாதி இழப்பீடுதான் கிடைக்கும். முதலில், இந்த முறையை கைவிடவேண்டும். நம் நாட்டின் மொத்த இயற்கை இழப்பீடுகள் குறைந்தபட்சம் 60,000 கோடிக்கு மேல். ஆனால் அரசாங்கம் ஒதுக்குவதோ அதிகபட்சமாக வெறும் 5,000 கோடி மட்டுமே. அப்படி என்றால், அரசு இழப்பீட்டை தருகிறது என்பது ஏமாற்று வேலைதானே?

விவசாயிகளின் மொத்தக் கடன் 71,680 கோடி ரூபாய் அனைத்தும் தள்ளுபடி என்றும், இதனால்

4.28 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும் கூறியது அரசு. ஆனால், நாடாளுமன்றத்தில் 51,340 கோடி ரூபாயும் 2.90 கோடி பேரும் பயன்பெற்றனர் என்றார்கள். இதுகூட பொய் என்று சி.ஏ.ஜி. அப்பட்டமாக கூறியுள்ளது.

நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றுதான். விவசாயத்திற்கு 2% நிதியை ஒதுக்குகிறார்கள், இது 20% ஆகவேண்டும். விவசாயத்திற்கு  தனியாக பட்ஜெட் போட வேண்டும்; விவசாய அமைச்சகம் இரண்டாக மறுகட்டுமானம் செய்ய வேண்டும். ஒன்று உற்பத்தியையும், மற்றொன்று விவசாயிகளின் நலத்தையும் கவனிப்பதாக இருக்கவேண்டும்.

விவசாயப் பொருட்களுக்குத் தரும் முக்கியத்துவம், விவசாயிகளுக்குத் தரப்படுவதில்லை'' என்றார் கல்யாணம்.

விவசாயம் சுருங்கி வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாவதற்கு முன்பாக  விவசாயத்தைத் தூக்கி நிறுத்துவாரா நிதி அமைச்சர்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism