யட்சன்
##~##

திரே உட்கார்ந்திருந்த வழுக்கை  மனிதரின் பார்வை போகும் திசையைக் கவனித்து, ஏற்கெனவே ஒழுங்காகப் போர்த்தி இருந்த துப்பட்டாவைத் தேவையின்றி சரிசெய்து கொண்டாள் தீபா.

இன்டர்காம் ஒலித்தது. ''சார், நீங்க போலாம்...''

அவ்வளவு அவசரமாக அழைக்கப்பட்டுவிட்ட வருத்தத்தைக் கண்களில் தேக்கி, அநாவசியமாக ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு அவர் நகர்ந்துபோனார். தீபாவின் அன்றாடத்தில் இது போன்ற ஓரிருவர் தட்டுப்படுவது வாடிக்கை. பார்வையை உயர்த்தி சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 3.30. ஏன் இன்னும் செந்திலிடம் இருந்து போன் வரவில்லை..? நிமிடத்துக்குப் 10 தடவை மேஜை இழுப்பறையைத் திறந்து, செல்போனில் மிஸ்டு கால் வந்திருக்கிறதா என்று சரிபார்த்தாள்.

இன்டர்காம் ஒலித்தது. எடுத்தாள். அவளுடைய பாஸ்.

''தீபா, 28-ம் தேதி எவ்ளோ ரூம்ஸ் புக் ஆகியிருக்கு?''

கம்ப்யூட்டரைத் தட்டினாள்... ''42 சார். 12 ரூம்தான் வேகன்ட்'' என்றாள்.

''அதை பிளாக் பண்ணிரு.''

யட்சன்

ஒரு கல்யாண மண்டபம், ஒரு லாட்ஜ், இரண்டு ஹோட்டல்கள், ஒரு சினிமா தியேட்டர் எல்லாவற்றுக்கும் ஒரே முதலாளி. அவருக்கு அவள் ஒரே உதவியாளர். எதுவாக இருந்தாலும் 'தீபா... தீபா... தீபா...’

திடீரென்று மேஜையில் மின் அதிர்வு. சைலன்ட் மோடில் செல்போன் சிணுங்கி அடங்கியது. செந்தில்தான். அவளே அழைத்தாள்.

''என்ன ஆச்சு செந்தில்?''

''காலைல 9 மணிக்கு போட்டோவும் பேரும் குடுத்தேன்... இப்பதான் முடிச்சிட்டு வெளில வரேன். பயமா இருக்கு தீபா. ஆடிஷனுக்கு வந்தது 316 பேர்.''

''3,000 பேர் வந்தாலும் நீ ஜெயிப்ப செந்தில்.''

''ஆறு மாசம்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்தேன். இது எட்டாவது மாசம்.''

''வாய்ப்பு அப்படிலாம் காலண்டர் பார்த்து வராது... டைரக்டர் யாரு?''

''ஷங்கர்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தவராம்.''

''அடி சக்கை!''

''எப்படி தீபா உன்னால ஜெயிச்சுட்ட மாதிரியே பேச முடியுது?''

''ஜெயிப்படா! என்ன சொன்னாங்க?''

''என்னைவிட ஆறு அங்குலம் உசரமா,

வெள்ளையா, ஹேண்ட்ஸமா குறைஞ்சது 20 பேரைப் பார்த்தேன் தீபா.''

''சினிமால ஜெயிச்ச அத்தனை பேரும் ஆணழகனுங்களா செந்தில்? உன் திறமை மேல நம்பிக்கை இருக்குடா. ரிசல்ட் எப்ப தெரியும்?''

''12 பேரைத்தான் மொத ரவுண்டுல செலெக்ட் பண்றாங்க. சாயந்திரம் 6 மணிக்கு யார் யாருன்னு சொல்வாங்க. அதுல நான் இல்லேன்னா ஊருக் குத் திரும்பிடுவேன். எங்கப்பா சொல்ற சைக்கிள் கடைல கணக்கு எழுதிட்டு உட்கார்ந்துடுவேன்.''

''நீ போக மாட்டேடா... சென்னைதான் உன் ஊரு.''

எதிரில் ஒரு கதர் சட்டையின் நிழலாடியது.

''செந்தில் வேலை வந்துருச்சு... ஈவ்னிங் லிஸ்ட்ல உன் பேரு இருக்கும்... பார்த்துட்டு போன் பண்ணு'' என்று தொடர்பைத்துண்டித்தாள்.

''உக்காருங்க ப்ளீஸ்... சார் மீட்டிங்ல இருக் காரு. உங்க பேரு?'' என்று புன்னகையைப் பரிமாறினாள்.  

யட்சன்

செந்திலுக்குச் சாப்பாடு இறங்கவில்லை. தி.நகரில் மாலை வரை அலைந்தான். புடைவை அங்காடி, நகைக் கடை, நடைபாதை உணவு விடுதி என்று எங்கு திரும்பினும் தலைகள். எத்தனை பேர் பரபரப்பாக எதையோசாதித்து விட எங்கேயோ ஓடிக்கொண்டு இருக்கிறார் கள். அவனுக்கு மட்டும் ஏன் நாட்கள் இப்படி வீணாகவே கழிகின்றன? ஆடியோ ரிலீஸ் என்று தெரு நீளத்துக்கு ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டி அருகில் சற்று நேரம் ஏக்கத்துடன் நின்றிருந்தான். கல்லூரி விழா வில் அவனுக்குப் பரிசளித்த தரணி, அவன் ஊரில் படப்பிடிப்பு நடத்தியபோது நம்பிக்கை அளித்த ஹரி, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அழைப்பு விடுத்த வெங்கட்பிரபு என்று எத்தனை இயக்குநர்களை அவன் விடாமல் துரத்தினான்?

''தட்டிக்கழிக்கறாங்கன்னு சொல்லாதீங்க செந்தில்... ஊக்கம் கொடுக்கறதுக்காகப் பேசினதை நம்பி தினம் 100 பேரு வந்து நின்னா, அவங்க என்னதான் செய்வாங்க?'' என்று கோபிசந்த் சொன்னதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும், செந்தில்வெட்டி எடுக்கப்பட்ட அந்த செய்தித்தாள் சதுரத்தை மறுபடி எடுத்துப் பார்த்தான்.

'திறமை உள்ள புதுமுகங்கள் தேவை.’

அவன் திறமை உள்ளவன்தானா என்று மாலையில் தெரிந்துவிடும். பகல் தேய்ந்ததும் பின்னும் கால்களை எடுத்துவைத்து, உஸ்மான் ரோட்டின் விலா எலும்பில் இருந்த அந்தக் கல்யாண மண்டபம் நோக்கி நடந் தான். தெருவை அடைத்துக்கொண்டு இளைஞர்கள். தேர்வு நடந்த அந்த மண்டபத்தின் உள்ளிருந்து உருண்டு திரண்ட ஓர் ஆள் வெளியே வந்தார். அச்ச டித்த காகிதத்தை உயர்த்திக் காட்டினார். சன்னமான குரலில், ''கசகசன்னு சத்தம் போடாதீங்க. பேரு படிக்கறவங்க மட்டும் இருங்க. மத்தவங்க போலாம்'' என்றார்.

அடுத்த நொடி அங்கே மரண அமைதி.

ஏக்க முகங்களும் நின்றுபோன மூச்சுகளுமாக நிறைந்திருந்தவர்கள் மத்தியில் தேர்வான 12 பெயர்களை அவர் படிக்க ஆரம்பித்தார்....

- தடதடக்கும்...