Published:Updated:

கோவை அமுல் பேபி

கோவை அமுல் பேபி

என்ன விலை அழகே!

கோவை அமுல் பேபி

விட்டால் ஈரோட்டையே, 'என்ன விலை?’ என்று கேட்பார் 'வி’ டி.வி-யின் பவதாரணி! 'என்ன விலை?’ நிகழ்ச்சி மூலம் ஈரோடு முழுவதும் பிரபலம். வெளியே போனால் மக்களின் விசாரிப்பு மழையில் நனையவே நேரம் போதவில்லையாம். 'காய்கறி வாங்க பக்கத்துல இருக்குற மார்க்கெட்டுக்குப் போயிட்டு வரவே ஒரு மணி நேரமாகிடுது...’ என அலுத்துக்கொள்பவர், பல நேரங்களில் பர்தாவில் வலம் வர வேண்டி இருக்கிறதாம். பவதாரணி சமையலிலும் ஸ்பெஷலிஸ்ட். சுமார் 100 வகை டிபன் வகையறாக்கள் அம்மணிக்கு அத்துப்படி. எல்லோரிடமும் 'என்ன விலை’ என்று கேட்பவர், சமீபத்தில் வாங்கியது காஸ்ட்லியான நெக்லஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 என்ன  விலையாம்? சொல்ல  மாட்டேங்குது  அம்மணி!

கோவை அமுல் பேபி

கோவை அமுல் பேபி

ஸ்வர்யா அமல். ஸ்கை டி.வி-யின் ஜிலீர் வீடியோ ஜாக்கி. கோவையில் என்ன விழா என்றாலும், கலாய்ப்பதற்கு, 'கூப்பிடு ஐஸை’ என்கிறார்கள். என் விகடன் என்றதும், 'ஹைய்யோ... நானா...’ என்றார் கூடுதல் குஷியுடன்!

''சின்ன வயசுலயே டி.வி-யில வரணும்னு ரொம்ப ஆசைங்க. ரோட்டுல நடந்து போறப்ப எல்லோரும் என்னைப் பார்க்கணும். புகழ்ந்து பேசணும்னு நினைப்பேன்ங்க. 'பாலிமர் டி.வி-யில் வி.ஜே-வாக வேலை பார்க்க இஷ்டமானு கூப்பிட்டாங்க. முதல் ஷோ. ஸ்க்ரிப்ட்டை மனப்பாடம் பண்ணிப் பேசணும்ங்க. ஒருவழியா மனப்பாடம் பண்ணி, கேமரா முன்னாடி நின்னு பேச ஆரம்பிச்சா... எல்லாமே மறந்துபோச்சு. தப்புத் தப்பாப் பேசி... சொதப்பி... கேமரா முன்னாடியே அழ ஆரம்பிச்சிட்டேனுங்க. லைவ் ஷோ அது. 'கட்... கட்...’னு ஷோவை கேன்சல் பண்ணிட்டாங்க. பிடிச்சேன் ஓட்டம் வீட்டுக்கு. அதுக்கு அப்புறம் அம்மாதானுங்க என்னைச் சமாதானப் படுத்தி, திரும்பக் கொண்டுவந்து ஸ்டுடியோவில் விட்டாங்க. அப்புறம் பிக்-அப் பண்ணிட்டோம்ல'' - தடதடவெனப் பேசிக்கொண்டே இருக்கும் ஐஸின் கண்களுமே அவ்வளவு அழகு!

கோவை வாலுப் பையன்

கோவை அமுல் பேபி

கோவை ஹலோ எஃப்.எம்-ன் செல்லப் பையன் ஹரிகிருஷ்ணன். கோவை மக்களுக்குச் செல்லமாக, காலனி ஹரி. இன்னும் செல்லமாக, வாலு ஹரி. இப்போது ஹலோவில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 'நாலு மணி வாலு’ என்ற தலைப்பில் வால்தனம் செய்கிறார். ஆனாலும், உருப்படியான பேச்சு. 'ராம் நகர் மெயின் ரோடு மூணாவது கிராஸ்ல செம டிராஃபிக் ஜாம். அந்தப் பக்கம் போறவங்க செகண்ட் கிராஸைப் பிடிச்சு மெயின் ரோட்டுக்குப் போயிடுங்க’ என்று அட்வைஸ் டிப்ஸ் தருகிறார். கூடவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று உருப்படியான தகவல்கள். தொடர்ந்து, 'இளைய தளபதி விஜய் வாயில் சிங்கிள் சிகரெட்டைக் கவ்வியபடி, சிங்கிள் கையால் ஜிப்ஸியைத் தூக்கி செம காமெடி பண்ற பாட்டைக் கேளுங்ணா’ என்று 'அர்ஜுனன் வில்லு’ பாட்டைக் கலாய்த்தபடியே ஒலிபரப்புகிறார்.

''எப்படீங்க'' என்றோம். ''பொதுவா, குழந்தைங்களுக்கு ஒன்றரை வயசுலதான் சுமாராப் பேச்சு வரும். ஆனா, என்ன மாயமோ தெரியலை, நான் ஏழு மாசத்துலயே பேச ஆரம்பிச்சிட்டேன். அப்ப ஆரம்பிச்சது... இப்ப வரைக்கும் வாய் ஓய மாட்டேங்குது. சரி... வாய்தானே சோறு போடுது...'' என்று அடுத்த நேயரிடம் பேசத் துவங்குகிறார் வாலு!

கோவை அமுல் பேபி