Published:Updated:

ஷேர்லக் - பட்ஜெட்...சந்தைக்கு சாதகமா, பாதகமா?

ஷேர்லக் - பட்ஜெட்...சந்தைக்கு சாதகமா, பாதகமா?

ஷேர்லக் - பட்ஜெட்...சந்தைக்கு சாதகமா, பாதகமா?

ஷேர்லக் - பட்ஜெட்...சந்தைக்கு சாதகமா, பாதகமா?

Published:Updated:
##~##

நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக், சிரித்தபடியே ஸ்வீட் பார்சல் ஒன்றை நீட்டினார்.

வழக்கமாக நாம்தானே ஷேர்லக்குக்கு ஸ்வீட் கொடுப்போம். இப்போது அவர் தருகிறாரே என்கிற ஆச்சரியம் நமக்கு..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வீட்டில ஏதாவது விஷேசமா?'' என்றோம்.

''வீட்டில இல்ல நாட்டில... ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கம்பெனிகளைப் பற்றி நீங்க சரியான நேரத்துலதான் எழுதி இருந்தீங்க... இப்ப நடவடிக்கை எடுக்கச் சொல்லி செபிக்கு கோர்ட் நோட்டீஸ் போயிருக்கு'' என்றவர், சற்றே நிறுத்தித் தொடர்ந்தார்.

ஷேர்லக் -  பட்ஜெட்...சந்தைக்கு சாதகமா, பாதகமா?

''பங்குச் சந்தை விதிமுறைகளை பின்பற்றாத கம்பெனிகளை தடாலடியாக பங்குச் சந்தைகள் பட்டியலில் இருந்து தூர தூக்கிப் போட்டுவிடுகின்றன, பங்குச் சந்தைகள். இதனால் சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க முடியாமல் போய்விடுகிறது. இந்த நிறுவனங்கள் மீது செபியோ பங்குச் சந்தைகளோ மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கும் நிலையில் டெல்லி ஐகோர்ட் மத்திய அரசு, செபி, பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போன்றவற்றுக்கு  நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்தியாவில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுமார் 2,050 கம்பெனிகள் மீது பங்குச் சந்தைகள், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இப்படி நடவடிக்கை எடுக்காத பங்குச் சந்தைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஹைகோர்ட் இப்போது செபி மற்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறது. மேலும், இதுதொடர்பாக பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ள மிடாஸ் டச் முதலீட்டாளர்கள் சங்கம், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கேட்டிருக்கிறது. இனியாவது, முடங்கிக் கிடக்கும் முதலீட்டாளர்களின் பணம் ரூ.58,000 கோடி கிடைக்க  செபி நடவடிக்கை எடுக்கிறதா பார்ப்போம்'' என்றவர்,

''சில நேரங்களில் முதலீட்டாளர்கள் தெரியாமல் செய்யும் தவறுகூட லாபமாக முடிந்துவிடுகிறது..!'' என்று புதிர் போடுவதுபோல் பேசினார் ஷேர்லக்.

''கொஞ்சம் விளக்கமாகச் சொன்னா எல்லோருக்கும் புரியுமே'' என்றோம்.

''எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Elcid Investments)என்கிற நிறுவனம், அதன் பங்குகளை டீலிஸ்ட் செய்ய ஆஃபர் கொண்டு வந்திருக்கிறது. இதன் பங்கு கடைசியாக 2011 செப்டம்பர் 19-ம் தேதி ரூ.2.73-க்கு வர்த்தக மாகி இருக்கிறது. இந்த நிறுவனம் 229 சிறு முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு ஒன்றுக்கு ரூ.11,455 கொடுத்து வாங்குகிறது.''

''ஏன் இப்படி அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டும்?''

''நிறுவனத்தின் நிறுவனர்கள் வசம் 79.63 சதவிகிதப் பங்குகள் இருக்கின்றன. மீதியுள்ள 20.1% பங்குகளை வாங்குவதன் மூலம் முழு நிர்வாகமும் இதன் வசம் வந்துவிடும். அப்போது எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியும் என்பதால்தான் எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக அனலிஸ்ட்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்'' என்ற ஷேர்லக்குக்கு சூடாக இஞ்சி டீ, வெங்காய பஜ்ஜி கொடுத்தோம்.

அவற்றில் பார்வையை ஓட்டியபடியே, ''பட்ஜெட் சமயத்தில் பட்ஜெட் பற்றிய செய்தியை முதலில் சொல்கிறேன். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க voluntary disclosure scheme-யை கொண்டுவரப்போவதாக எனக்குத் தெரிந்த சோர்ஸ் சொல்லுகிறது. இதன்காரணமாக, பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தையும் கொண்டுவரலாம், நிதிப் பற்றாக்குறையும் குறையும் என்று தெரிகிறது. இத்தனை நாள் காத்திருந்துவிட்டோம், இன்னும் சில நாட்கள்தான் அதற்குள் எல்லாம் தெரிந்துவிடும்'' என்றவர், வங்கிகள் பக்கம் திரும்பினார்.

''பல நாட்களாக எதிர்பார்த்து வந்த புதிய வங்கி களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி ஒருவழியாக வெளியிட்டுவிட்டது. சில கார்ப்பரேட்களுக்கு  வங்கிகள் தொடங்க அனுமதி கிடைக்கலாம். இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட்களிடம் அனைத்து பிஸினஸ்களும் இருக்கிறது; ஆனால், வங்கி பிஸினஸை தவிர. இனி சுமார் 20-க்கும் மேற்பட்ட வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் நிச்சயமாக விண்ணப்பிக்கும் என்றே தெரிகிறது.

ஷேர்லக் -  பட்ஜெட்...சந்தைக்கு சாதகமா, பாதகமா?

இந்தியாவில், கிட்டத்தட்ட 35 சதவிகித மக்களுக்கு மட்டும்தான் வங்கிச் சேவை கிடைக்கிறது. இதை அதிகப்படுத்ததான், புதிய வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்கள். இதற்காக, புதிதாக ஆரம்பிக்கும் வங்கிகள், 25 சதவிகித கிளைகளை கிராமப்புற பகுதியில் ஆரம்பிக்கவேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் கண்டிஷன். ஏற்கெனவே இருக்கும் தனியார் வங்கிகள் இந்த உத்தரவினை எள்முனை அளவிலும் எடுத்துக்கொண்டதுபோல தெரியவில்லை.  அதேபோல, புதிய வங்கிகளாக இருந்தாலும் 40 சதவிகிதம் முன்னுரிமை கடன்கள் கொடுக்கவேண்டும் என ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. தற்போதைய வங்கிகளோ முன்னுரிமை கடன்களை ஒழுங்காகக் கொடுக்கிறதா என்று யாராவது பார்த்து ரிசர்வ் வங்கிக்கு ரிப்போர்ட் கொடுத்தால் நல்லது'' என்ற ஷேர்லக்கிடம்,

''சந்தை தொடர்ந்து இறங்கத் தொடங்கி இருக்கிறதே?'' என்றோம்.

''எல்லாம்  அமெரிக்காதான் காரணம். அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைக்காக மேற்கொண்டு வந்த பாண்டுகள் வாங்கும் திட்டத்தை நிறுத்தப் போவதாக சிக்னல் கொடுத்திருக்கிறது. இதற்கான இறுதி முடிவு அடுத்தவாரத்தில் எடுக்கப்பட இருக்கிறது. அது சாதகமா? பாதகமா? என்பதைப் பொறுத்துதான் இந்தியச் சந்தையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும்.

கூடவே, மத்திய பட்ஜெட்டும் வருகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் அரசு தாராள சலுகைகளை அள்ளி வீசும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக கிளம்பி இருக்கிறது. இது பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். அந்த வகை யில், அடுத்தவாரத்தில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக பங்கு முதலீட்டை மேற்கொள்வது நல்லது. ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லாதவர்கள், சந்தையை வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.'' என்ற ஷேர்லக், பஜ்ஜிகளை சாப்பிட்டுவிட்டு எண்ணெய்யை காகிதத்தில் துடைத்தபடி, டிப்ஸ் எதுவும் இல்லை, இனி மத்திய பட்ஜெட்க்குப் பிறகு பார்ப்போம் என்று நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism