2019, மார்ச் மாதம். நான் பெரிதாக ஒன்றும் பொறுப்புகள் (Consulting Assignments) ஒத்துக்கொள்ளவில்லை. வரிசையாக பயணங்கள் திட்டமிட்டிருந்தேன். அப்போது என் மனைவி சூசகமாக வெட்டியாதானே இருக்கிறோம், அந்த துருக்கி பயணம் இப்போது போகலாமே என்றார்கள். என் பெண்கள் சென்றுவிட்டு வந்த பிறகு அம்மாவை அழைத்தே போகவேண்டும் என்று உத்தரவு,
முன்பே துருக்கி சிலமுறை சென்றிருக்கிறேன், பணி நிமித்தமாக. நாள் முழுதும் வேலை. அவ்வப்போது இரவு உணவுக்கு (வேறு வழியின்றி) பிற மேலாளர்களோடு செல்ல வேண்டி வரும். ஆனால், தெரிந்ததெல்லாம் தக்சிம் சதுக்கம் (Taksim Square) தான். பொடி நடையாய் போய் அவித்த செஸ்ட்நட் (Chestnut) சாப்பிட்டு, Pimps மற்றும் ஏமாற்றுபவர்களை (scamsters) லாவகமாக தவிர்த்துவிட்டு வந்து தூங்கிவிடுவேன். இன்டெர்கான்டினென்டல் விடுதிதான் (தக்சிம் சதுக்கம்) பெரும்பாலும் என் ஜாகை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என் பெண்களின் அறிவுரைப்படி இஸ்தான்புல், கப்படோச்சியா மற்றும் இஸ்மிர் உள்ளடக்கி விமான பயணசீட்டு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து எல்லாம் முன்பதிவு செய்தேன். அப்பொழுது மனைவி சொன்னார்கள் விசாவும் வாங்கவேண்டும் என்று. முந்தைய பயணங்களில் விசா விமான நிலையத்தில் வாங்கித்தான் சென்றுருக்கிறேன். (அமெரிக்கன் விசா இருந்தால் இந்தியர்கள் நேராக இஸ்தான்புல்லில் விசா பெற்றுக்கொள்ளலாம்). அதற்கு என் மனைவி "அது போன மாசம் இது இந்த மாசம்" தொனியில், இப்போது ஈ-விசா மட்டுமே செல்லுபடியாகும் என்று சொன்னார்கள். சரி, பண்ணிவிட்டால் போச்சு என்று ஆன்லைனில் மனு செய்தேன். என் விசா ஒரு சில நிமிடங்களிலும் என் மனைவி விசா அடுத்த நாளும் (சில கேள்விகள் மற்றும் சில ஆவணங்கள்) வந்துவிட்டன.
23 மார்ச். செக்-இன் ஆன்லைனில். விமான நிலையம் சென்றடைந்து, குடியேற்றம் பரிசோதனை அட்டையின் (UAE ID) மூலம், தானியங்கியில் முடித்து, 90 நிமிடம் ஓய்வறையில் (Lounge) கடத்தி, தேவை இல்லாமல் சாப்பிட்டு, பயணியர் ஏறும் இடத்தை அடைந்தோம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநேரம் 10:00: பாதுகாப்பு முகவர் ஆவணங்களை சரிபார்க்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் முதல் முறையாக என் கண் ஒன்றை பார்த்தது. என் விசாவில் ஒரு பெரிய A. மனைவி விசாவில் ஒரு பெரிய B. ஒரே நாட்டுக்காரங்க ஒரே நாட்டுக்கு ஒரே நாளில் ஒரே விமானத்தில். ஆனால் விசா மட்டும் வேறு. “சரியான ஆளுங்கப்பா துருக்கி விசாக்காரனுங்கோ” என்று நினைத்தபடி காத்திருந்தேன்.

பாதுகாப்பு முகவர் என்னை ஒரு மாதிரி பார்த்து ஐயா, நீங்கள் இந்திய கடவு புத்தகம் (Passport ) வைத்து உள்ளீர்கள் ஆனால் உங்கள் விசா நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமகன் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது, மன்னிக்கவும் உங்களை அனுமதிக்க முடியாது என்று கனிவாக ஆனால் திட்டவட்டமாக கூறினார். அப்போது வெட்ட வெளிச்சமாகியது "சரியான ஆளுங்கப்பா" துருக்கிகாரன் இல்லை, நான்தான் அந்த அறிவுஜீவி என்று. என் விண்ணப்பத்தில் குடியுரிமை நாடு என்ற கேள்விக்கு "இந்தியா” என்பதற்கு பதிலாக "குடியிருக்கும் நாடு" என்று தவறுதலாக நினைத்து "UAE" என்று போட்டுவிட்டேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என் அலுவலக நடவடிக்கைகளில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை “சிவப்பு கொடி எச்சரிக்கை” (Red Flags). இந்த விசா விடயத்தில் சிவப்பு கம்பளமே தலை விரித்தாடியது. முதலாக என் விசாவுக்கு ஒரு கட்டணமும் என் மனைவி விசாவுக்கு ஒரு கட்டணமும் கேட்ட போது. மேலும் என் விசாவுக்கு ஒரு ஆவணமும் கேட்காமல் என் மனைவி விசாவுக்கு அமெரிக்கன் விசா நகலும் கேட்ட போதும். ஆனால் என் மூளை “எல்லாம் சரிப்பா" அப்படினு நம்பவைத்து விட்டது. எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதையோ கோட்டைவிட்டுருப்போம். அட சகஜமப்பா? விமானம் ஏறினோமா என்பதுதான் இப்போது முக்கியம். பாதுகாப்பு முகவரிடம், “நான் பலமுறை சென்றிருக்கிறேன்” எடுபடவில்லை. மன்னிக்கவும் தான் பதிலாக வந்தது. விமானம் (EK 123) 10:45 க்கு புறப்பாடு.

இப்போது 10:10. பண விரயம் ஒருபுறம். திரும்பி போய் மாமா மச்சான் எல்லோரிடம் “அதுல பாருங்க ஒரு சின்ன பிரச்சினை” அப்படின்னு மழுப்பனும். ஆனால் என் மனைவி, உங்கள் விசா மட்டும்தானே போங்கு. நான் போய் சுற்றி பார்த்து விட்டு வந்துவிடுகிறேன் என்றார்கள். இப்ப ஜோக் அடிக்கற நேரமா சார்? ஒன்று மட்டும் ஆண்கள் கவனம் கொள்ளுங்கள். தப்பு நம்முடையதாக இருந்தால் (ஏன், இல்லாதபோதும்) மனைவியிடம் மண்டி போடுவது நல்ல குணம். ஒரு நாள் இல்லை ஒரு நாள் ஆமா துருக்கி விஸா பண்ண லக்ஷணம் தெரியாதான்னு ஒரு அவப்பேர் வரும். கவரிமான் தாங்காது.
விமானத்துக்கு வருவோம். உபயோகமில்லாத விசாவை கையில் ஏந்தி செய்வதறியாது நான் கலங்கி நின்றபோது, நம்ம சரத்குமார்/விஜயகாந்த் கலந்த உருவத்தில் (சரத்காந்த், வச்சுக்குவோம்) கம்பீரமான ஒருவர் தோன்றினார். தோரணையில் முகவருக்கு முகவர் என்பது எளிமையாக புலப்பட்டது. எல்லாம் கேட்டறிந்து, கடவு புத்தகத்தை புரட்டினார், பயண சீட்டை, பின், இருவரையும் நோக்கினார். ஐயா நீங்கள் வணிக வகுப்பு (Business Class) பயணி மேலும் அடிக்கடி பயணிப்பவர் (Frequent Flyer in Emirates) ஆகையால் என்ன பண்ண முடியும் என்று பார்க்கிறேன் என்று கூறியதில்லாமல் கைபேசியில் யாரிடமோ உரையாடினார்.

நேரம் 10:15 கடிகாரம் தன் கடமையை செய்துகொண்டிருந்தது. சரத்காந்த் கைபேசியை அணைத்துவிட்டு எங்களை பார்த்து ஒரு புன்னகை வீசினார். சிறிது நம்பிக்கை. இன்னும் 15 நிமிடங்கள் உள்ளது. உடனே மற்றுமொருமுறை விசா மனு செய்யுங்கள், சரியான விவரங்களுடன், துரிதமாக.
பின் மனு செய்த ஆதாரம் வந்தபின் அதன் அடிப்படையில் நீங்கள் ஏற அனுமதிக்கிறேன் என்றார். துர்கியில் இறங்கிய பின், விசா வந்துவிட்டதா என்று உறுதி செய்தபின் குடிவரவு அலுவலகரிடம் (Immigration Counter) செல்லுங்கள். முன்னமே சென்றால் பிரச்சினை வரக்கூடும் என்று அறிவுறுத்தினார்.
நன்றி சொல்லிவிட்டு பையை திறந்து மடிக்கணினிக்கு உயிரூட்டி விசா பக்கம் திறந்து நடுங்கும் கையை ஸ்திரப்படுத்தி மனு பூர்த்தி செய்தபோது 10:25 போல ஆகிவிட்டது. துருக்கி விசா பக்கம், “ஐயா மனு பெறப்பட்டது ஆனால் விசா வரும்வரை பயணம் ஆரம்பித்தால் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு” என்று பக்கத்தில் நின்று பார்த்த மாதிரி பயமுறுத்தினான்.
மனுவின் ஆதாரத்தை பார்த்த சரத்காந்த், "பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்".
இந்த மாதிரி வணிக வகுப்பு, அடிக்கடி பயணிப்பவர் சிலர் காரணமில்லாமல் எரிந்து விழுவார்கள். நீங்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் கனிவாக சிரித்த முகத்துடன் எதிர் கொண்டீர்கள். நீங்கள் “ரொம்பவே நல்லவங்கண்ணு” சொல்லி கை குலுக்கினார்.
சந்தோஷப்படக்கூடிய மனோநிலையில் நான் இல்லை. நன்றி சொல்லி, கைபேசி எண்ணை பரிமாறி விமானம் நோக்கி ஓடினோம். விமான ஓட்டி கியர் போட்டுவிட்டார். பணிப்பெண் கதவில் கை வைத்துக்கொண்டு நிற்கிறார். ஒரு வருத்தத்தையும் நன்றியையும் சொல்லி அப்பாடா என்று அமர்ந்தோம்.

நேரம் 10:53: விமானம் வானில் ஏறியது. ஆனால் வாய் வறண்டு இதயம் படபடத்து நல்ல நிலையில் இல்லை. தண்ணீர் அருந்திவிட்டு ஒரு மலையாள திரைப்படத்தை கண்டேன் (ரசிக்கவில்லை - நல்ல படம்தான், Sudani from Nigeria). உணவருந்தினேன் (ரசிக்கவில்லை - நல்ல உணவுதான்). இறங்கி WiFi வேலை செய்யாமல் சிறிது தடுமாறி, பின் விசா வந்து (துருக்கி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கன் விசா நகல் அனுப்பியபின்) ஒருவழியாக விமான நிலயத்தை விட்டு விடுதி வந்து சேர்ந்தோம். மாலை தக்சிம் சதுக்கம் சென்று செஸ்ட்நட் சாப்பிட்டு, ஏமாற்றுபவர்களை தவிர்த்துவிட்டு வந்து தூங்கினோம்.
அடுத்த 7 நாட்கள் பிஸியோ பிஸி. அப்படி என்னதான் பண்ணினீங்க என்று நீங்கள் கேக்கறதுக்கு முன்பே நான் சொல்லிவிடுகிறேன். அடுத்த பதிவில்.
-சங்கர் வெங்கடேசன்
(சங்கர் வெங்கடேசன் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். பட்டய கணக்காளர். மும்பை, துபாய் என பல்வேறு நாடுகளிலும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ராயல் டச்சு ஷெல் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது துபாயில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆனாலும், தன்னை பயணி என்றே அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பும் அவர், இது வரை 50 நாடுகளுக்கு மேல் பயணித்திருக்கிறார். தனது பயண அனுபவங்களை விகடன் தளத்தில் தொடர்ந்து எழுத உள்ளார்)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.