யட்சன்
##~##

வ்வொரு பெயராகப் படிக்கப்பட, செந்தில் நம்பிக்கை இழந்துகொண்டே வந்தான். ஏழு பெயர்கள் கடந்ததும், தனக்கு வாய்ப்பு இருக்காது என்று முடிவுசெய்து, தொண்டை அடைத்து நின்றான். எட்டாவது பெயராக கே.செந்தில் என்றுஅழைக்கப்பட்டதும், சாட்டையால் தாக்கப்பட்டதுபோல் நிமிர்ந்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஒருவேளை வேறு ஒரு கே.செந்தில் இருந்தால்? பார்வையைச் சுழலவிட்டான். இல்லை. யாரும் போட்டியாகக் கையை உயர்த்தவில்லை.

நானா..? தேர்வாகிவிட்டேனா? அவன் நின்றி ருந்த இடத்தில் மட்டும் திடீரென்று பூ மழை பொழிவதுபோல் ஒரு குளிர்ச்சி. தாங்க முடியாத குதூகலத்தில் இதயம் விம்மியது. பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டவன்போல நெஞ்சை நிமிர்த்தி உள்ளே நடந்தான். உடனே தீபாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று தவிப்பாக இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டான்.

''மத்தவங்கள்லாம் தயவுசெஞ்சு கலைஞ்சு போயிரலாம்...'' என்று அறிவிக்கப்பட, ஏமாற்ற மும் தோல்வியும் சுமந்த பல குரல்கள் ''சார், ஒரே ஒரு சான்ஸ் கொடுத்தீங்கன்னா...'' என்று கெஞ்சின.

கதவைச் சாத்தி உதவியாளர் உள்ளே வந்தார்.

'இன்னொரு ஆடிஷன் இருக்கு... அதுல அடுத்த ரவுண்டுக்கு மூணு பேர் செலெக்ட் ஆவீங்க... காலைல ஆபீஸுக்கு வந்துருங்க.'

பொங்கிய அலை சட்டென்று பூமியில் விழுந்ததுபோல் செந்திலின் கர்வம் மீண்டும் தலையைப் புதைத்துக்கொண்டது. காதுக்குள் 'நீ ஜெயிப்படா!’ என்று தீபா மட்டும் கத்திக்கொண்டே இருந்தாள்.

பாரி, ஈரத் தலையைத் துவட்டிக்கொண்டே கட்டிலில் இறைத்திருந்த பணத்தை எண்ணினான். 8,033. கையிருப்பு ஒருபோதும் இவ்வளவு குறைந்தது இல்லை. கவலை எதற்கு? 10 லட்சத்துக்கான வேலை தருவதாக பூமணி சொல்லிஇருக்கிறானே! மதுரையில் அவனுக்குக் கிடைத்த அதிகபட்சக் கூலியே இரண்டு லட்சம்தான். ஒருவேளை இந்த வேலை மிகக் கடினமானதாக இருக்குமோ? இருக்கட்டுமே... சவால்கள் இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம்?

சுற்றிலும் இருந்த சூப்பர் ஸ்டாரின் படங்களைப் பார்த்தான். 'தலைவா, நீ கூட இருக்கும்போது நான் தோத்ததேயில்ல...' என்று புன்னகைத்தான். தினத்தந்தியில் ஓரமாக எழுதப்பட்ட எண்ணை மட்டும் கிழித்துக்கொண்டு, மேன்ஷ னுக்கு வெளியே வந்தான். எதிர் வரிசையில் இருந்த பொதுத் தொலைபேசியில் பூமணியின் எண்ணுக்கு டயல் செய்தான்.

யட்சன்

மறுநாள்...

பட்டினப்பாக்கம். அரசாங்கம் கட்டிக்கொடுத்த வீடுகள் கடற்காற்றினாலோ, மாறி மாறித் தாக்கிய பருவங்களாலோ களையிழந்து, சோகையாகக் காட்சியளித்தன. சிறு கற்களும் குப்பைகளும் சேர்ந்துவிட்ட மணல் பகுதியில் பூமணியுடன் அமர்ந்திருந்தான் பாரி. மூன்று நாய்கள் குப்பைகளைக் கிளறிக்கொண்டு இருந்தன.

'கைலாசம் குரூப்ல பொறுப்பா இருக்கறவங் களைப் பாக்கப்போறோம்னு சொல்லிட்டு இங்க உக்காரவெச்சிருக்க?' என்று பொறுமை இழந்து கேட்டான் பாரி.

''கிருபாவப் பாக்கறது அவ்வளவு சுலபம் இல்ல... சிக்னல் வரும். அது வரைக்கும் வெயிட் பண்ணணும்.'

'யார் அந்த கிருபா?'

'கைலாசத்தோட முதுகெலும்பு. ஆதிமூலம் பத்தின அத்தனை விவரமும் அவன் குடுப்பான்.'

20 நிமிடங்கள் கழித்து, பூமணியின் போனில் அழைப்பு வந்தது. 'வா...'

தெருவைக் கடந்து, பழமையான ஒரு ஹோட்டலுக்குள் அழைத்துப்போனான் பூமணி. அரைக்கதவு வைத்த வரிசையான அறைகளில் ஒன்றைத் திறந்து பாரியை உள்ளே அனுப்பிவிட்டு, பூமணி வெளியிலேயே நின்றுவிட்டான்.

பாலீஷ் தேய்ந்துபோன மர மேஜையில் கை ஊன்றி உட்கார்ந்து இருந்தான் கிருபா. ஒல்லி. உயரம். வெள்ளை பேன்ட். முழங்கை வரை மடித்துவிட்ட கறுப்பு முழுக்கைச் சட்டை. வலது கையில் இரண்டு மோதிரங்கள். பேப்பர் வெயிட்போல வாட்ச். பார்த்தவுடன் அச்சம் ஏற்படுத்தும்படியான தோற்றம் இல்லை. ஆனால், குத்திக்கிழிக்கும் பார்வை. ஏராள இரைச்சலோடு மின்விசிறி காற்றை வீசியடித்தது.

'பூமணி சொன்னான். வேலை கச்சிதமா இருக்கணும். நாம தாக்கி, அவங்க தப்பிச்சா, நம்ம அத்தனை பேரையும் கொத்துப் பரோட்டா போட்ருவாங்க...' என்று பேசியபோது குரல் சற்றே பெண்மை கலந்து இருந்தது.

'ஆதிமூலத்தைப் பத்தி முழு விவரம் வேணும்.'

'ஒருகாலத்துல ஒண்ணா இருந்தவங்கதான் நாங்க. அவன் அரசியலுக்குப் போனதும், கட்சிக்காரனுக்காக, கைலாசத்தோட தம்பிய நண்பன்னுகூடப் பாக்காமப் போட்டுட்டான். அதுலேர்ந்து மொத எதிரி ஆயிட்டான்' என்று தொடங்கி, பாரியின் கேள்விகளுக்கு கிருபா பதில் சொல்லச் சொல்ல... மனதில் குறித்துக்கொண்டான்.

கடைசியில் கிருபா ஒரு கவரை பாரியிடம் நீட்டினான். 'இதுல அவங்க அத்தனை பேர் போட்டோவும் இருக்கு. 10 நாள்ல, ஆதிமூலத்தோட குலதெய்வம் அங்கயற்கண்ணி கோயில்ல திருவிழா. அப்ப வேற மூடுல இருப்பான். அட்டாக் பண்ண சரியான நேரம்.'

காரணம் புரியாமல், திடீரென்று பாரி மனதில் ஓர் எச்சரிக்கைக் கூச்சல் கேட்டது... 'வேண்டாம், இந்த வேலையை எடுத்துக்கொள்ளாதே!’

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism