Published:Updated:

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

அறிவிழி

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி
##~##

சென்ற வார இறுதியில் பாஸ்டனில் இருக்கும் 'இ மெயில் தமிழன்’ சிவா அய்யாதுரையுடன் வெகு நேரம் பேசினேன். தமிழ், தமிழினம், தமிழகம் என்று பல்வேறு தலைப்புகளில் பேசிவிட்டு தொழில்முனைவு (entrepreneurship) பற்றிப் பேசினோம். சிவா தொடர்ந்து பல நிறுவனங்களை நிறுவி வெற்றி கண்டவர். கணினித் துறை, இயந்திரத் துறை, மருத்துவம் எனப் பல தொழில் வித்தகர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பேசி முடித்த பின்னர் எனக்குத் தோன்றியது இது... 80/90-களில் சிறுகதைகளில் இருந்து, சினிமா வரை 'வேலையில்லாப் பட்டதாரி’,  'முதிர்கன்னி’ போன்ற பதங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. இப்போது இந்தப் பதங்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. சென்ற 10 ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் நேரடி விளைவுதான் இது என்பதைக் கணிக்க முடிகிறது. ஆனால், இதிலும் சின்ன ஆதங்கம் உண்டு. என்னிடம் ஆலோசனை கேட்கும் தமிழ் இளைஞர்கள் பலரும் கேட்கும் கேள்விகள், 'என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும்?’ என்ற கோணத்தில்தான் இருக்கின்றன. 'புதுமையாக்கல் - யாராலும் எந்த இடத்தில் இருந்தாலும் செய்ய முடியும். அதற்கு சிலிக்கான் வேலி பகுதியிலோ, அல்லது எம்.ஐ.டி-யிலோ படித்திருந்தால்தான் முடியும் என்பது அல்ல!’ என்று சொல்லும் சிவாவின் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் நமது சமூகத்தின் மீது தொடுக்கும் சவால்களுக்கு ஒரே வழி... புதுமையாக்கலும் சுய தொழில்முனைதலுமே. இதைப் பற்றி வரும் வாரங்களில் இந்தத் தொடரில் விவாதிக்க, பகிர்ந்துகொள்ளத் திட்டமிட்டு இருக்கிறேன். உங்களது எண்ணங்களை @anton prakashக்கு ட்வீட்டுங்கள்.

சமீப நாட்களில் பிரபலமாகி வரும் 3டி பிரின்டர் பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.  

கணினித் தொழில்நுட்பம் போலவே பிரின்டிங் தொழில்நுட்பமும் கிடுகிடுவென வளர்ந்துகொண்டே இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்னால் டைப்ரைட்டர்போல இடமிருந்து வலமாக ஓடிச் சுழலும் காதிதத்தில் கறுப்பு நிறத்தில் அச்சிடும் டாட் மேட்ரிக்ஸ் வகையறா பிரின்டரில் இருந்து, ஒரு நொடிக்கு நூற்றுக்கணக்கில் பிரின்ட் செய்து தள்ளும் லேசர் பிரின்டர் வரை காகிதத்தில் பிரின்டிங் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.

அறிவிழி

சரி... அதென்ன 3டி பிரின்டிங்? ஈஃபில் கோபுரத்தைக் காகிதத்தில் வரைந்து அல்லது பிரின்ட் செய்து பார்க்கலாம். அது இரண்டு பரிமாணத்தில் இருக்கும். குச்சி, கோந்து போன்றவற்றைச் சேர்த்து ஈஃபில் கோபுரத்தின் மாடலைச் செய்ய முடியும் என்றால், அது 3டி வடிவம். இதுவரை வடிவமைப்பு, கட்டடக் கலை போன்றவற்றில் இருந்தவர்களுக்கு காகிதத்தில் மட்டுமே பிரின்டிங் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. மாடலாக எதையாகிலும் காட்ட வேண்டுமானாலும், அதைத் தங்கள் கார்ட்போர்டு அட்டை போன்ற அடிப்படைப் பொருட்களைவைத்து தங்கள் கைகளாலேயே செய்ய வேண்டும். 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் இந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கொடுக்கிறது.

பிளாஸ்டிக் அல்லது பேப்பர் துகள்களை அடிப்படைப் பொருளாகக்கொண்டு வடிவங்களை உருக்கி, கடினமாக்கியோ அல்லது ஒட்டிவைத்தோ கணினியில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் வடிவை முப்பரிமாணத்தில் உருவாக்கிவிடுகிறது இந்தத் தொழில்நுட்பம். வணிகப் பயன்பாடுகளுக்காக மட்டுமே இருந்த இந்தத் தொழில்நுட்பம், இப்போது நுகர்வோர் பயன்படுத்தும் சாதனங்களாகவும் வர ஆரம்பித்துள்ளது. உங்களுக்கு அருகில் இருக்கும் பயனீட்டாளர் மின்னணுச் சாதனங்களை விற்கும் கடையில் விரைவில் கிடைக்கலாம். திருமணத் தம்பதியினர் எடுக்கும் புகைப்படங்களின் சிலை வடிவங்களைத் தூத்துக்குடி வசீகரன் தனது ஸ்டுடியோ வின் கல்யாண போட்டோ/வீடியோ பேக்கேஜில் சேர்க்கலாம்.

அறிவிழி

முந்தைய 'வருங்காலத் தொழில்நுட்பம்!’ தொடரில் கூகுள் கிளாஸ் பற்றி பல அத்தியாயங்களில் குறிப்பிட்டு இருந்தேன். ஆராய்ச்சி அளவில் இருந்த கூகுள் கிளாஸ் சாதனத்தை கூகுள் நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. உங்களுக்கு இந்தச் சாதனம் வேண்டும் என்றால், கூகுள் வைக்கும் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும். போட்டியின் விதிமுறை இதுதான்: 'கூகுள் கிளாஸ் உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்பதை ட்விட்டரிலோ, கூகுள் ப்ளஸ்ஸிலோ 50 வார்த்தைகளுக்கு மிகாமல் #ifihadglass என்ற ஹேஷ் பதத்துடன் இணைத்து, உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தால், இணைத்துக்கொள்ளலாம். அதிக விவரங்களுக்கு அவர்களது தளத்தின் உரலியைச் சொடுக்குங்கள்: www.google.com/glass/start/how-to-get-one/

'பயனீட்டாளர்களின் ப்ரைவஸியை மதிக்காத மெக்கானிசம் கொண்டது கூகுளின் செயல். உங்களது இ மெயில் ஒவ்வொன்றையும் கூகுளின் தொழில்நுட்பம் படிக்கிறது என்பது தெரியுமா?' என அச்சுறுத்தும் பாணியில் தங்களது இ மெயில் சேவையான Outlook.comயை புரொமோட் செய்யத் துடிக்கிறது மைக்ரோசாஃப்ட்.http://www.scroogled.com/ என்று ஸ்பெஷல் தளம் ஒன்றை நிறுவி, விளம்பரங்கள் கொடுத்து கூகுளுக்குத் திருகு வலி தர எத்தனிக்க முயல்வது புரிகிறது. கூகுளோ, பயனீட்டாளர்களோ கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

 - விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism