Published:Updated:

என் ஊர்

''நாங்கள் உயர்ந்த மனிதர்கள்..!''

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் மணிவண்ணன். நீலகிரி மண்ணின் மைந்தர். தமிழ் சொல்லின் வேந்தர், இயற்கை ஆர்வலர், புதிய 'ழ’ தகிதா பதிப்பாளர்... என பன்திறன் கொண்டவர்!

##~##

'இவ்வளவு உயரமான ஊரில் பிறந்தோமா?’ என்ற கேள்விதான் சமவெளியை நோக்கி முதன்முதலாகப் பயணம் மேற்கொண்டபோது எழுந்தது. இங்கு வாழும் ஒவ்வொருவரின் கேள்வியும் இதுவாகத்தான் இருக்கும். உயர்ந்த இடத்தில் உருவானவை உன்னதமானவை. நீங்கள் மேகத்தை நிமிர்ந்து பார்க்கிறீர்கள்; நாங்கள் குனிந்துதான் பார்க்கிறோம். உண்மையில், நாங்கள் ஆகாயத்துக்கு மேலே வசிக்கிறவர்கள். ஆம், நாங்கள் உயர்ந்த மனிதர்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்

குழந்தைப் பிராயத்தில் இருந்து இன்று வரை நாங்கள் எந்த தேசத்தில் வாசம் செய்தாலும், நீலகிரி எங்களின் குளிர்ச்சித் தாயகம். சோலைகள், தினைக் கொல்லைகள், தேயிலைத் தோட்டங்கள் என்று எங்கள் கண்களை ஆக்கிரமித்த நிறம் பசுமைதான். தினை வகைகளும் காய் கறிகளும் பயிரிடப்பட்ட கொல்லைகளின் பரப்பு குறைந்து பணப் பயிர் கள் ஆக்கிரமித்துக்கொண்டதால், எங்களுக்கான உணவை வாங்கக் கடைகளுக்கு செல்ல நேர்ந்தது. அப்போதெல்லாம் ஆடிப் பட்டம் தேடி விதைப்போம். ஒவ்வொருவருடைய தினைப் புனத்திலும் சிறுவர்கள் காவல் இருப்பார்கள். அந்த பொன் மாலைப் பொழுதுகளும் கருத்த இருட்டு சுவாரஸ்யங்களும் மறக்க முடியாதவை; திகிலானவையும் கூட.  

என் ஊர்

மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படுத்தும் நிலச் சரிவுகளும், கோடைக் காலங்களில் தோலை வறுத்தெடுக்கும் வெயிலின் சூடும், பனிக் காலத்தில் உறைநிலையின் குளிர்ச்சியும் மெய் வருத்தச் செய்தாலும், எல்லாமே எங்களுக்கு வசந்த காலங்களே.  

பொரிகளைச் சிந்தியதைப்போல பனி படர்ந்து இருக்கும் காலங்களில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் காலுறை, தலைக் குல்லாய், உஷ்ண ஆடை உடுத்திக்கொண்டு நிலவுக்குச் செல்லும் விஞ்ஞானிகள்போல் இருப்பார்கள்.      

காலை விழித்ததும் பல் விளக்காமல் எல்லோரும் சுவைக்கும் தின்பண்டம் சூரிய வெளிச்சம். முன்பெல்லாம் எங்கள் ஊரில் நிறையப் பசுக்கள் இருந்தன. ஒவ்வோர் ஊரிலும் தினம் ஒரு வீட்டார் வீதம் மாதம் முழுக்க மாடுகளை மேய்ப்பார்கள். அடிக்கடி ஊருக்குள் சிறுத்தைகள் புகுந்து, மாடுகளை அடித்துச் சாப்பிட்டுவிடும். இந்த பயத்தாலேயே இப்போது எங்கள் ஊரில் பசுக்கள் சொற்பமாகி விட்டன.  

அன்றைக்குச் சரியான சாலை வசதிகள் இல்லை. ஒற்றையடிப் பாதைகள் ஒழுங்காக இருந்ததே பெரிய விஷயம். நடை எங்கள் ஊர் மக்களின் தவிர்க்க முடியாத பணி. ஊரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டால், அவர்களை நாற்காலிகளில் அமர்த்தி பல்லக்குபோலச் சுமந்து செல்வார்கள். அந்தப் பல்லக்கு சிலருக்கு இறுதிப் பல்லக்காகவும் அமைந்துவிடும். இன்றைக்கு நிலைமை தலைகீழ். வாகனங்கள் வாசல் அருகில் வந்து வரவேற் கின்றன.

ஆடிக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மோதி அசுரத்தனமாக வீசும் காற்று, உயர்ந்த மரங்களில் உராய்வதால் எழும் ஓசை குலை நடுங்கவைக்கும். அப்போது எங்கள் வீட்டுக் கூரைகள் பட்டங்களைப்போலப் பறந்ததைப் பார்த்துப் பலமுறை அழுது இருக் கிறேன். இப்படியாக எல்லாச் சூழல்களிலும் வாழப் பழகும் மன உறுதி தந்தது நீலகிரி.

நதி மூலத்தை நாங்கள்தான் தொடங்குகிறோம். எங்கள் மூலிகை நதிகள் எங்களை நனைத்த பிறகுதான் உங்களை நனைக்கும். கற்பிழக்காத காற்று, சீழ் பிடிக்காத நீர், புண்ணாகாத பூமி, பொத்தல் விழாத ஆகாயம், ஜுரம் ஏறாத சூரியன்... என இயற்கைக் கொடைகளை முதலில் அனுபவிக்கிறவர்களும் நாங்கள்தான்!

என் ஊர்

ஆனால், இப்போதெல்லாம் நீலகிரிவாசிகள் சுகவாசிகள். மாதத்தில் இருமுறை தேயிலை பறிக்கப்படும். இடை நாட்கள் வியர்வை சிந்தாமல் விலாசம் தொலைத்த நாட்களே. ஒரு காலத்தில் வார விடுமுறை நாட்களில் வீதிகள் திருவிழாபோல களைகட்டும். இன்றோ வெறுமை மட்டுமே வீதிகளில் உலவிக் கொண்டு இருக்கிறது. மலையில் இருந்து சமவெளியை நோக்கி கல்விக்காகவும், பொருள் தேடலுக்காகவும் அநேகம் பேர் சென்று விட்டதால், ஆட்கள் இல்லாத கிராமங்களே மிஞ்சி இருக்கின்றன. வன அழிப்பால் சடாமுடி வைத்த சைவ முனிவர்களைப்போலக் காட்சி தந்த வனங்கள், இன்று சமண, பௌத்தத் துறவிகளைப்போல மொட்டை அடிக்கப்பட்டு விட்டன.

என்றாலும், எங்கள் அமைதிப் பூங்காவில் எப்போதுமே வன்முறை முளைவிட்டது இல்லை. வறுமையைக் கண்டது உண்டு; வரதட்சணையைக் கண்டது இல்லை. ஊரில் ஒருவருக்குத் திருமணம் என்றால், அந்த மண விழாவை ஊர் கூடி எடுக்கும். சமைப்பது முதல் பரிமாறி எச்சில் இலை எடுப்பது வரையில் ஊராரின் வேலை. அதேபோல, ஒருவர் 'தவறிவிட்டார்’ என்றாலும், நன்காட்டில் வழியனுப்பிவைக்கும் வரை அந்த ஊரின் பொறுப்பு. திருவிழாவும் அப்படியே... ஊர் கூடித் தேர் இழுப்பார்கள். ஆக, பாருக்குள்ளே நல்ல ஊரு எங்கள் ஊரே!

சந்திப்பு: எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்