Published:Updated:

முத்தாச்சி

முத்தாச்சி

முத்தாச்சி

முத்தாச்சி

Published:Updated:
முத்தாச்சி
##~##

ழு நாட்கள்கூட நிலைத்து வேலை பார்க்காமல் ஓடிவிடும் பணிப்பெண்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், 'ஒரே வீட்டில் தொடர்ந்து 70 வருடங்களாக வீட்டுவேலை செய்துவருகிறார் என்பது ஆச்சர்யம்தான்! அந்த அதிசய 'முத்தாச்சி’யைக் காண, ஆவலுடன் கல்லிடைக்குறிச்சிக்குப் போனோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அப்பளத்துக்குப் பெயர் பெற்ற அந்தச் சிற்றூரில், நூறாண்டுகளுக்கு மேலாக 'பங்களா வீடு’ என்று புகழ்பெற்ற பெரிய பழமையான வீடு.

வீட்டுச் சொந்தக்காரர் லட்சுமிநாராயணன் இருந்தார். ''முத்தாச்சி ஊர் கோடி வீட்டுல குடியிருக்கா... காலையில் வீட்டு வேலைகளை முடிச்சுட்டுப் போயிட்டா. கொஞ்ச நேரத்துல வந்துடுவா, நீங்க வெயிட் பண்ணுங்க!'' என்றார்.

''முத்தாச்சி வந்து சேரும் வரை அவரைப் பற்றிச்  சொல்லுங்களேன்...'' என்றோம்.

முத்தாச்சி

''எங்க முத்தாச்சி பெருமையைச் சொல்லணும்னா, அது ராமாயணப் பெரிசு. சுருக்கமா சொல்றேன்... பத்து வயசுலயே எங்க வீட்டுல வேலைக்கு வந்துட்டா முத்தம்மா. நாங்க முத்தாச்சினு செல்லமாக் கூப்பிடுவோம். எங்க அப்பா காலத்தில் இருந்து இருக்கா. என்னைத் தூக்கி வளர்த்திருக்கா. என் பசங்களையும் தூக்கி வளர்த்து, பேரக் குழந்தைகளை யும் வளர்த்து, நாலு தலைமுறைகளைப் பார்த்துட்டா. இப்ப முத்தாச்சிக்கு வயசு எண்பது ஆகுது. ஆனாலும், கொஞ்சம்கூடத் தளர்ச்சி இல்லாம, இன்னிக்கும் சுறுசுறுப்பா வேலை பார்த்துட்டு இருக்கா. கண் பார்வை தெளிவா இருக்கு. கண்ணாடிகூடக் கிடையாது. காது மட்டும் இப்போ கொஞ்ச நாளா சரியாக் கேக்கல.

சொன்னா நம்ப மாட்டீங்க... இந்த எழுபது வருஷமா முத்தாச்சி ஒரு நாள்கூட லீவு போட்டது இல்லை. உடம்பு சரியில்லாம காய்ச்சல் வந்தாக்கூட, வீட்டு வேலைக்கு மட்டும் கரெக்டா வந்துடுவா. நாங்கதான் பார்த்து டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!'' என்றார் லட்சுமிநாராயணன்.

அப்போது முத்தாச்சி வந்துவிட, அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். இயல்பாக அந்த வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தபடி, தன் வெற்றிலைக் கறை ஏறிய பற்க ளைக் காட்டிச் சிரித்துக்கொண்டே பேசினார் முத்தாச்சி.

''என் சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி பக்கம் இருக்கிற 'வைராவிக்குளம்’னு ஒரு சின்னக் கிராமம். என்னைப் பெத்தவங்க விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான்தான் பங்களா வீட்டு வேலைக்காரியா, சின்னப்புள்ளையா இருக்கும்போதே வந்துட்டேன். எனக்குப் பதிமூணு வயசுலயே கல்யாணம் ஆகிருச்சு. அதுகூட இதோ, இவங்க அப்பாரு... அதான் பெரிய சாமி. (லட்சுமிநாராயணனின் அப்பா அனந்த நாராயணனைக் குறிப்பிடுகிறார்!) பார்த்து நடத்திவெச்ச கல்யாணந்தேன். எங்க கல்யாணத்துக்குப் பெறவு, எங்க வீட்டுக்காரருக்கும் இவங்க வீட்லயே மாட்டுவண்டி ஓட்டற வேலை கொடுத்தாங்க. இந்த வீட்டு பெரிய சாமி, வட்டிக் கடை வெச்சிருந்தார். இந்த சின்ன சாமி, ஏதோ ஒரு பேங்க்ல வேலை பார்த்தார். பெரிய சாமிக்கு நாலு பொண்ணு... மூணு பிள்ளை. சின்ன சாமிக்கு மூணு பிள்ளை, ஒரு பொண்ணு. எல்லாரையும் நான்தான் சீராட்டித் தூக்கி வளர்த்தேன். எல்லாருடைய பிரசவமும் இந்த பங்களா வீட்டுலதான். பிரசவ நேரத்துல ரொம்பப் பரபரப்பா இருப்பேன். சாமி புண்ணியத்துல எல்லாமே சுகப் பிரசவம்தான். வீட்டுப் பொம்பளைங்க பிரசவிச்ச பெறகு, என் கைப்பக்குவத்துல குளியல், உடம்பு உருவல் எல்லாம் ஜோரா நடக்கும்.

பெரிய சாமி காலத்துல ரொம்ப சுத்தபத்தம் (ஆசாரம்) பார்ப்பாங்க. நான் வீட்டுக்குள்ள நேர் வாசல் பக்கமா வந்துற முடியாது. பின்பக்கமாத்தான் வருவேன். சின்ன சாமி காலம் வந்ததும் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லே. ரொம்ப சுதந்திரமா வீடு முழுக்கச் சுத்துவேன். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அந்தக் காலத்துல பெரிய சாமி எதிர்க்க நின்னுகூட அவங்க மகனுங்க பேச மாட்டாங்க... அத்தினி பயம். ஆனா, இந்தக் காலத்துல எல்லாம் மாறிப்போச்சு ராசா. யாரும் யாருக்கும் பயப்படாமல் பேசறாங்க... சிரிக்கிறாங்க. எனக்குக்கூட இதுதான் பிடிச்சிருக்கு!

முத்தாச்சி

பெரியசாமி காலத்துல வீட்ல ரேடியோ பொட்டிகூடக் கிடை யாது. கொலம்பியா கிராம போன் ஒண்ணுதான் அலங் காரமா வீட்டுக்கூடத்துல இருக்கும். அதுல தியாகராச பாகவதர், கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் பாட்டெல் லாம் போடுவார். நானும் ஓரமா ஒதுங்கி நின்னு காதாரக் கேட்பேன்... நல்லா இருக்கும்.

யுத்தம் நடந்தபோது (1939-ம் வருஷம்) இந்த ஊர்ல சங்கரராமய்யர்னு ஒரே ஒருத்தர் வீட்லதான் ரேடியோ பொட்டி இருந்தது. அவர் தன் வீட்டு வாசலில் ரேடியோவை வெச்சிடுவார். ஊர் மொத்தமும் அங்கே கூடி யுத்த சேதியைக் கேட்டு 'உச்சு’ கொட்டும்.

நடுவுல ஏழு வருஷம் பேங்க் வேலையா அவங்க பொஞ்சாதி லலிதாம்மாவைக் கூட்டிக் கிட்டு, வேற ஊருக்கு மாற்றலாகிப் போயிட்டாரு சின்ன சாமி. அந்த ஏழு வருஷமும் புதையலைப் பூதம் காத்த மாதிரி, இந்த வீட்டை நான்தான் ஒண்டியாக் காவல் காத்தேன். இந்த வீட்டு மரத்தோட கறிவேப்பிலையைக்கூட யாரையும் பறிக்கவிட மாட்டேன். அவ்ளோ ஜாக்கிரதையாப் பார்த்துப்பேன்.

தீபாவளி, பொங்கல் மாதிரி விசேஷங்கள் வரும்போது, என்னைக் கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போய்ப் பிடிச்சதை வாங்கிக்கச் சொல்வாங்க. அப்பவும் நல்ல நூல் புடைவையாத்தான் வாங்கிப்பேன். பட்டுப் புடைவையை, என் புருஷன் உயிரோடு இருந்த காலத்தில்கூட நான் விரும்பினது கிடையாது ராசா. சின்ன சாமியோட பிள்ளைங்களும் மருமகள்களும் வெளிநாட்டுல இருக்காங்க. அவங்க இங்கே வரும்போது எனக்குன்னு ஃபாரின் பவுடர், சென்ட் எல்லாம் தருவாங்க. இந்தக் கட்டைக்கு பவுடர் எதுக்கு? சென்ட் எதுக்கு? இல்லே... செலவு செய்யப் பணம்தான் எதுக்கு? எல்லாத்தையும் கொண்டுபோய் என் பிள்ளை, பேரன், பேத்திககிட்டதான் தருவேன்.

முத்தாச்சி

பங்களா வீட்டுல என்னை வேலைக்காரிதானேனு ஒதுக்காம, எல்லா முக்கியக் குடும்ப விஷயங்களுக்கும் என்கிட்டேயும் யோசனை கேட்டுத்தான் செய்வாங்க. மாசம் நாலணா சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். காபி, டிபன், சாப்பாடெல்லாம் இங்கேதான். ஆனா, எனக்குச் சாப்பாட்டைவிட காபி குடிக்கறதுதான் ரொம்பப் பிடிக்கும். அப்பப்போ கேட்டுக்கிட்டே இருப்பேன். லலிதாம்மாவும் முகம் சுளிக்காமப் போட்டுத் தரும்... அந்தக் காபி ருசியே தனிதான் போ!

இந்த பங்களா வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா, துடிச்சுப்போயிடுவேன். எத்தனையோ தடவை இந்த வீட்டுக் குழந்தைகளுக்கு உடம்புக்கு வந்தபோது, சாமிக்கு நேர்ந்துக்கிட்டு கோயிலுக்குப் போயிட்டு வந்திருக்கேன். பத்துப்பாத்திரம் தேய்க்கறது... இத்தே பெரிய வீட்டைப் பெருக்கிச் சுத்தமா வைக்கறது... தோட்டத்துச் செடி, கொடிகளுக்குத் தண்ணி ஊத்தறது... புடைவை, துணிமணி துவைச்சுப்போடறது... ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டறது மாதிரி எல்லா வேலையும் செய்வேன்.

எனக்கு ஒரே பிள்ளை... இப்ப அவன் அப்பளக் கடையில வேலை பார்க்கிறான். அவனுக்கு ஒரு பெண், ஒரு பிள்ளைனு சின்னக் குடும்பம்தான். மருமக ரொம்ப நல்லவ. என் பேத்திக்கு இதயத்துல ஓட்டைனு மெட்ராஸுக்கு டாக்டர்கிட்ட அனுப்பியிருக்கு. சின்னசாமிதான், என் பேத்தி வைத்தியத்துக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சிருக்கார். என் கஷ்டத்தைச் சகிச்சுக்க அவரால முடியாது ராசா.

சின்ன சாமிக்கே இப்ப எழுபத்து மூணு வயசு ஆயிடுச்சு. பெரிய சாமி பிள்ளைகள்ல, இப்ப உயிரோட இருக்கிறது இவர் மட்டும்தான். 'பங்களா வீட்டு வேலைக்காரி’னு இப்பவும் திமிராத்தான் ரோட்டுல நடக்கேன். லட்ச ரூபா கொட்டித் தரேன்னு கூப்பிட்டாலும், வேற வீட்டு வேலைக்குப் போனதில்ல. போக மாட்டேன். காரணம், இவங்க என் மேல காட்டற அன்பு, பரிவு, பாசம்தான். என் கடைசி ஊர்வலச் செலவைக்கூட இந்த சின்ன சாமிதான் செய்யப்போறார்... அதுதான் எனக்குப் பெருமை. என் உசிரு இந்த வீட்லதான் போகணும்... அதுதான் என் ஆசை!''

- விஜயா கண்ணன்

படங்கள்: பாரதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism