யட்சன்
##~##

வரைத் திறந்து கிருபா கொடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினான் பாரி. மூன்றாவது புகைப்படத்தை எடுத்ததும் அவன் கண்களில் திடீர் வெறி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'இது... இது யாரு?' என்று கேட்டான்.

'இவன் ஆதிமூலத்தோட வலது கை. பேரு நாகு. ஏன் கேக்கற?'

'பாண்டிச்சேரில ரூம் பாயாக் கிடந்த என்னை மதுரைக்கு அழைச்சிட்டுப் போய் உருவாக்கினவரு தனபாலு. அவரை சுட்டுக் கொன்னவன் இவன். வெளியூர்ல இருந்து வந்து போட்டுட்டுப் போயிட்டான்னு சொன்னாங்க. ரொம்ப நாள் கழிச்சு, இவன் மூஞ்சியை மலையப்பன் காட்டினான்.'

'நாகு, லோகுனு அண்ணன் தம்பியாச் சேர்ந்துதான் தொழில்ல இறங்குவாங்க. இவங்க ரெண்டு பேரைத் தாண்டி ஆதிமூலத்தை நெருங்கறது அத்தனை சுலபமில்ல' என்றான் கிருபா.

'தேதி முடிவானதும், எனக்கு ஒரு கார் வேணும். சென்னைய முழுசாத் தெரிஞ்ச ஒரு டிரைவர் வேணும்.'

'அனுப்பறேன்...'

'பேசுன பணம் ஆதிமூலத்துக்கு... நாகுவும் லோகுவும் இலவசம்!' என்று கழுத்தைச் சீவுவதுபோல் காட்டிவிட்டு, பாரி எழுந்தான்.

திருமலைப் பிள்ளை சாலையிலிருந்து வெட்டிப் பிரிந்தது, அந்தக் குறுகிய தெரு. 17 கார்கள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பங்களாவின் பின்புற அவுட் ஹவுஸில் ஆடிஷன். பக்கத்து காம்பவுண்டின் தென்னை மரங்கள் இங்கே நடப்பதை எட்டிப்பார்த்தன. பின்னணியில் சிறு இரைச்சலுடன் இடுப்பு உயர டிபன் கேரியர்கள் கழுவப்பட்டுக்கொண்டு இருக்க.. செந்தில் வியர்த்த முகத்தைத் துடைத்துக்கொண்டு, தயாரானான்.

'என் பேரு குணா. அசோஸியேட் டைரக்டர்...' என்று அறிமுகம் செய்துகொண்டவன் கல்லூரி மாணவன்போல் இருந்தான். காட்சியை விளக்கினான்.

'உங்க பல வருஷக் கனவு நிறைவேறிடுச்சு... அந்த சந்தோஷமான சேதியை அம்மாகிட்ட சொல்றதுக்காக வீட்டுக்கு ஓடறீங்க... கதவைத் திறந்தா, கூடத்துல அம்மா பொணமாப் படுத்திருக்காங்க. சுத்தி உறவுக்காரங்க... அக்கம்பக்கத்து ஜனங்க... திகைச்சுப் போய்ப் பார்க்கறீங்க... சந்தோஷம் கரைஞ்சு, துக்கம் அழுத்துது... அப்படியே உடைஞ்சு அழறீங்க... இதான் சீன். ரெண்டு நிமிஷம் மனசுக்குள்ள ஒத்திகை பார்த்துக்குங்க.. டயலாக் கிடையாது. உணர்ச்சியை மட்டும் ஒழுங்காக் காட்டினாப் போதும்.'

யட்சன்

செந்தில் கண்களை மூடி, தனக்குள் காட்சியை ஓடவிட்டான். முதல் படத்துக்கு ஒப்பந்தமாகி, அந்த மகிழ்ச்சியைச் சுமந்துகொண்டு தன் வீட்டுக்குள் ஓடுவதாகவும், அங்கே பாய் விரித்து அம்மாவைக் கிடத்தியிருப்பதாகவும் கற்பனை செய்ததும், உணர்ச்சி கொந்தளித்து வெளியில் பாய்ந்தது.

'கட்..!' என்று சொல்லப்பட்டபோது,ஹேண்டி கேமில் பதிவுசெய்த இளைஞன், பிரமிப்பில் இருந்து விடுபட்டு, 'சூப்பராப் பண்ணீங்க!' என்றான். செந்திலின் கன்னங்களை நனைத்து நிஜக் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

'தேங்க்ஸ்!'

'தமிழ் சினிமாவுல ஏற்கெனவே ஒரு செந்தில் இருக்காரு. செலெக்ட் ஆனா பேரை மாத்திப்பீங்களா..?'

'நிச்சயமா...' என்று செந்தில் அவசரமாகத் தலையசைத்தான். 'செலெக்ட் ஆயிட்டேனா?'

'மூணு பேர்ல நீங்க இருக்கீங்க... புக் ஆயிட்டா, தொடர்ந்து முப்பது நாள் அவுட்டோர்ல தங்க வேண்டியிருக்கும்.'

குணா பேசப் பேச... வெற்றி பெற்றுவிட்ட சந்தோஷம் செந்திலைத் தொற்றிக்கொண்டது.

'போனை எப்பவும் சார்ஜ் போட்டு, ஆன்லயே வெச்சிருங்க.. ஃபுட்டேஜை டைரக்டர் பார்த்துட்டு முடிவு சொல்வாரு. கால் வரும்...  சென்னைலதான இருப்பீங்க?'

'ஆமா, மிட்நைட் போன் பண்ணாக்கூட, ஓடி வந்துருவேன்.'

செந்தில் வெளியே வந்தான். உடனே தீபாவுக்கு போன் செய்தான்.

'தீபா... கனவு நிறைவேறப்போவுது!'

'சொன்னேன்ல?'

'இரு, அதுக்குள்ள வாழ்த்து சொல்லாத. இன்னும் ஒரு கட்டம் தாண்டணும்.'

'தாண்டிடுவடா!' என்று தீபா ரிசீவர் வழியே அழுத்தமாக முத்தமிட்டாள்.

மேற்கு மாம்பலத்தில், ரயில்வே பாலத்தை ஒட்டியிருந்த ஒரு குறுக்குத் தெரு. அரைகுறையாக நின்ற ஒரு சுவர் மீது பாரி அமர்ந்திருந்தான். எதிரில் பெரிய மைதானம். ஒரு பக்கம் கட்டுப் பாடு இன்றி வளர்ந்திருந்த காட்டுச் செடிகள். இன்னொரு பக்கம் சமப்படுத்தப்பட்டு புழுதி பறக்கும் கிரிக்கெட் பிட்ச். அதில் ஆறு இளைஞர் கள். மைதானத்தின் இன்னொரு மூலையில் சுண்ணாம்பு அடித்த ஒற்றைப் பெரிய அறை.

'மாநகராட்சி இளைஞர் உடற்பயிற்சி மையம்’ என்று தகர போர்டு. திடகாத்திரமான சிலர், இன்னும் அதிரடி பலம் பெற, தண்டால் எடுத்தார்கள். புல்அப்ஸ் செய்தார்கள். பளு தூக்கினார்கள்.  பாரியின் தேர்ந்த கண்கள், அவர்களில் நாகுவைச் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டன. மார்பை விரித்து விரித்து அவன் உடற்பயிற்சி செய்து முடித்ததும், டவலை நீட்டினான் அவனுடைய தம்பி லோகு.

பாரி தன் பாக்கெட்டில் கைவிட்டு, சுருள்கத்தியைத் தொட்டுப் பார்த்தான்.

- தடதடக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism