Published:Updated:

ஃபேஸ்புக் போராளி ஆவது எப்படி?

ஃபேஸ்புக் போராளி ஆவது எப்படி?

பேங்க் அக்கவுன்ட் இருக்கிறதோ இல்லையோ, இப்போவெல்லாம் நம் தமிழர்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது. பல்லு விளக்கியதைப் பத்து வரிகளில் ஸ்டேட்டஸாகப் போடும் சில அற்ப ஆன்மாக்கள் உலாவும் இதே ஃபேஸ்புக்கில், ஒரு ஃபேஸ்புக் போராளியாக நீங்கள் உருவாவது எப்படி என்பதற்காகச் சின்னதாய் ஒரு கோர்ஸ்.

ஃபேஸ்புக் போராளி ஆவது எப்படி?

முதலில் காலை வணக்கம். அலுவலகம் போனதும் சேகுவேரா முகம் தெரியும் கோப்பையில் காபி நுரைத்துப்பொங்கும் படத்தைப் போட்டு தூய யுனிகோடு தமிழில் 'காலை செவ்வணக்கம்...’ என்று தட்டுங்கள். சிட்டுக்குருவி பற்றிய தலையங்கம், மன்மோகன் சிங்கின் மந்தமான பொருளாதாரக் கொள்கை, பசி பட்டினியைப் பொருட்படுத்தாத ப.சி பட்ஜெட் எனப் பத்திரிகைகளில் வரும் அலசல் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் அடித்து அப்படியே ஸ்டேட்டஸ் ஆக இறக்கிவைக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வக்கோளாறில் அம்புட்டையும் கட் அண்ட் பேஸ்ட் பண்ணினால், முதலுக்கே மோசம் பாஸ். நீங்க காப்பி பேஸ்ட் போராளி என்பது தெரிஞ்சு மானம் மல்லாக்கப் பறக்கும். எடுக்கவோ தொடுக்கவோங்கிற கதையா அழகா அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் கட் பண்ணி ஒரு பாரா எழுதினாலே போதும். எந்தக் காரணத்தைக்கொண்டும் ரெண்டு பாரா எழுதி காலையிலேயே எழவைக் கூட்டிறாதீங்க. ஏன்னா, இப்போது எல்லாம் மொபைல் ஃபோன்லயே ஃபேஸ்புக் பார்க்கிற வங்கதான் அதிகம். நீங்கபாட்டுக்கு பத்து பாராவை ஸ்டேட்டஸா ஆர்வக்கோளாறுல இறக்கிவெச்சீங்கன்னா டக்குனு 'மொக்கை போடுறானே சவத்து மூதி’னு கடந்து போயிருவாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்து தமிழ் வெப்சைட்களை ரெகுலரா ஒருவாட்டி காலையில எந்திரிச்சதும் படிச்சிருங்க. அதில்

ஃபேஸ்புக் போராளி ஆவது எப்படி?

வரும் வித்தியாசமான செய்திகளைக் க.க.க.போ பண்ணி உங்கள் ஸ்டைலில் உல்டா அடிங்களேன். 'பெண் கிடைக்கலை... பணத்துக்கும் எருமைக்கும் பெண்ணை விலைக்கு வாங்கும் ம.பி மாப்பிள்ளைகள்’னு ஒரு மேட்டர். அதை நீங்க எப்படி எழுதணும்னா 'இந்தியாவில் பெண்களின் விகிதாச்சாரம் படிப்படியாகக் குறைந்து அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் பெண் சிசுக் கொலைகள், கருக்கலைப்பு, வரதட்சணைக் கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் பலியான பெண்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதன் விகிதம் 90 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது என்கிறது அதிர்ச்சியூட்டும் சர்வே ஒன்று’ என நீங்களே கண், காது, மூக்கு வைத்து அதிர்ச்சியூட்டும் 'இல்லாத சர்வே’யைப் போட்டு கூகிள் இமேஜில் ஒரு பெண் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து இருக்கும் சில்-அவுட் போட்டோவையோ பெண்ணின் கையில் விலங்கு போடப்பட்டு ரத்தம் ஒழுகும் காட்சியோ போட்டு இந்த மேட்டரை ஷேர் செய்தால், ஃபேஸ்புக்கில் இதற்காகவே உலாவும் சகப் போராளிகளால் அதிகம் லைக் பண்ணப்படும்.

சில நேரங்களில் முதல் ஸ்டேட்டஸாக எதைப் போடலாம் என தடுமாற்றம் வரலாம். ரொம்பவெல்லாம் மெனக்கெட வேண்டாம். எஃப்.எம். ரேடியோவில் யாழ் சுதாகர் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிப் பாட்டுப் போடுவது காதில் விழுகிறதா... கூகிள் இமேஜ் தேடுபொறியில் 'புக்ஸ் வித் ஸ்டூடண்ட்ஸ்’ எனத் தேடுங்க... தலைகீழாக மண்டையைப் பிய்த்துக்கொண்டு படிக்கும் பள்ளிப் பிள்ளைகளின் போட்டோக்கள் கடகடவெனக் கொட்டுகிறதா? அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு 'புத்தகங்களே கவனமாக இருங்கள், எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்’ என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் ஓப்பனிங்கோடு கல்வி முறையை 'சாட்டை’ படத்து வசனங்களால் சாடுங்கள். என்னது, 'சாட்டை’ பட வசனங்கள் தெரியாதா? 'சாட்டை பட விமர்சனம்’ எனத் தேடுபொறியில் தேடினால், கொட்டும். உங்களுக்காகவே மாய்ந்து மாய்ந்து படத்தின் வசனங்களை தியேட்டரில் இருந்தே எழுதும் சென்னிமலை சி.பி. செந்தில்குமார் போன்றோர் இருக்கிறார்கள். அது போன்ற வலைப்பூக்களை நல்லா ஈயடிச்சான் காப்பி அடிச்சுக்கங்க. அப்புறம் என்ன? அசத்துங்க.

தலைகீழா நின்னாவது சுடுதண்ணீரை வெயில்ல குடிச்சுட்டு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடும் நிஜப் போராளிகளுக்கு நட்புக் கோரிக்கை கொடுத்திருங்க. அப்புறம், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். ஓசியில வடை சுடுறது எப்படி? ஷேரிங் நல்லதுன்னு டீச்சர் சொல்லித்தரலையா? அதுபோல நல்ல விஷயம் எவனாச்சும் எங்கிட்டாவது ஷேர் செஞ்சா கவனமா அதை நீங்க கொத்திக்கிட்டு வந்து, உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கும் 50 பேருக்காவது ஷேர் பண்ணுங்க. அப்படி செஞ்சீங்கனாதான், வெளில இருந்து உங்க புரொஃபைலைப் பார்க்கிறவங்களுக்கு இந்த மனுஷன் இப்படியா 24 மணி நேரமும் மத்தவங்களுக்காக உழைச்சுக்கிட்டும் சிந்திச்சுக்கிட்டும் இருப்பான்னு  உயர்வா நினைப்பாய்ங்க. நீங்க ஷேர் செஞ்சுட்டு சாட்டிங்ல கீதாவோட கடலை போடுறதெல்லாம் அவிய்ங்களுக்குத் தெரியவாப் போகுது?

அப்புறம் என்ன பட்டையக் கௌப்புங்க... குட்டையக் குழப்புங்க... ஃபேஸ்புக் போராளியாக வாழ்த்துகள். சாருக்கு ஒரு சே குவேரா தேனீர் சட்டை பார்சேல்ல்ல்!

-ஆர்.சரண்