Published:Updated:

பட்ஜெட் - 'சிதம்பர' ரகசியம்!

பட்ஜெட் - 'சிதம்பர' ரகசியம்!

ளினமான அரசியல்வாதி ப.சிதம்பரம். நடையில் மட்டுமல்ல... பேச்சிலும் அப்படித்தான். எதிரிகளைக்கூட மென்மையாகக் கையாள்வார். அதே நேரத்தில் தீர்க்கமாகவும் முடிவுகள் எடுப்பார். ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் நரசிம்மராவ் முடிவெடுத்தபோது, அதனை ஏற்காமல் கட்சியை விட்டு விலக வேண்டும் என்று மூப்பனாரைத் தூண்டியவர் ப.சிதம்பரம். அதே மூப்பனார், ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் இறங்கியபோது, அவரிடம் இருந்தும் விலகி, ஜனநாயகப் பேரவைத் தொடங்கி தனியாகப் போய்விட்டார். தனது முடிவில் எப்போதும் உறுதியாய் இருக்கக்கூடியவர் அவர். அவரைப் பொருளாதாரம் அறிந்தவர்கள், ''வலிக்காமல் வரி போடுபவர்'' என்பார்கள். அதுதான் இந்த ஆண்டும் நடந்துள்ளது.

பட்ஜெட் - 'சிதம்பர' ரகசியம்!

 அளவுக்கு மீறிய விலைவாசியாலும் வாங்க முடியாத அளவுக்கு நிதிச்சுமையாலும் இருந்த மிடில்கிளாஸ் மனிதர்கள், இந்த முறை

ப.சிதம்பரத்தைத்தான் பரிதாபமாகப் பார்த்தார்கள். தேர்தல் வேறு வருகிறது, அதற்காகவாவது கருணை காட்டுவார் என்று யோசித்தார்கள். சிவகங்கையில் அவரும் வெற்றி பெற்று மறுபடி டெல்லிக்குப் போக வேண்டுமே என்றுகூட எதிர்பார்த்தார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத, பற்றற்ற மனிதராக தன்னை ப.சிதம்பரம் காட்டிக்கொண்டார்.

''நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்'' என்று அவர் தன்னுடைய வட்டாரத்தில் சொல்லிவந்தார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இந்திரா, ராஜீவ், சோனியா என்று அவரது வயதுக்கேற்ற ஆட்களுடன் அரசியல் நடத்தியவர் ப.சி. இப்போது டெல்லியில் ராகுல் ஆட்சி வந்துவிட்டது. தனக்கான மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், இத்தோடு டெல்லியில் இருந்து மூட்டையைக் கட்டிக்கொள்வதுதான் சிறந்தது என்று அவர் முடிவெடுத்தார். இரண்டாவது, மகன் கார்த்தி சிதம்பரம் கொடுக்கும் நெருக்கடி. அப்பாமார்களே தொடர்ந்து ஜெயித்துக்கொண்டு இருந்தால் மகன்கள் எப்போது போட்டியிடுவது, ஜெயிப்பது, மந்திரி ஆவது? கடந்த முறையே எம்.பி. தேர்தலில் நிற்க வேண்டும் என்ற கோதாவில் கார்த்தி இறங்கிவிட்டார். ஆனால் ப.சிதம்பரம் போட்டியிடுவதால், ஒரே குடும்பத்தில் இரண்டு சீட் ஒதுக்க காங்கிரஸ் கட்சியால் முடியாது. சட்டமன்றத் தேர்தலில் மகனை நிறுத்தலாம் என்று சிதம்பரம் நினைத்தார். ஆனால், தன்னுடைய தகுதிக்கும், திறமைக்கும், அறிவுக்கும், அனுபவத்துக்கும், ஆற்றலுக்கும் டெல்லி பாலிடிக்ஸ்தான் ஓ.கே. என்று கார்த்தி உறுதியாக இருந்தார். விட்டுக்கொடுப்பதைத் தவிர ப.சிதம்பரத்துக்கு வேறு வழி இல்லை. எனவே, தான் மீண்டும் தேர்தலில் நிற்கவேண்டும், ஜெயிக்க வேண்டும், மந்திரியாக ஆக வேண்டும் என்கிற எந்த ஆசையும் இல்லாமல் 'பற்று அற்று’ போட்டிருக்கிறார் பட்ஜெட்!

தன்னைப்பற்றி கவலைப்படாவிட்டாலும் கட்சியைப் பற்றி, தனது மகனைப் பற்றியாவது ப.சிதம்பரம் கவலைப்பட்டிருக்க வேண்டும். அவர்தான் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனித்து முடிவெடுப்பவர் ஆயிற்றே!

- முகுந்த்