Published:Updated:

''குரோர்பதின்னாரு, கோடீஸ்வரன் ஆயிட்டாரு!'

''குரோர்பதின்னாரு, கோடீஸ்வரன் ஆயிட்டாரு!'

பிரீமியம் ஸ்டோரி

நீங்கள் மதுரைக்காரராக இருந்தால், சமீபகாலமாகப் பழங்காநத்தம் ஏரியாவில் காரணமே இல்லாமல் காலை நேர டிராஃபிக் ஏற்படுவதைக் கண்டிருப்பீர்கள். குறிப்பாக வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் சாலையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அங்கே கூட்டம் கும்மும். அந்தக் கூட்டத்துக்குக் காரணமான (ஆ)சாமியைக் காணும் ஆவலோடு சென்றோம். 'மனிதன் பாதி-அழுக்கு பாதி கலந்து செய்த கலவை நான்’ என்பதுபோல் இருந்தார். நான்கு பேர்கள் மட்டும் 'பக்தி மயக்கத்தில்’ இருந்தார்கள். கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக உட்கார்ந்திருந்த அவர்களைப் பார்த்து, புரியாத பாஷையில் 'தஸ்புஸ்' என்று ஏதேதோ சொன்னார் அந்த அழுக்கு மனிதர். சிலரைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்லெடுத்து எறியாதக் குறையாக விரட்டுகிறார். அவர்கள் எல்லாம் கெட்டவர்களாம்.

''குரோர்பதின்னாரு, கோடீஸ்வரன் ஆயிட்டாரு!'

சாமியிடம் பேட்டியெடுக்க முயன்றோம். அவர் பேச்சில் ஒரு எழவும் புரியவில்லை. பக்கத்தில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் அவரைப்பற்றி விசாரித்தோம். "ரெண்டு, மூணு வருஷமா இந்த ஆளு இங்கதான் சார் இருக்காரு. சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல கல்லு மேல உட்கார்ந்துக்கிட்டு சாக்கடைக்குள்ள காலைவிட்டு ஆட்டிக்கிட்டு இருப்பாரு. யாராவது இரக்கப்பட்டுப் பணம் கொடுத்தா, வாங்க மாட்டாரு. டீ, காபி, வடை அவ்வளவுதான். ஹிந்திதான் பேசுவாரு. திடீர்னு ஒரு ஆளைப் பார்த்து, குரோர்பதினு சொன்னாராம். சரியா ஒரு மாசத்துல அந்த ஆளு கோடீஸ்வரன் ஆகிட்டானாம். புத்தம்புது ஃபார்ச்சூன் கார்ல பொண்டாட்டி புள்ளைகளோடு வந்து இவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினவரு, குடும்பத்தை ரோட்டுல இறக்கிவிட்டுட்டு, இந்த ஆளை மட்டும் ஒரு ரவுண்ட் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்தாராம். எல்லாம் செவிவழிச் செய்திதான். அப்போது இருந்தே, 'நாமளும் கோடீஸ்வரன் ஆகிட மாட்டோமா'னு கூட்டம் கூடிக்கிட்டே இருக்குது'' என்றவர்கள் அழுக்குச் சாமியின் தீவிர சிஷ்யரான சுபாஷ் சந்திரபோஸ் என்ற ஆட்டோ டிரைவரின் அட்ரஸையும் கொடுத்து அனுப்பினார்கள்.

முதலில் விடாப்பிடியாகப் பேச மறுத்தவர், "நாங்களும் அவருடைய பக்தர்கள்தான். தயவுசெய்து சொல்லுங்க" என்று கெஞ்சியதும், தன் பர்ஸில் இருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து, உள்ளங்கையில் வைத்துக்கொண்டு முணுமுணுத்தார். (மச்சமுனியிடம் உத்தரவு கேட்கிறாராமாம்!). அந்த வெள்ளைத்தாளை எட்டிப்பார்த்தேன். தப்புத்தப்பாய் ஏ, பி, சி, டி எழுதி இருந்தது. ஒருவழியாகப் பத்து நிமிடங்களுக்குப் பிறகு உத்தரவு கிடைத்ததும் வாய் திறந்தார்.

"இது சாமி எனக்காக எழுதிக்கொடுத்த யந்திரம். அவரோட இயற்பெயர் அமர்சிங்னு சொல்றாங்க. ஆனா அவரை மச்சமுனின்னு கூப்பிடுவோம். அவருக்கு ஜப்பான், மராத்தி, தமிழ், இந்தி, தெலுங்குனு 18 மொழிகள் தெரியும். அத்தனையையும் கலந்து பேசுவதால்தான் மானிடப் பதர்களுக்கு அது புரியிறதில்லை(!?).

''குரோர்பதின்னாரு, கோடீஸ்வரன் ஆயிட்டாரு!'

மச்சம்னா மீன்னு அர்த்தம். சதா தண்ணீரிலேயே வாழும் மீன் குளிக்கிறதையோ மல, ஜலம் கழிக்கிறதையோ பார்த்திருக்கீங்களா? அதுமாதிரிதான் மச்சமுனி சாமியும். ஆரம்பத்தில, இடுப்பு வரைக்கும் ஜடாமுடியும் நீளமான தாடியும் வெச்சிருந்தார். மனநிலை பாதிக்கப் பட்டவர்னு யாரோ என்.ஜி.ஓ-க்காரங்க தூக்கிட்டுப்போய் மொட்டை அடிச்சுட் டாங்க. அதைவிடக் கொடுமை, அவரைக் குளிக்கவெச்சு, அழுக்கு டிரெஸ்ஸையும் மாத்திட்டாங்க. இதெல்லாம் பெரிய பாவம். ஆறு மாசமாகத் துவைக்காத அவரோட பேன்ட்டை எனக்குக் கொடுத்தார். அதைப் பூஜை அறையில வெச்சிருக்கேன். மல்லிகை, சந்தனம், குங்குமம், விபூதி வாடைதான் வரும்'' என்று மெய் சிலிர்க்கிறார்.

இப்பத் தெரியுதா, ஏன் நாட்டில பள்ளிக் கூடங்களோட எண்ணிக்கையைவிட சாமியார்கள் எண்ணிக்கை அதிகமா இருக்குனு!

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு