Published:Updated:

''நானும் விகடனும்!''

இயக்குனர் லிங்குசாமி

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''யோவ், எங்கய்யா விகடன்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சார்... கீழே படிச் சுட்டு இருக்காங்க சார்.''

''யார் அது? காலையில வரும்போது என் டேபிள்ல இருக்கணும்னு சொல்லிருக்கேன்ல... இனிமே, ரெண்டா வாங்கித் தொலையேன்.''

வெள்ளிக் கிழமை காலை வரும்போது என் டேபிள்ல விகடன் இல்லைன்னா... பயங்கரமாக் கோபம் வரும். அது... எங்கேயாவது வரச் சொல்லிட்டு, லவ்வர் வராம வெயிட் பண்றப்போ வர்ற கோபம். 'கீழ படிச்சுட்டு இருக்காங்க சார்’ங்கிறதைக் கேட்டா, ஏதோ நம்ம ஆளை இன்னொருத்தன் தள்ளிட்டுப் போயிட்ட மாதிரி டென்ஷன் ஆகும். ஏன்னா, இத்தனை வருஷங்களில் எனக்கும் விகடனுக்குமான தொடர்பு அவ்வளவு லவ்வபிள்!

''நானும் விகடனும்!''

வாழ்க்கையில் என்னை முன்னெடுத்துட்டுப் போக ஹெல்ப் பண்ண விகடன் எனக்கு அறிமுகமானது... 'பின்’னெடுக்கும்போது. அப்போ ஸ்கூல் முடிஞ்சா, எங்க மளிகைக் கடையில் பொட்டலம் கட்றதுக்கு வர்ற பழைய புத்தகங்களுக்கு எல்லாம் 'பின்’ எடுக்கிறதுதான் என் வேலை. அப்படிப் பழைய விகடன்களும் வரும். எனக்குள்ளேகிடந்த ஒரு கிரியேட்டர் எட்டிப் பார்த்தது அப்போதான். அண்ணனுக்கெல்லாம் ஓ.பி. அடிச்சுட்டு, நைஸா விகடனைப் படிக்க ஆரம்பிச்ச நாள்லதான் ஆரம்பிச்சது எங்களுக்குள்ளே இப்போ வரைக்கும் அடங்காம இருக்கிற இந்த கெமிஸ்ட்ரி!

எங்க குடும்பத்துல வீட்டுக்கு விகடனைக் கொண்டுவந்த முதல் தலைமுறை நான்தான். அப்பா, அண்ணன்கள் வரை எங்கள் பசிக்கும் தேவைகளுக்குமே, உழைப்பையும் உடம்பையும் தின்னக் குடுத்திட்டிருந்த ஒரு பரம்பரையில், வெளி உலகத்தை எட்டிப் பார்த்தது நானும் என் தம்பி போஸும்தான். அதுக்குப் பாலம் போட்டது விகடன் மாதிரியான புத்தகங்கள். +2 படிக்கும்போதுதான் சொந்தமாக் காசு குடுத்து விகடனை வீட்டுக்கு வாங்கி வந்தேன். அப்போ படிச்ச ஜோக்ஸ், கவிதைகள் எல்லாம் எனக்கு வேற ஒரு உலகத்தைத் திறந்துவெச்சது. வெட்டவெளில ஒரு பூ பூக்கிற மாதிரி, எங்கேயோ நமக்குள்ளே கிடக்கிற ஒரு படைப்புக்கான இன்ஸ்பிரேஷனை அந்தத் தருணங்கள்தான் வெளியில கொண்டுவந்திருக்கணும். குறிப்பா, விகடனின் சிறுகதைகள், இன்னிக்கு நான் ஆறு படங்கள் பண்ணிட்டேன். ஒவ்வொரு தடவையும் ஒரு கதை பிடிச்சுட்டா, ஸ்க்ரீன் ப்ளேவில் எவ்வளவு முடியுமோ... அவ்வளவு விளையாடணும்னு உழைப்பேன். அதுதான் என் ஸ்பெஷல்னு நினைக்கிறேன். இதுக்குக் காரணம், ஆரம்பத்துல நான் பார்த்த படங்களும், விகடன்ல படிச்ச சிறுகதைகளும்தான்.

20 வருஷம் ஆச்சு. 'நாகூர் வண்டி’, 'மௌனத்தின் அலறல்’ 'ஈங்கிவனை யான் பெறவே’, சுஜாதாவோட 'ஓலைப் பட்டாசு’ன்னு அப்போ என்னைப் பாதிச்ச சிறுகதைகளை இப்பவும் வரிவிடாமல் சொல்வேன். கற்றதும் பெற்றதும், ஹாய் மதன், மிஸ்டர் எக்ஸ் தொடங்கி இப்போ செழியனோட உலக சினிமா வரை விகடன்ல நான் கற்றதும் பெற்றதும் நிறைய.

என்னை மாதிரி முதல் தலைமுறையா முட்டி முளைச்சு வர்ற ஏராளமானவங்களுக்கு விகடன் ஒரு நல்ல வாத்தியார்... நல்ல நண்பன்!

அங்கே இங்கே ஒளிஞ்சு ஒளிஞ்சு ரசிச்சுட்டிருந்த பொண்ணு, அவளே வந்து 'ஐ லவ் யூ’ சொன்னா எப்படி இருக்கும்... அப்படித்தான் இருந்தது... விகடன்ல முதன்முதல்ல என் கவிதை வந்தப்போ!

பொதுவா, கிரியேட்டர்ஸுக்குப் பெரிய சந்தோஷம்... அங்கீகாரம்தான். இப்பவும் நம்ம ஸீனுக்கு தியேட்டர்ல கிடைக்குற கைதட்டலுக்கு ஈடா ஒரு சந்தோஷம் வேறு ஏதும் உலகத் தில் இல்லை. அந்த சந்தோஷமும் பேராவலும் தான் நம்மளை நல்ல படைப்பாளியா வெச்சி ருக்கும். இந்த டேஸ்ட்டை எனக்குக் காட்டினது என் கவிதைகள் விகடன்ல பிரசுரமான நாட் கள்தான். கும்பகோணம் காலேஜ்ல மேல் பட் டன் ரெண்டைக் கழட்டிவிட்டு சுத்திட்டு இருந்த  அடாவடிக் கவிஞன் நான். 'விகடன்ல ஒரு கவிதை வந்துட்டாத் தெரிஞ்சுரும் நாம யார்னு!’ங்கிற நினைப்புல எழுதிட்டே இருப் பேன். ஒருநாள், 'உங்கள் கவிதை பிரசுரத்துக் குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது’ன்னு ஒரு கார்டு. அடுத்த வாரமே விகடன் காம்ப்ளிமென்ட் காப்பி, 30 ரூபா மணியார்டர். அந்த மணியார் டர்ல கையெழுத்துப் போட்டப்போதான் ஃபர்ஸ்ட் டைம் என்னை நான் ஒரு பெரிய மனுஷனா உணர்ந்தேன். அந்த புக் இப்பவும் என் பொக்கிஷம்!

'இஸ்திரி போடும்
தொழிலாளியின் வயிற்றில்
சுருக்கம்’
என்கிற அந்தக் கவிதையை இப்போ நான் சொல்றதுக்குக் காரணம், பத்தாயிரத்துச் சொச்சம் தடவை சுஜாதா சார் பாராட்டி எழுதுற அளவுக் குப் பிரபலமான அந்தக் கவிதைதான், வெங்கடேஷ் சார்ட்ட நான் அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்ததுக்கும் காரணம்.

''நானும் விகடனும்!''

என் முதல் படம், 'ஆனந்தம்’. தவிக்கத் தவிக்கச் சேர்த்துவெச்ச அத்தனை கனவுகளும் கை கால் முளைச்சு கடைக்கு வருது. சந்தோஷமும் வேதனையுமா... அது பிரசவம். படம் ஹிட். நமக்கு விகடன் மார்க் எவ்வளவுங்கிறதுதான் பெரிய தவிப்பு. ஏன்னா, என் கணிப்பும் விகடன் மார்க்கும் எப்பவுமே 99% சரியா இருக்கும். எந்தப் படம் பார்த்தாலும் 'குறிச்சுக்க... இதான் விகடன் மார்க்’னு கரெக்ட்டா சொல்லிருவேன். அப்படி 'ஆனந்தம்’ படத்துக் கும் மனசுக்குள் மார்க் போட்டுவெச்சிருந்தேன். விமர்சனம் வந்துச்சு. வரிக்கு வரி படத்தைக் கொண்டாடி எழுதி இருந்தாங்க. இப்போ வரைக்கும் என் பயணத்துக்கு அந்த விமர்சனம் பெரிய பூஸ்ட். ஆனா, மார்க் நான் நினைச்சதைவிட ரெண்டு மார்க் கம்மி. இப்போ வரைக்கும் என்னோட படத்துக்கு மட்டும் நான் நினைச்ச¬தவிட ஒண்ணு ரெண்டு குறைவாதான் போடுறார் வாத்தியார். அதுல கொஞ்சம் வருத்தம்தான். சரி, அந்த அலைவரிசையையும் சீக்கிரம் ஈக்குவல் பண்ணுவோம்னு 'வேட்டை’க்குக் கிளம்பறேன்.

எல்லாம் தாண்டி விகடன் விமர்சனமும் மார்க்கும் தர்ற உற்சாகத்துக்கு எத்தனை எத்தனை இதயங்கள் தவிக்குதுன்னு எனக்குத் தெரியும். தட்டுறதும் குட்டுறதுமா அந்த விமர்சனத் துக்குள் ஒளிஞ்சிருக்கிற கலைப் பாசம் ரொம்ப நேர்மையானது!

'ஆனந்தம்’ வந்ததும் விகடன்ல எங்க 'திருப்பதி மளிகை’க் குடும்பப் படத்தோட வந்த பேட்டி என்னோட ஃபேமிலி ஆல்பத்துல மறக்க முடியாத பக்கம். அதே மாதிரி 'ரன்’ வந்த டைம், முக்கியமான இளம் இயக்குநர்களைச் சந்திக்கவெச்சு ஒரு கட்டுரை வந்தது. ரா.கண்ணன் பண்ணியிருந்தார். பாலா ஆபீஸ்ல நான், சேரன், தரணி, சுசி கணேசன்னு ஒரு டீமோட மீட்டிங். அது அந்த வாரம் கவர் ஸ்டோரி. அந்த சந்திப்பை எப்பவும் மறக்க முடியாது. அப்போ தொடங்கி இப்போ வரைக்கும் விகடன்ல வர்ற என் ஒவ்வொரு எழுத்தையும் பேட்டியையும் பாதுகாக்கிறேன். எங்கேயோ வெளிநாட்ல இருந்தாக்கூட, வெள்ளிக் கிழமை காலையில யாராவது ஒரு மேனேஜர், விகடனை எனக்கு மொபைல்ல படிச்சுக் காட்டி ஆகணும். எனக்கு ஒரு வாரம் முடியுதுங்கிற கணக்கே விகடனை வெச்சுத்தான்.

என்னோட அசிஸ்டென்ட்ஸ்கிட்டே அடிக்கடி சொல்வேன், 'என் படம் விகடன் மாதிரி இருக்கணும்’னு. கமர்ஷியல், இலக்கியம், காமெடி, சென்டிமென்ட்னு விகடன்தான் எனக்கு கரெக்ட்டான பேக்கேஜ். ஸ்ரீதேவியில இருந்து ஐஸ்வர்யா ராய் வரைக்கும் ஒவ்வொரு டைம்ல ஒரு ஹீரோயின் தகதகன்னு இருப்பாங்கள்ல... அப்படி விகடன் ஒரு எவர்கிரீன் ஹீரோயின். பொக்கிஷம்ல இருந்து ஃபேஸ்புக் வரைக்கும் பழமைக்கும் புதுமைக்குமான பாலம். நாங்க ஒவ்வொரு தடவையும், அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எடுக்கும்போது டீம்ல புது ரத்தம் பாயணும்னு நினைப்போம். வர்றவன் எடுத்துட்டு வர்ற புது தாட்ஸ், டெக்னோன்னு அடுத்த ஜெனரேஷனுக்கு நம்மை நகர்த்தணும். அப்படி, 'மாணவ நிருபர் திட்டம்’ மூலமா தமிழ்நாடு முழுக்க எங்கெங்கோ இருந்து வர்ற புதுப்புது இளைஞர்கள்தான் விகடனோட அல்டிமேட் அசெட். எங்கேயோ தேனி, கும்பகோணம் சைடுல உள் காட்டுல ஷூட் பண்ணிட்டு இருப்போம். 'சார், நான் விகடன் ரிப்போர்ட்டர், உங்க படத்தைப்பத்தி சொல்லுங்க’ன்னு ஏதாவது கிராமத்துப் பையன் வந்து நிற்பார். அப்புறம் எங்கியோ ஒரு ட்ரெய்ன் டிராவல்ல மீண்டும் சந்திக்கும்போது, பரபரப்பான அரசியல் நிருபராப் பட்டையைக் கிளப்பிட்டு இருப்பார்.  அதே பையன்தான்... ரெண்டே வருஷத்தில் ஆச்சர்யப்படுத்துவார். இந்த எனர்ஜி, இந்த வளர்ச்சிதான் விகடன் ஸ்பெஷல். மொத்தமா விகடனைப் பத்தி ஒரே வரியில் சொல்லணும்னா... 'ரஜினி பாதி... கமல் பாதி’!