Published:Updated:

அதிகரித்து வரும்...

அதிகரித்து வரும்...

அதிகரித்து வரும்...

அதிகரித்து வரும்...

Published:Updated:
அதிகரித்து வரும்...
##~##

''சாமி! ஒரு வாரமா தலை பாரமா இருக்கு... ஊசி, மாத்திரை போட்டுப் பார்த்தும் ஒண்ணும் சரிப்படலை'' என்பதிலிருந்து, ''சாமி, கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சு... இதுவரைக்கும் ஒரு புழு பூச்சியைக்கூடக் காணோம்'' என்பது வரை பக்தகோடிகளின் தேவை எதுவானாலும் விதவிதமான வழிகளில் தீர்வு சொல்லும் ஆன்மிக அட்வைஸர்கள் இப்போது சென்னையில் தறிகெட்டு அதிகரித்திருக்கிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 நாளிதழ்களிலும் சுவர்களிலும் பெரிய சைஸ் விளம்பரமெல்லாம் தந்து தூள் பரத்திவரும் இவர்களைப் பற்றி ஒரு கட்டுரை தயாரிக்க இறங்கிய நமக்குத்தான் எத்தனை அனுபவங்கள்... ஒவ்வொருத்தர் பற்றியும் விரிவாகச் சொல்ல ஆரம்பித்தால் எப்போது முடிப்பது... ஆங்காங்கே தொட்டுக்கொண்டுபோகிறோம். வாசகர்களும் 'பயபக்தி’யுடன் பின்னால் வரலாம்!

திருவல்லிக்கேணி பகுதியில் குறுகலான தெருவில் ஒரு டஞ்சன் வீட்டில் அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் ஒரு சாமியார் அருள்பாலிக்கிறார் என்று கேள்விப்பட்டுப் போயிருந்தோம். அப்பப்பா... அந்தச் சாமியாரின் ட்ரீட்மென்ட்டை நேரில் பார்த்தால் கல் நெஞ்சக்காரர்களும் கதிகலங்கிப்போவது உறுதி!

அதிகரித்து வரும்...

தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டதும் கண்களை மூடி யோசித்துவிட்டுக் கொதித்துப்போகிறார் அந்த ஜடாமுடிச் சாமியார். படக்கெனக் கண்களைத் திறக்கிறார். எதிரே பவ்யமாக நிற்கும் பக்தரின் முகத்தில் 'பொளேர்’ என்று ஓர் அறை கொடுக்கிறார். எகிறி விழும் பக்தரை எழுந்துவரச் சொல்கிறார் உரத்த குரலில். தட்டுத்தடுமாறி எழுந்து வருபவருக்கு ஓங்கி ஓர் உதை... மறுபடியும் சுவரில் மோதித் தரையில் உருள்வார் பக்தர்.

இதுதான் ஜடாமுடிச் சாமியார் கொடுக்கும் அதிர்ச்சி ட்ரீட்மென்ட். சோர்வாகிவிட்டால் (தான் மட்டும்) சுடச்சுட சிங்கிள் டீ குடித்துவிட்டு மறுபடி யும் தனது உதைபடலத்தைத் தொடருவார் சாமியார். கைகால்கள் சோர்வுஅடைந்தபின் சவுக்கை எடுத்து விளாச ஆரம்பிப்பார். நாளரு கூட்டமும் பொழு தொரு கும்பலுமாக வளர்ந்துவருகிறார் இந்த ஜடாமுடி. கேட்கப் பரிதாபமும் ஒருவித விரக்திச் சிரிப்பும் வெளிப்பட்டாலும் என்ன செய்ய... கும்பல் வருகிறதே!

வண்ணாரப்பேட்டை சாமியார் தனது 'ஆன்மிக க்ளினிக்’கை நடத்தும் இடம் சுடுகாடு. நேரம் நள்ளிரவு. கிட்டத்தட்ட சுடுகாட்டையே தனது கஸ்டடியில் வைத்திருக்கும் சுடுகாட்டுச் சாமியாருக்குச் சொந்த ஊர் தென்காசியாம். காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவது, உடைந்த 'இல்வாழ்க்கை’யை மீண்டும் ஒட்டவைப்பது உட்பட சகலவிதமான கோளாறுகளையும் களைந்துவிடுவதாகக் கூறிக்கொள்ளும் இவரது முக்கிய வேலை, 'காதலர்களைச் சேர்த்துவைப்பது’!

'காதலிக்கும் பெண் கண்டுகொள்ளவில்லை என்றால், பெண்ணின் ஜாக்கெட் அல்லது பெண் உபயோகிக்கும் இன்னபிற பொருட்களுடன் இந்தச் சுடுகாட்டுச் சாமியாரிடம் சென்றால், அடுத்த வாரமே அந்தப் பெண் குட்டி போட்ட பூனை மாதிரி காதலனையே சுற்றிச் சுற்றி வருவாள்’ என்று இங்கே உறுதி தரப்படுகிறது. ''லோக்கல் எம்.எல்.ஏ., ஆளும் கட்சி அமைச்சர்கள் முதலான ஏகப்பட்ட வி.ஐ.பி-க்கள் போலீஸ் உயர் அதிகாரிகள் எல்லாமே நம்ம ரெகுலர் பக்தர்கள்தான்'' - சுடுகாட்டில் இரவில், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் கண்கள் பளபளக்க நம்மிடம் பெருமையாகக் கூறிச் சிரிக்கிறார். அண்மையில் இவரது சமூக சேவையைப் பாராட்டி அமைச்சர்கள் நாவலர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஒரு விழாவில் இவருக்குப் பொன்னாடை போர்த்தி மாலை போட்டிருக்கிறார்கள்.

பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் பலர் கண்ணை மூடிக்கொண்டு போவது 'ரெட்ஹில்ஸ்’ சாமியாரிடம். திடுக்கிடும் பரிகாரம் செய்கிறார். இந்தச் சாமியார்பற்றி 'ஃபர்ஸ்ட் நைட் ஸ்பெஷலிஸ்ட்’ என்றே அந்த ஏரியா மக்கள் பேசிக்கொள்கிறார்கள். கல்யாணமானதும் புதுமணத் தம்பதியின் வீட்டுக்கு உடனடியாக இவரை அழைக்க வேண்டும். முதலிரவு நடக்கப்போகும் அறையில் இவர் ஒரு விசேஷ பூஜை நடத்துவாராம். அதன் பிறகு தம்பதி தங்கள் முதலிரவைக் கொண்டாடினால் பிள்ளைப்பேறு உறுதியாம்.

அம்பத்தூர் பகுதியில் அசத்தலாகத் தொழில் நடத்திவரும் ஒரு சாமியாருக்குப் பூர்வீகம் ராமநாதபுரம். இவரிடம் ஒரு விநோதப் பழக்கம்... ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் 15 ஆடுகளின் கழுத்தை அறுத்துப் பொங்கிவரும் ரத்தத்தை அப்படியே உறிஞ்சிக் குடிப்பார்.

''நான் 1973-ல் இங்கு வந்து குடியேறினேன். பரம்பரை பரம்பரையா இந்தத் தொழில்தான் செஞ்சு வர்றோம். பெரிய பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்ட கேஸ்களெல்லாம் என்னிடம் வந்து குணமாகிப்போயிருக்கின்றன'' என்கிறார், ரத்தம் குடிக்கும் இந்தச் சாமியார். தன்னை நாடி வரும் நோயாளிகளைப் பத்ரகாளி சிலைக்கு முன்பு ஈர உடலுடன் உட்காரவைத்து நான்கு மணி நேரம் மந்திரம் சொல்வாராம் இவர். மந்திரத்திலேயே சகலவிதமான நோய்களும் மறைந்துவிடுகிறதாம்.

இவரைப் பேட்டி காண நாம் சென்ற சமயம், இவருக்கு எதிர் வீட்டின் முகப்பில் 'இங்கு பில்லி சூனியம் நீக்கப்படும்’ என்று போர்டு மாட்டிக்கொண்டு இருந்தார்கள். அதுபற்றிக் கேட்டபோது, ''அவன் என் சிஷ்யன்தான். தலைக்கு மேலே வளர்ந்துட்டானில்லே. என்கிட்டேயிருந்து தனியாப் பிரிஞ்சு போயிட்டான்'' என்றார் லேசான அதிருப்தியுடன்.

பூந்தமல்லிக்கு அருகே அத்துவானக் காட்டுப் பிரதேசத்தில் அம்மன் கோயில் ஒன்றில் இருந்து குறிசொல்லும் சாமியாரிடம் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அலைமோதுகிறார்கள். இரவு 11 மணிக்குமேல்தான் இவரது ஆட்டம் சூடுபிடிக்கும். வரிசையாக நிற்கும் பக்தர்களிடம் உச்சஸ்தாயியில் அலறிக்கொண்டே வருவார். தங்கள் கேள்விகளைக் கூறியதும் குறி சொல்லத் தொடங்குவார்.

''சாமிகிட்ட நிஜத்தைத்தான் சொல்லணும். பொய் சொன்னா, படீர்னு அடிச்சுத் தூக்கி எறிஞ்சுடும்'' என்று குறி கேட்க வருபவர்களை முன்கூட்டியே பயமுறுத்திவைத்துவிடுவார்கள் சீடர்கள். அதேபோல், குறி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே எதிரே நிற்கும் பக்தர்களில் குறிப்பிட்ட சிலருக்குச் சாமியாரிடம் இருந்து 'தர்ம அடிகள்’ சகட்டுமேனிக்குக் கிடைக்கும். இந்தத் தர்ம அடி ஒரு கட்டத்தில் வெறியாகவே மாறி, பல பக்தர்கள் ரத்தக் காயத்துடன் திரும்ப... 'பக்தி’யை மிஞ்சி 'பயம்’ தலையெடுத்து ஆடி... சாமியாருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது கொஞ்சம் டல்லடிக்கிறதாம்!

அதிகரித்து வரும்...

இப்படியெல்லாம் கூச்சல் போட்டு, அடித்து, அதட்டி, ரத்தம் குடித்து, பக்தர்களைப் பயமுறுத்தும் சாமியார்கள் மத்தியில் சூளைமேடு ஏகானந்தம் சாமிகள் அஹிம்சாவாதி! பக்தர்கள் தருகிற தட்சணையைப் பெற்றுக்கொண்டு எந்த வியாதி என்றாலும் விபூதி கொடுத்தே அனுப்பிவிடுகிறார். இவரைத் தங்கள் குடும்ப டாக்டராகவே பாவிப்பார்கள் பலர்!

இவரது கடந்த காலம் சுவாரஸ்யமானது. பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் நாடகக் குழு ஒன்றில் 'பையா’ என்ற குரலுக்கு 'உள்ளேன் ஐயா’ என்று குதித்து ஓடிவந்து நிற்கும் 'காமெடி’ சித்திரக்குள்ளன்தான் இப்போதைய சாமியார். நாளடைவில் 'நாடக வாழ்க்கை’ வெறுத்துப்போய் 'ஆன்மிகத்துக்கு’ மாறிவிட்டாராம்! ''என்னங்க... எல்லா நோய்க்கும் விபூதி மட்டுமே கொடுக்கறீங்க..? எப்படிங்க குணமாகும்?'' என்று நமக்குத் தோன்றிய சந்தேகத்தை இவரிடம் கேட்டோம். மர்மமாகச் சிரித்துவிட்டு சுவரில் இருந்த சுவிட்ச் போர்டைக் காட்டினார்.

''இது என்ன... ஃப்ளக் பாயின்ட். அதாவது, ரெண்டு ஓட்டை. இதிலிருந்து வயர் போட்டு கரன்ட் இழுத்தா ஃபேனையும் ஓடவைக்கலாம்... லைட்டையும் எரியவைக்கலாம். ரேடியோவைப் பாடவைக்கலாம். டி.வி-யில் நியூஸ் கேக்கலாம். அதே மாதிரிதான் நான் கொடுக்கிற விபூதியும்'' என்று தத்துவம் சொல்ல, புல்லரித்துப்போனது நமக்கு. யாரோ ஒரு மகான் சொன்ன உதாரணத்தின் 'உல்டா’ இது என்பது வேறு விஷயம்!

இதுவரை சொல்லப்பட்ட உதாரணங்களை மட்டும்வைத்து 'பக்தர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் எல்லாமே ஆண்கள்தான்’ என்று அவசர முடிவுக்கு வர வேண்டாம். சாமியார்களுக்கு நிகராகப் போட்டி போட்டு வளர்ந்துவரும் சாமியாரிணிகளும் இருக்கிறார்கள் சென்னையில். பெரம்பூர் - திரு.வி.க. நகர்வாசியான சாமியாரிணி ஒருவர் தன் வீட்டிலேயே கருமாரியம்மன் கோயிலைக் கட்டி பூஜை செய்துவருகிறார். இவரது இயற்பெயர் சகுந்தலா.

''இருபத்துநாலு வருஷமா மக்களுக்குச் சேவை செஞ்சுவர்றேன் நான். முதலில் என் வீட்டுக்காரர்தான் காளியம்மனின் அருள் பெற்றிருந்தார். அப்புறம்தான் ஒரு நாள் என் முன்னாடி காட்சி தந்த அம்மன், எனக்கு அருள் கொடுத்துட்டு மறைஞ்சுட்டா'' என்று நம்மிடம் கூறும் சாமியாரிணி, 'பொம்பளைங்க சமாசாரங்களை’ டீல் பண்ணுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாம்!

பொதுவாகவே, சாமியார்கள் ஆடு, கோழி போன்ற ஜீவராசிகளின் தலையை வெட்டி ரத்தத்தைச் சிதறவிடுவதெல்லாம் ஸ்பீல்பெர்க் ஸ்டைலில் ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்குத்தான்! அடிக்கடி சாமியார்களைச் சந்தித்து தங்கள் சொத்துக்களையே இழந்து நிற்கும் பிரபலங்களும் (முன்னாள்!) உண்டு. சொத்துக்களைப் பிடுங்குவது மட்டுமல்ல... அதற்கும் ஒரு படி மேலே போய் சென்னையில் உள்ள ஒரு லாட்ஜில் 10 வருடங்களுக்கும் மேலாக பெர்மனென்ட் ரூம் போட்டுத் தங்கி வரும் ஒரு சாமியார், ஏகப்பட்ட பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டிருப்பதாகவும் நமது விசாரணையில் தெரியவருகிறது. ஒரு முறை தங்களிடம் வருபவர்களை மறுபடி மறுபடி வரவழைக்க மனோவசியம் செய்யும் கலையைக் கற்றுவைத்திருக்கும் சாமியார்களும் உண்டு.

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவர்கள் ரகத்துக்கு ஒரு சாம்பிள்தான். சாம்பிள்களுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்!

- ஜி.கௌதம், கண்பத்
படங்கள்: கே.ராஜசேகரன்

''நான் சிகரெட் குடிக்கறேனே... நாத்தம் வருதா பாரு?''

னது அதிரடிக் கருத்துகளால் கடந்த சில வருடங்களில் பரவலாகப் புகழ்பெற்று வருபவர் யாகவா முனிவர். இவரை 'சாமியார்’ என்று சொன்னால் கடுங்கோபம் வருகிறது. ''நிறையப் பேர் சாமியார்னு சொல்லி ஏமாத்தறான். எல்லாமே போலி... அயோக்கியன். ஏமாறாதே. இந்த உலகத்துல இன்னும் வாழற புண்ணிய ஆத்மா - உண்மையான சாமியார் ஒருத்தர்தான். காஞ்சிப் பெரிய பெரியவர்தான் அவர். அறிவுஞானம், ஆத்மஞானம் ரெண்டும் உள்ளவர். அவரைத் தவிர மற்ற எவன் சாமியார்னு சொல்லிக்கிட்டாலும் நம்பாதே'' என்பது இவரின் முக்கிய உபதேசம்.

அதிகரித்து வரும்...

சென்னை மேடவாக்கத்தில் உள்ள யாகவா முனிவரின் இல்லம் அலையஸ் ஆசிரமத்துக்குப் போனோம். வேட்டி, துண்டு சகிதம் அமர்ந்திருந்த முனிவர் நம்மை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.

கையில் வில்ஸ் ஃபில்டர் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. ''என்ன முனிவர் புகை உடுறானேன்னு பாக்கறியா? என்கிட்ட பாசாங்கு கிடையாது. எல்லாரும் சிகரெட் குடிச்சா, புகை நாத்தம் அடிக்கும். ஆனா, நான் சிகரெட் குடிக்கறேனே...ஏதாவது நாத்தம் வருதா பாரு. இல்லையே? ஏன்? ஆராய்ச்சி பண்ணு. கண்டுபிடி'' என்றார் அசத்தலாக!

தொடர்ந்து சீரியஸாகப் பேச ஆரம்பித்தார் யாகவா முனிவர். ''நான் பல விஷயங்களை அப்பப்ப சொன்னேன். யாரும் நம்பல. ஆனா, அதெல்லாம் நடந்தது. இப்பவும் நான் சொல்றேன் கேட்டுக்க... 19.4.93 ஆரம்பிச்சவுடனேயே உலகத்துல பேரழிவுகள் உண்டாக ஆரம்பிச்சிடுச்சு. 2007 வரை இது தொடரும். இடைப்பட்ட காலத்தில் உலகம் எங்கும் பூமி அதிர்ச்சி, மதக் கலவரம், பஞ்சம் எல்லாம் தலைவிரித்தாடும். கோயில் குளங்களை இடி, மின்னல் தாக்கும். தங்கம் கிடைக்கும், தான்யம் கிடைக்காது. 1993-க்குப் பின் பெண்கள் தெருவில் செல்ல முடியாது. ஆணும் பெண்ணும் பார்த் துக்கொண்ட உடனேயே நாள், நட்சத்திரம் பார்க்காமல் மரத்தடியில் திருமணம் செய்துகொள்வார்கள். மனிதன் காட்டுமிராண்டியாகிப் பிணம் தின்பான். பள்ளிகள், நீதிமன்றங்கள் மூடப்படும். பறக்கும் தட்டுகளினால் பூமி மிகவும் துன் புறும். கடைசியில் 2007-க்குப் பின்பு காலம் மாறும். தர்ம ராஜ்யம் ஏற்படும். உலகெங்கும் ஒரே மதம் வரும். இந்தியா, சீனா, ஜப்பான் மூன்று நாடுகளும் உலகத்துக்கே பிச்சை போடும்'' என்றார் யாகவா!

- நமது நிருபர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism